சுயசார்பு இந்தியா (ஆத்மநிர்பர் இந்தியா) பற்றி பேசிய மோடி, புலம்பெயர் தொழிலாளர்களின் அவல நிலை குறித்தோ, வேலை இழப்புகள் குறித்தோ பேசாதது நமக்கு அதிர்ச்சி அளிக்கலாம். ஆனால் நமக்கு அது கோபத்தை ஏற்படுத்தவில்லையே ஏன்?

ஒரு வழக்கமான அரசியல்வாதியாக இருந்திருந்தால் பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு இந்நேரம் பாதாளத்தைத் தொட்டிருக்கும். அவசர கோலத்தில் கொண்டு வரப்பட்ட மார்ச் 24 ஊரடங்கால் வேலை பார்க்கும் மூன்றில் இரண்டு பேரின் வேலை பறி போயிருப்பது ஒரு சர்வேயில் தெரிய வந்திருக்கிறது. இரண்டு மாதங்களாக மோசமாகிக்கொண்டே இருந்த புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சனையை சரி செய்வதில் அரசாங்கம் மாபெரும் தோல்வியை அடைந்திருக்கிறது. இந்திய ஜனத்தொகையில் பாதி பேர் அரை வயிற்றுக்குத்தான் சாப்பிடுகிறார்கள். ஆனால் இத்தனையையும் மீறி மோடியின் மீது எந்தக் கோபமும் இருப்பதாகத் தெரியவில்லை. அவர் எப்போதும் போல செல்வாக்குடனேயே இருக்கிறார்.

மே 12ஆம் தேதி நாட்டு மக்களிடையே உரையாற்றும் போது ஒரு முறைகூட புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி மோடி பேசவில்லை என்பதைப் பலரால் நம்பவே முடியவில்லை. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஏற்பட்டிருருக்கும் வேலை இழப்பு பற்றி அவர் பேசவில்லை. அத்தியாவசிய பொருட்களின் தேவையில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி பற்றி பேசவில்லை. எல்லா திசைகளிலும் பதட்டம் உறைந்திருப்பது பற்றியும் பேசவில்லை. 2016 கொண்டு வரப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை வாழ்வாதாரங்களில் ஏற்படுத்திய பேரழிவு பற்றியும்கூட அவர் ஏதும் பேசவில்லை. வேறெந்த அரசியல் தலைவராலும் அப்படிப்பட்ட சொதப்பலிலிருந்து மீண்டு வந்திருக்க முடியாது.

துன்பம் ஏற்படுத்தும் மோடி, அதற்கான அரசியல் விலையைக் கொடுப்பதில்லையே ஏன்? அகங்காரமும் மக்களைப் பற்றி கவலை இல்லாமலும் அவர்களின் துன்பங்களை தெரிந்தே கண்டுகொள்ளாமலும் இருக்க அவரால் எப்படி முடிகிறது?

மோடியின் தாக்கம் என்பது வெறும் அரசியல்ரீதியானது அல்ல என்பதால் வழக்கமான அரசியல் பார்வைகள் மூலம் அதைப் புரிந்துகொள்ள முடியாது. மோடியின் தாக்கத்தின் ஒரு பாதி மதத் தலைவர்களுக்கு மட்டுமே இருப்பது போன்றது. ஒரு மீட்பரின் பிம்பத்தில் அவர் அமர்ந்துகொண்டிருக்கிறார். இந்திய அரசியலின் “துறவு மரபு” (‘saintly idiom’) என்று மோகன்தாஸ் காந்தியைப் பற்றி குறிப்பிட்டார் அரசியல் அறிவியலாளரான மோரிஸ் ஜோன்ஸ். மோடியும் அந்த ரகத்தைச் சேர்ந்தவர். இந்தியாவை அரசியல்ரீதியாக மட்டுமின்றி, தார்மீக அடிப்படையிலும் ஆன்மீகத்திலும் வழிநடத்தும் பக்கிரி என்று தன்னைத் தானே முன்னிறுத்திக்கொள்கிறார் அவர். அதனால்தான் அவருக்கு வெறும் ஆதரவாளர்கள் அல்ல, வழிபடுபவர்கள் இருக்கிறார்கள். பக்தி மேலிடும் போது அவர் தலைமையிலான அரசாங்கத்தின் செயல்பாடு எல்லாம் கண்ணில் தெரியாது.

மக்கள் துன்பம் என்பது மோடி மீதான நம்பிக்கைக்கான சோதனை

நீங்கள் துன்பத்தில் உழலும் போது மீட்பரை கைவிடுவதில்லை. கடவுளை உங்களால் வேலையை விட்டு அனுப்ப முடியுமா? மாறாக இருகப் பற்றிக்கொள்ளுகிறீர்கள். நம்பிக்கையை இரண்டு மடங்காக்குறீர்கள். ஏனென்றால் இந்த சோதனைகள் எல்லாம் வேறு ஒரு பெரிய நன்மைக்காக என்று கடவுள் சொல்லுகிறார். முட்களின் பாதையில் நடந்து சென்றால்தான் கடவுளின் வழிகாட்டுதலில் நீங்கள் மோட்சத்தை அடைவீர்கள். தினக் கூலிகளின் வேதனை பற்றி ஒரே ஒரு முறை மோடி பேசினார். அதைத் தவம் (தபஸ்யா) என்று கூறினார். அதாவது உயர்ந்த நோக்கத்திற்காக சந்திக்க நேரும் துன்பம். பண மதிப்பிழப்பு நடவடிக்கையை “ஊழலுக்கு எதிரான யாகம்” என்று கூறினாரே அதே போலத்தான். ஏப்ரல் 14ஆம் தேதிக்குப் பிறகு ஊரடங்கை நீட்டித்த போதும் அதே ஆன்மீகத்தில் ஊறிய சொல்லாடல்களைப் பயன்படுத்தினார். தியாகம், தவம் பற்றி பேசினார். காந்தியும் இதையேதான் செய்தார். தியாகத்தின், சுய சுத்தீகரிப்பின் மூலம் இந்திய மக்கள் சுதந்திரமடைவார்கள் என்றார். அதுதான் சத்யாகிரஹம் என முன்னிறுத்தப்பட்டது. மோதி ஒரு சுயசார்பு தேசத்தைக் கட்டமைப்பதாகச் சொல்கிறார். அதற்கு தியாகமும் தவமும் தேவை என்கிறார்.

இந்தியாவின் கடந்த கால மகத்துவம் பற்றி மோதி பேசுவது இதன் காரணமாகத்தான். தான் உருவாக்கும் தார்மீக உலகில் மோதி ஒரு மீட்பர். அவர் கட்டமைக்கும் இந்த உலகில் இந்தியா ஒரு காலத்தில் மகத்தானதாக இருந்தது, பிறகு “1,200 ஆண்டுகள் அடிமைப்பட்டு கிடந்தது” (“சுதந்திரத்திற்குப் பிந்தைய அடிமை மனோபாவமும்” இதில் அடங்கும்). அந்த மேன்மையான காலக் கட்டத்திற்கு மீண்டும் அழைத்துச் செல்வதற்குத்தான்மோடிவந்திருக்கிறார். மோதி கட்டமைக்கும் இந்த உலகில் கொரோனா வைரஸ் என்பது, மற்ற நாடுகளின் தலைவர்கள் செய்வது போல, பாதிப்பைக் குறைப்பற்கான வாய்ப்பு அல்ல. மாறாக, இந்தியாவை மகத்துவமான தேசமாக மறுகட்டமைப்பு செய்வதற்கான “வாய்ப்பு” இது.

ஆனால் அவர் கேட்பது நிபந்தனைகள் அற்ற நம்பிக்கை. இந்தக் கட்டமைப்பில் மக்கள் துன்பத்திற்கு ஆளாவது நம்பிக்கைக்கான சோதனை. பண மதிப்பிழப்பு நடவடிக்கை போலவேதான் இதிலும். இது மக்கள் தேசத்தின் மீதும், மோடியின் மீதும் வைத்திருக்கும் நம்பிக்கைக்கான சோதனை. பரிதவிக்கும் நிலையில் இருக்கும் பலர் இந்த நம்பிக்கையை பிடித்துக்கொள்வார்கள் என்பது நம்ப முடியாதது அல்ல. இது அவர்களின் துன்பத்திற்கு ஒரு அர்த்தம் கொடுக்கிறது. இல்லாவிட்டால் துன்பம் அவர்களை விழுங்கிவிடும். சலித்துப் போன வாழ்க்கையை, எந்த மதிப்பும் இல்லாது ஒட்டிக்கொண்டிருக்கும் வாழ்க்கையை தாண்டி வருமாறு மோதி அழைக்கிறார். பெரிய மகத்துவமான ஒன்றை அடையுமாறு கூறுகிறார். துன்பம் கூறுபோடும் போது நம்பிக்கை நங்கூரமிட்டுக்கொள்கிறது. ஏனென்றால் அந்தத் தருணத்தில்தான் உங்களுக்கு நம்பிக்கை மிக அவசியமாகிறது.

இந்த நம்பிக்கைக்கு மிகச் சமீபத்தில்தான் சடங்குகள் செய்தார்கள். கைத்தட்டலும் விளக்கேற்றலும்தான் அந்தச் சடங்குகள். பல கோடி பேர் அதில் பங்கேற்றார்கள். மக்களிடமிருந்து ஏழு சத்தியங்களையும் பெற்றிருக்கிறார் மோடி. “முதியோர்களை பாதுகாப்பது,” “ஏழைகளின் நலன்களை கவனித்துக்கொள்வது,” “தங்களின் வேலை செய்பவர்களிடம் கரிசனத்துடன் நடந்துகொள்வது” இப்படி பல… தான் யோகா செய்வது போன்ற அனிமேஷன் வீடியோக்களையும் அவர் வெளியிட்டிருக்கிறார். பல கோடி பேர் அதைப் பார்த்திருக்கிறார்கள். இந்த செயல்கள் மூலம் இந்தியாவின் சமூக, தார்மீக, ஆன்மீக தலைமையைக் கைப்பற்றுகிறார் அவர்.

தனிநபர் உபகாரமாக மாறிப் போன நிவாரண நடவடிக்கை

ஏதோ தரிசனம் தருவது போலத்தான் மோதி நிவாரண திட்டங்கள் பற்றி பேசுகிறார். இந்தப் பேரிடரின் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் மக்களிடையே பேசும் மற்ற நாட்டு ஜனநாயகத் தலைவர்கள் போல் அல்லாது மோடி சில வாரங்களுக்கு ஒரு முறை மட்டுமே பேசுகிறார். இந்தக் காட்சிக்காக மக்களை காத்திருக்க வைக்கிறார். அதனால்தான் தனது உரைகளுக்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு அதைப் பற்றிய அறிவிப்பினை வெளியிடுகிறார். இந்த ஓரிரு நாட்களில் ஏராளமான ஹேஷ்யங்கள் கிளம்பிவிடும். மக்கள் தங்கள் ஆசைகளை, எதிர்பார்புகளை ஒரு இறைஞ்சுதல் போல பிதற்ற ஆரம்பிப்பார்கள். கணிக்க முடியாத இறைவனை நோக்கிய பிதற்றல்கள் இவை.

அதன் பிறகு அவர் காட்சி தருகிறார். அவரது பேச்சுகள் எல்லாம் பிரசங்கம் போலவும் இருக்கும் இறை உத்தரவுகள்  போலவும் இருக்கும். நடு நடுவே பெரிய அறிவிப்புகள் இருக்கும். அதிர்ச்சியை ஏற்படுத்துவது அல்லது வசியம் செய்வதே நோக்கம். உலகத் தலைவர்கள்தான் நிவாரணத் திட்டத்தை அறிவித்தார்கள். பேரிடரை எதிர்கொள்வதற்கான முயற்சி என்று சீரியஸான தொனியில் அறிவித்தார்கள். மோடியோ சத்ய சாய் பாபா வாயிலிருந்து தங்க முட்டை எடுப்பது போல “20 லட்சம் கோடி ரூபாய்” என குறிப்பிட்டார். அதைத் திரும்பத் திரும்ப கூறிக்கொண்டிருந்தார். ஒரு பெரிய அறிவிப்பைச் செய்து மக்களை வசியம் செய்வதற்கான முயற்சி அது. அதை அவர் “மோடி பேக்கேஜ்” என அழைக்கவில்லை. அதற்குத்தான் ஜால்ரா ஊடகங்கள் இருக்கின்றனவே. ஏதோ தனது சொத்திலிருந்து எடுத்து மக்களுக்கு தானமாகக் கொடுப்பது போல அதை முன்னிறுத்தினார் மோதி. அதாவது, அவர்கள் கற்பனை செய்து பார்க்க முடியாத தொகையை அள்ளிக் கொடுப்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தினார்.

சமூக ஊடகங்களில் உள்ள மோடியின் கூஜாக்கள் கூவின. “மோடியின் பேக்கேஜ் பாகிஸ்தானின் பொருளாதாரத்தைவிட பெரியது.” இந்த நிதித் திட்டம் சில லட்ச ரூபாய் மதிப்பு மட்டுமே கொண்டது என்பதே நிஜம். இது மற்ற நாடுகள் தங்கள் நாடுகளில் ஒதுக்கியதைவிட மிக மிகக் குறைவு. மோடி அறிவித்ததில் பல அரசு வாங்கிய கடன் சார்ந்தவை, அல்லது அரசு கடன்களை செலுத்துவது சார்ந்தவை. இது மோதி குஜராத்தில் கச்சிதமாக்கிக்கொண்ட பழைய உத்தி. துடிப்பான குஜராத் மாநாடு என்ற பெயரில் பல லட்சம் கோடி நிதியை பெற்று வந்ததாக அதிர வைப்பார்.  ஆனால் அதெல்லாம் வெறும் எப்போதும் ஈடேறாத புரிந்துணர்வு ஒப்பந்தங்களாகவே இருக்கும். மதவாதிகளைப் போல மோடிஎப்போதும் பிரம்மாண்டமான அடையாளங்களைப் பற்றியே பேசுகிறார்.

அமைச்சர்களை குறை சொல்ல முடியும், மோடியை அல்ல

சுயசார்பு இந்தியா தொடர்பான தனது கனவுகளை நனவாக்குவதற்கான அலுத்துப் போகச் செய்யும் வேலைகளை அவர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தள்ளிவிட்டுவிடுகிறார். எந்தக் கொள்கைகளையோ, முழுமையான திட்டங்களையோ மோடி நுணுக்கமாக அறிவிப்பதில்லை என்பதற்கு காரணம் இருக்கிறது. அந்தக் கொள்கைகளின் அடிப்படையில் தான் மதிப்பிடப்படுவதை மோடி விரும்புவதில்லை. மாறாக தனது தொலைநோக்கினை வைத்து மட்டுமே தன்னை மதிப்பிட வேண்டும் என அவர் விரும்புகிறார். கொள்கைகள் எதிர்பார்த்தபடி பலன் தராவிட்டால் குறைபாடுகளுக்கும் தோல்விகளுக்கும் அமைச்சர்கள் பொறுப்பேற்பார்கள், மோடி அல்ல. ரயில் டிக்கெட்டுகளுக்கு புலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூல் செய்தால் அது ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலின் பிழை. வலதுசாரி ஆதரவாளர்கள் நிர்மலா சீதாராமனை திட்டித் தீர்க்கிறார்கள். அவருக்கு முன்பு அருண் ஜேட்லியை திட்டினா்கள். தங்களை ஏமாற்றிவிட்டதாகக் கூறினார்கள். ஆனால் மோடி தங்களை ஏமாற்றிவிட்டதாக அவர்கள் ஒரு போதும் திட்டியதில்லை. மோடியின் அமைச்சர்கள் ரத்தமும் சதையுமான மனிதர்கள். அவர்கள் தோற்கலாம். அதனால் அவர்கள் தங்களது தவறுகளுக்குப் பொறுப்பாகலாம். மாறாக, குட்டி கடவுளான மோடியோ தோல்விகளுக்கு பொறுப்புகளுக்கு அப்பாற்பட்டவர்.

ஈரானின் உயர் தலைவர் அயோத்துல்லா கொமோனி போன்ற இடத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டிருக்கிறார் மோடி. கொமேனியும் அப்படித்தான். கடவுளின் வழிகாட்டுதல் கொண்ட, எந்தத் தோல்விக்கும் ஆட்பட முடியாத, அரசின் எல்லா உத்தரவுகளையும் பிறப்பிக்கக்கூடிய தலைவர். நாட்டின் அரசியல் திசையை தீர்மானிக்கக்கூடியவர். நாட்டின் தீர்மீக நெறிகளின் அடையாளமாக இருப்பவர். ஆனால் எல்லாவித அரசியல் பொறுப்புகளுக்கும் அப்பாற்பட்டவர். அரசின் தோல்விகள் உள்ளிட்ட பிரச்சனைகள் அவரின் கீழ் இருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்கள் தலையில் விழும். மோதி அவ்வப்போது தேர்தல் மூலம் ஜனநாயக உரிமை பெற்றுக்கொள்கிறார். ஆனால் தேர்தல்களுக்கு இடையில் அவர் எல்லாவற்றையும் கடந்த ஒரு அதிகாரத்தைப் பெற்றுவிடுகிறார். அது அவரை பத்திரிகையாளர் சந்திப்புகளிலிருந்து விடுவிக்கிறது. ஜனநாயகத்தின் நடைமுறைகளிலிருந்து விடுவிக்கிறது. அதைப் பற்றி அவர் கவலைப்படுவதும் இல்லை. மக்களும் அது பற்றி கண்டுகொள்வதில்லை.

தனது எந்த பலவீனங்களையோ தவறுகளையோ பிழைகளையோ அவரால் ஒப்புக்கொள்ள முடியாது என்பதால் புலம்பெயர் தொழிலாளர்களின் துன்பங்களை மோடி கண்டுகொள்வதில்லை. இந்த பாதி மதவாத கட்டமைப்பால் தவறுகளே செய்ய முடியாதவர் என்ற இடத்தை அடைகிறார். அவரின் திட்டங்கள் உங்களுக்குப் புரியவே இல்லை என்றாலும் நீங்கள் அவரை நம்புகிறீர்கள். உண்மையில் சொல்லப் போனால் அவரின் திட்டங்கள் புரியாமலிருப்பதே நல்லது. ஏனென்றால் அவர் சார்ந்த புதிரை இன்னும் அடர்த்தியாக்குகிறது. மதத் தலைவர்களுக்கு எப்போதுமே இருக்கும் மாயத் திரை அது. அதனால்தான் அசலான தொடர்புப்படுத்துவது என வரும் போது அவர் மகா கஞ்சராக மாறிவிடுகிறார். மாறாக, ஊக்குவிக்கும் பிரசங்கங்கள் தரப்படுகின்றன. அரசு திட்டங்களை அறிவிக்கும் போதுகூட ஏதோ மந்திரம் போல எதுகை மோனையுடன் பேசுகிறார். அவரது வாக்குறுதிகள் வெற்றானவை மட்டுமல்ல, எந்தக் காலக் கெடுவும் இல்லாதவை. நீங்கள் தொடர்ந்து நம்பிக்கொண்டே இருக்க வேண்டும்.

அஸ்திவாரமாக இருக்கும் இந்து மதம்

ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங்கின் (ஆர்.எஸ்.எஸ்) பல கார பரப்புரையின் பலனாக இந்த பாதி மதவாத ஈர்ப்பை ஏற்படுத்துகிறார் மோதி. “தேசியவாத வழிபாடு” என்ற கட்டமைப்பை உருவாக்க இந்த பரப்புரை உதவியிருக்கிறது. மாற்றுக் கருத்துக்களை இது சட்டபூர்வமற்றதாக்குகிறது. அதை தெய்வ நிந்தனை போன்றதாக்குகிறது. பி.ஜே.பி-ஆர்.எஸ்.எஸ்ஸின் எதிரிகள் இந்த வழியின் மூலமாக “ஆன்டி-இன்டியன்ஸ்” என வெளியேற்றப்படுகிறார்கள். இந்திய தேசத்தின் மீட்பராக, ஒரு இதிகாச நாயகன் போல தன்னை கட்டமைத்துக் கொண்டிருக்கிறார் மோதி. மக்களில் பெரும் பகுதியினர் இதில் முழு மனதுடன் ஒத்துழைப்பு நல்குகிறார்கள்.

கிட்டத்தட்ட அனைத்து அதிகாரமும் கொண்ட ஒரு தலைவரின்கீழ் இந்திய ஜனநாயகம் பேரிடர் பிரச்சனைகளை எதிர்கொள்கிறது. ஏனென்றால் அவர் தவறுக்கு பொறுப்பேற்க வேண்டியதில்லை. நிதர்சனத்துடன் அவருக்கு எந்தத் தொடர்பும் இல்லை. பண மதிப்பிழப்பிற்கும் ஜி.எஸ்.டிக்கும் பிறகு இந்தியா என்ற நிஜ பூமியில் பொருளாதாரம் ஏற்கனவே கந்தலாகிக் கிடக்கிறது. அடுத்த இருபது, முப்பது ஆண்டுகளுக்கு மீள முடியாத பொருளாதார பேரிடர் இது. ஏற்கனவே பட்டினி சாவுகள் செய்தியில் வருகின்றன. அவற்றில் ஏராளமானவை செய்திக்கு வராமலே போகக்கூடும். ஆனாலும் நமக்கு புதிய தேச கட்டமைப்பு சார்ந்த நம்பிக்கை என்ற ஓபியம் இருக்கிறதே. அதனால் “சுய சார்பு இந்தியா”வை நோக்கி நாம் மெல்ல நகர்ந்து வருகிறோம். மோடி ஒரு போலி இறை தூதராக இருந்தாலும்கூட ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது: நரகத்திற்கான பாதையை அவர் மிகப் பிரகாசமான விளக்குகளால் பளீரிட வைத்திருக்கிறார்.

தமிழில்: செந்தில் குமார்

Courtesy:

Modi faces no political costs for suffering he causes. He’s just like Iran’s Ali Khamenei