கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! நாள் # 54

17/05/2020, ஞாயிறு

நண்பகல் மணி 12 : 30

 

3ம் ஊரடங்கின் கடைசி நாள்.

முதல் மற்றும் இரண்டாம் ஊரடங்குகள் பிரதமரால் அறிவிக்கப்பட்டதால் அது மிகக் கடுமையாக இருந்தன.  நரகத்தின் வாசனை இந்தியா முழுக்க வீசியது.  ஆனால், அது மக்கள் நலனுக்காக எனச் சொல்லப்பட்டதால் மக்கள் பற்களை இறுக்கக் கடித்தபடி நிம்மதி பெருமூச்சுக்காக காத்துக் கிடந்தனர் !

ஆனால், தப்லிக் மாநாட்டிற்கு போய் வந்தவர்களுக்கும், அவர்களைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே தொற்று வரும் எனச் சகதியை பூச விரும்பியவர்களே சேற்றுக் குழிக்குள் சிக்கியதைப் போல், இந்த இரண்டு ஊரடங்கிற்கு அப்புறம்தான் தொற்று வெறி பிடித்ததைப் போல், ஆள் தராதரம் பார்க்காமல் அனைவருக்கும் பரவியது !

மக்களை இறுக்கப் பூட்டி வைத்தது அனைத்தும் வீணாய்ப் போனது.  காரிருளில் முக்காடு போட்டுக்கொண்டு வந்து மூன்றாவது ஊரடங்கை ரகசியமாக யாரோ அறிவித்துச் சென்றார்கள்.  ஆனால் அது ஊரடங்கிற்குரிய இலட்சணத்திலில்லாமல் பல தளர்வுகளுடன் தொள தொளவென இருந்தது.  அதன் பின் இன்னும் உக்கிரம் பிடித்தது கோவிட் 19 !

ஆமாம், தரவுகளைச் சரி பாருங்கள்.  மே 1 க்கும் மே பத்துக்கும் இடையே ஐந்து மடங்கிற்கும் மேலாக தொற்றாளர்களின் எண்ணிக்கை  அதிகரித்துப் போனது.   மரணமடைபவர்களின் எண்ணிக்கையோ விரியன் பாம்பு கடித்து ஏறும் நஞ்சைப் போல் வெகு வேகமாக ஏறியது !

தடாலடியாக, ” வாங்க இனி பொத்திக் கிடந்தா வேலைக்காகாது, தொற்றுடன் ஒட்டிப் பழகுவோம் ” என அழைத்து, டாஸ்மாக்கை மே ஏழன்றுத்  திறந்தார்கள் !

இப்படி தத்தக்கா பித்தக்கா ஊரடங்குக்கு என்ன மரியாதை இருக்கப் போகிறது ?  பத்தாவது வகுப்பு தேர்வுக்கான நாளையும் இதனால்தான்  அறிவித்தார்கள்.  இதற்கிடையே புதுமையான நான்காவது ஊரடங்கும் இருக்கு, அப்படியே உங்களுக்கு 20 லட்சம் கோடி பேக்கேஜ் பரிசென்று தேனை நஞ்சில் கலந்துக் கொடுத்தார் !

அது ஏன் நஞ்சு என்று காணப் போகிறீர்கள்.  இந்தப் பதிவோடு இந்தத் தொடரை கண்டிப்பாக நிறுத்திவிடுவது என்பதே திட்டம்.  ஆனால் 54 வேண்டாம், அதை 55 என இழுத்து, கடைசிப் பகுதியில், எஞ்சிய நாட்களின் கூத்துக்களைச் சேர்க்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்.  வீட்டுச்சிறை உண்மையில் மூன்றாவது ஊரடங்கு தொடங்கிய போதே ஓரளவு பலருக்கும் தளர்ந்தது.  வண்டியில் சுற்றினால் பிடிக்கவில்லை, பறிமுதலும் செய்யவில்லை.  மளிகை, காய்கறிக் கடைகளின் விற்பனை நேரமும் நீட்டிக்கப்பட்டதால், நெரிசல் பேரளவு குறைந்துப் போனது.  கசக்கும் உண்மை என்னவெனில் நுகர்வு பெரிதும் துவண்டுவிட்டது !

நடுவண் அரசின் நிதியமைச்சர் அந்த இருபது லட்ச ரூபாய் பேக்கேஜின் இறுதி அறிவிப்பைத் தர வந்தார்.  ஏனோ அந்தக் கூட்டத்தொடர் பெரும் ஏமாற்றத்தையும், சலிப்பையும் தந்திருந்ததால் பார்க்க மனமொப்பவில்லை.  ஆனாலும், கடைசிமுறை என்கிற பொறியில் சிக்கிவிட்டேன் !

ஒரு சில பொதுத்துறைகளைத் தவிர அனைத்தையும் தனியார் மயமாக்கப் போகிறோம் என்ற அவர் அறிவிப்பு, அதிகாரத் திமிரில் புளிச்சென்று நம் மீது காறி உமிழந்ததற்கொப்பாக இருந்தது.  ஏமாற்றத்திலும், விரக்தியிலும் அந்தக் கையாலாகதவர்கள் மீது காட்டுத்தனமாக கோபமெழுந்த நேரத்தில், நேர்மாறாக அதேக்  கோபத்தை மக்கள் மீதும், காங்கிரஸ் மீதும் அந்தம்மா காண்பித்தார்.  தங்களின் கையாலாகா வெற்றுத்தனத்தை இப்படி காட்டிக்கொடுக்கிறார்களே எனக் கிளர்ந்த சற்றும் அறமில்லாச் சீற்றமது !

கேள்வி – பதில் நிகழ்ச்சியில், அன்று காலை புலம் பெயர் தொழிலாளர்களுக்கிடையே ராகுல் அமர்ந்துப் பேசியது போல் அவர்களுக்கு ஆதரவாக நீங்கள் ஏதும் செய்யவில்லையே என்றக் கேள்விக்குத்தான் அம்மையாருக்கு அவ்வளவு சீற்றம் பொங்கிவிட்டது !

” தயவுசெய்து இம்மாதிரியான அவலப்பொழுதில் காங்கிரஸ் அரசியல் செய்வதையும், நாடகமாடுவதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும்.  வெறுமனே உட்கார்ந்துப் பேசுவதினால் அந்தத் தொழிலாளர்களுக்கு என்ன லாபம் ?  அதற்குப் பதிலாக அந்தத் தொழிலாளர்களின் சூட்கேஸ் போன்ற உடமைகளைத் தூக்கிக் கொண்டு அவர்களுடனே போனாலாவது அவர்களுக்கு லாபம் கிட்டுமே ? ”

இவ்வளவு ஈரமின்றி ஒரு பெண்ணால், ஒரு தாயால் பேச முடியுமா ?  முடியும்.  ஸ்மிருதியோ, உமா பாரதியோ, காயத்ரி ரகுராமோ இதைக்காட்டிலும் கூட வன்மமாக பேசமுடியும்.  ஆர் எஸ் எஸ் சித்தாந்தங்கள் ரத்தத்தில் ஊறிக்கிடந்தால் இன்னமும் கூட தரையிறங்கி ஏழைகளை, சாமானியர்கள் பால் பரிபவர்களை இழிவுபடுத்த முடியும் !

புலம்பெயர் தொழிலாளர்களின் பயணச் செலவுக்கு காங்கிரஸ் சார்பாக பணம் தருகிறேன், அவர்களை நடக்க விட்டு துன்புத்தாதீர்கள், என  அறிவித்ததோடு நில்லாமல், அதை பல மாநிலங்களுக்கு கொடுக்கவும் செய்தார் சோனியா காந்தி !

தமிழக காங்கிரஸ் ஒரு கோடியை எடுத்துக் கொண்டு போய் தமிழக அரசிடம், அத்தகைய புலம்பெயர்பவர்களின் பயணச் செலவுகளுக்காகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றபோது, அப்படி பயன்படுத்த ஏதுவாக திட்டமேதுமில்லை என அதைத் திரும்பளித்து விட்டது அரசு.  ஆனால், கொத்துக் கொத்தாக தமிழக மண்ணில் பாடுபட்ட அந்தத் தொழிலாளர்களை வெட்கமில்லாமல் நடக்கவிட்டு வேடிக்கை பார்த்தது. தலை எப்படியோ வாலும்  அப்படித்தானே இருக்கும் ?

1000 பேருந்துகளில் ஏற்றி, அவரவர் எங்கு போக வேண்டுமோ செல்லட்டும், அதற்கான முழுச் செலவையும் நான் ஏற்கிறேன் என பிரியங்கா காந்தி முன்வந்தது எல்லாம் ஆளுங்கட்சிக்கு எரிச்சலைக் கிளப்பி விட்டிருக்கிறது.  ஏன்னா இதையெல்லாம் பிரதமரோ, உள்துறை அமைச்சரோல்ல முன்னின்று செய்திருக்க வேண்டும் ?

அவர்களிருவரும் எதை முன்னின்று செய்திருக்கிறார்கள் ?  அம்பானிகளும், அதானிகளும் இன்னும் பல தொழில்களைப் புரிந்து உலகின் டாப் 5 பணக்காரர்களாக்க பல அரசு  நிறுவனங்களை அவர்களுக்கு தாரை வார்த்துக் கொடுத்தார்கள்.  ஓடிப்போன கம்பெனிகளுக்கெல்லாம் இன்னும் கடன் தருகிறேன் சீக்கிரம் வா எனச் சிக்னல் கொடுத்தார்கள்.  ஒரே ஒரு முறையேனும் இந்த இருவரில் ஒருவராவது பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார்களா ?  நாட்டு மக்களின் நலங்களை நேரில் போய் விசாரித்தார்களா ?  துன்புறுவோர்களுக்கு நாங்கள் இருக்கிறோம் என அணைத்து ஆறுதலளித்தார்களா ?

மூச்.  கைவசம் பாகிஸ்தானும், இஸ்லாமியர் வெறுப்பு பரப்புரைகளும், ஸ்ரீராம் கோஷமும் இருக்கும் போது அவர்களைப் பற்றி எங்களுக்கென்ன கவலை என்கிற இறுமாப்புதான் அவர்களை இந்தளவு அகந்தையுடன் பேசவும், நடந்துக் கொள்ளவும் வைக்கின்றன !

இன்னும் ஒரு பகுதியோடு முடியும்.