புதிய தாராளமய தாராளமய பொருளாதார கொள்கைகளினால் களங்கம் கற்பிக்கப்பட்ட பொதுத் துறை நிறுவனங்கள், அரசாங்கங்களால் காயடிப்பட்ட பொதுத் துறை நிறுவனங்கள்தான் கொரோனாவுக்கு எதிரான போரில் முன்னே நிற்கின்றன.

“கடந்த 40 ஆண்டுகளின் பொருளாதார கொள்கைகளை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.” இது ஃபினான்ஷியல் டைம்ஸ் வெளியிட்ட தலையங்கத்தில் உள்ள வாசகம். நாம் எவ்வளவு மோசமான பிரச்சனையை எதிர்கொள்கிறோம் என்று காட்டுகிறது மாறும் இந்த நிலைப்பாடு. பொருளாதாரத்தின் இயக்கத்தில் அரசு இன்னும் அதிக பங்கு கொள்ள வேண்டும், தொழிலாளர் சந்தையின் பயங்களைக் குறைப்பதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும், அதிக சொத்துக்களைக் குவிப்பவர்களுக்கு வரியை அதிகரிக்க வேண்டும் என்று என்று அந்தத் தலையங்கம் பரிந்துரைக்கிறது. முதலாளித்துவத்தை முதலாளித்துவத்திடமிருந்து காப்பது குறித்து கவலை தெரிவிக்கிறது அந்தத் தலையங்கம். “அரசின் திட்டமிடலும்” “தொழிலாளர்கள் வழிநடத்தும் பொருளாதாரமும்” அவசியம் என கடந்த ஆகஸ்ட்டில் அவர்கள் எழுதினார்கள். ஆனால் இந்த பேரிடர் காலத்தில் இப்படி ஒரு தலையங்கம் வந்திருப்பது அதைவிட கவனத்தை அதிகமாக்குகிறது.

பொருளாதாரத்தில் அரசின் தலையீடு என்றாலே புதிய தாராளமய பொருளாதாரக் கொள்கையின் கனவான்கள் முகம் சுழிப்பார்கள். ஆனால் அந்தக் கொள்கைதான் உலகெங்கும் இப்போது மீட்டுருவாக்கம் பெறுகிறது. புதிய தாராளமய பொருளாதார கொள்கைகளினால் களங்கம் கற்பிக்கப்பட்ட பொதுத் துறை நிறுவனங்கள், அரசாங்கங்களால் காயடிப்பட்ட பொதுத் துறை நிறுவனங்கள்தான் கொரோனாவுக்கு எதிரான போரில் முன்னே நிற்கின்றன. கடந்த பத்து, இருபது வருடங்களில் நிதிக் குறைப்பு, தனியார்மயமாக்கல் இல்லாமலிருந்தால் இன்னும் சிறப்பான எதிர்வினையாற்றியிருக்க முடியும். லாப நோக்கம் கொண்ட தனியார் முயற்சிகளால் பேரிடர்களை எதிர்கொள்ள முடியாது என்பது இப்போது ஒரு வழியாக எல்லோருக்கும் புரிந்திருக்கிறது. பொதுத் துறை, அரசின் கட்டுப்பாட்டில் உற்பத்தி ஆகியவை மீீள் உருவாக்கம் பெறுகின்றன.

பொது சுகாதாரம்

ஒரு மருத்துவப் பேரிடர் என்று வந்தால் தனியார் மருத்துவ சேவையைக் கண்ணில்கூட காண முடிவதில்லை என்பதை வலதுசாரி தலைவர்களே இப்போது காண்கிறார்கள். அரசு நிதியுதவியில் இயங்கும் தேசிய சுகாதார சேவையை காப்பாற்றுவதன் தேவையைப் பற்றி பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் திரும்பத் திரும்ப பேசி வருகிறார்.

பிரிட்டன் உள்ளிட்ட மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஒப்பீட்டளவில் சிறப்பான பொது சுகாதார கட்டமைப்பு உள்ளது. அதே சமயத்தில் இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் பொது சுகாதார கட்டமைப்பிற்கு ஒதுக்கப்படும் நிதி கடந்த சில ஆண்டுகளில் குறைந்துகொண்டே இருந்தது. அதோடு தனியார்மயமாதலும் சேர்ந்துகொள்ள, பொது சுகாதார கட்டமைப்பு பலவீனமடைந்தது. பொது சுகாதார செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என ஐரோப்பிய யூனியனின் தொழில்நுட்ப பிஸ்தாக்கள் அறிவுரை கூறிக்கொண்டிருந்தார்கள். கொரோனா பரவிய ஆரம்ப காலக் கட்டத்தில் ஐரோப்பிய அரசுகள் அலட்சியமாக இருந்ததும் பொது சுகாதார கட்டமைப்பின் பலவீனமும் நோயினை எதிர்கொள்ளும் திறனை மட்டுப்படுத்தியிருக்கிறது. இந்தப் பிரச்சனையின் காரணமாக ஸ்பெயின், அயர்லாந்து ஆகிய நாடுகள் தனியார் மருத்துவமனைகளை தற்காலிகமாக பொதுவுடமை ஆக்கியிருக்கின்றன. உடல்நல காப்பீட்டின் அடிப்படையிலான அமெரிக்காவின் தனியார் மருத்துவ கட்டமைப்பில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. பரிசோதனைக் கருவிகளின் பற்றாக்குறை மட்டுமே அங்கு பிரச்சனை அல்ல, அதற்கான அதீதமான கட்டணமும் சிகிச்சை செலவும் பெரிதளவிலான மக்களை முடக்கிப் போடுகிறது. குறிப்பாக அமெரிக்க ஜனத்தொகையில் 3 கோடி பேருககு உடல் நல காப்பீடே இல்லை. 4.4 கோடி பேருக்கான காப்பீட்டுத் தொகை போதுமானது அல்ல. பரிசோதனையும் சிகிச்சையும் எடுத்துக்கொள்ள முடியாது என்பதாலேயே ஏராளமான உயிர்களை அங்கு இழக்க வேண்டியிருக்கும்.

சீனா, தென்கொரியாவோடு அமெரிக்காவை ஒப்பிட்டால்தான் இந்த வித்தியாசம் தெரியும். சீனாவில் கொரோனா பரிசோதனையும் சிகிச்சையும் இலவசம். இந்த கொள்ளை நோயைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் இதுதான் அவர்களின் முக்கியமான துருப்புச் சீட்டு. தென் கொரியா பெருமளவில் பரிசோதனைகளை மேற்கொண்டது. இலவசமாக. சிகிச்சை செலவுகளை அரசும் காப்பீட்டு நிறுவனங்களும் ஏற்றுக்கொண்டன.

ஆனால் பொது சுகாதார கட்டமைப்பின் முக்கியத்துவம் அதைவிட பெரிது. இது போன்ற பேரிடர்களை போருடன்தான் நாம் ஒப்பிட முடியும். அந்த மாதிரி சமயத்தில் அதிக அளவில், குறைந்த செலவில் உணவு, மருத்துவ உபகரணங்களை, மருந்துகளை உற்பத்தி செய்வது முக்கியத்துவம் பெறுகிறது. இதில் பின்வரும் இரண்டு விஷயங்கள் முக்கியமானவை:

  1. மக்கள் உயிர் வாழத் தேவையான பொருட்களை, உடனடித் தேவைகளைத் தயார் செய்வது. மருந்து, உணவுப் பொருட்கள் அதில் பிரதானமானவை. இவற்றின் தேவைக்கும் வினியோகத்திற்கும் இடையே பெரிய இடைவெளி இருக்குமானால் மக்கள் பஞ்சத்தில் மாண்டு போவார்கள். இவை ஏற்படுத்தும் சமூகப் பிரச்சனைகள் இந்தப் பேரிடரைக் கையாள்வதை இன்னும் மோசமாக்கும். இரண்டாம் உலகப் போரின் போது உணவுப் பொருளை ரேஷன் முறையில் அளவாக வினியோகிக்கும் நடைமுறை பயன்படுத்தியது பிரிட்டன். தென் கிழக்கு ஆசியாவில் ஜப்பானை தோற்கடிக்க இந்தியாவின் நிதி வளம் சுரண்டப்பட்டது. அதன் விளைவாக உருவாக்கப்பட்ட வங்காள பஞ்சத்தில் 3 கோடி பேர் மடிந்தார்கள்.
  2. இத்தகைய கொடிய காலக் கட்டத்தைக் கடந்து செல்வதற்கு என்னென்ன தேவை என்பதைப் பார்க்க வேண்டும். போர்க் காலங்களில் ஆயுதங்கள் மிக முக்கியமாகத் தேவை. கொரோனாவைப் பொருத்தவரை வெண்டிலேட்டர்கள், முகமூடிகள், ஹேண்ட் சானிடைஸர்கள், கையுறைகள், மருந்துகள் மிக அவசியம். இதன் வினியோகத்தில் பெரிய இடைவெளிகள் இருந்தால் பெருந்துன்பம் நேரும். போர்களின் போது இதுபோன்ற பிரச்சனைகள் தோல்விக்கு காரணமாக மாறும். கொள்ளை நோய்களின் போது இத்தகைய தோல்விகளால் பெரும் உயிரழப்பு ஏற்படும். கொரோனா துயரம் என்பது உற்பத்தியின் தோல்வி என கூறலாம். போதுமான ஐ.சி.யுக்கள், வெண்டிலேட்டர்கள், மாஸ்குகள் இல்லாவிட்டால், போதுமான மருத்துவமனைகள் அமைக்காவிட்டால், க்வாரன்டைன் மையங்கள் உருவாக்காவிட்டால் அதோ கதிதான்.

பொருளாதாரத்தில் அரசு தலையிடக்கூடாது என்று சொல்லக்கூடிய அரசுகள்கூட இந்தப் பிரச்சனைகள் போதுமான உபகரணங்களை உற்பத்தி செய்யுமாறு தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவு பிரப்பிக்கின்றன. வெண்டிலேட்டர் தயாரிக்கச் சொல்லி ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்ட டிரம்ப்பின் நடவடிக்கையை கனிக்க வேண்டும். பாதுகாப்பு உற்பத்திச் சட்டம் என்ற போர்க் கால சட்டத்தின் மூலம் அந்த ஆணையை பிறப்பித்திருக்கிறார். முதலில் அதைப் பயன்படுத்த தயங்கிய அவர் பிறகு இறங்கி வந்தார்.

இத்தாலியில் வெண்டிலேட்டர் தயாரிக்கும் ஒரே நிறுவனமான சியார் எஞ்சினியரிங் நிறுவனத்தை முடுக்கிவிட்டது அந்நாட்டு அரசு. அதற்காக ராணுவ வீரர்களை அனுப்பி வைத்தது. அந்த நிறுவனம் அத்தனை வெளிநாட்டு ஆர்டர்களையும் ரத்து செய்துவிட்டு இந்த உற்பத்தியில் இறங்கியது.

பெரிய பொதுத் துறை நிறுவனங்கள், துடிப்பான உற்பத்தித் திறன் கொண்ட நாடுகளுக்கு இதில் சிறப்பாக செயலாற்ற முடிகிறது. சீன அரசு தனது பொதுத் துறை நிறுவனமான அரசு கட்டுமான எஞ்சினியரிங் நிறுவனத்தை முடுக்கிவிட்டு இரண்டு அவசர க்வாரன்டைன் மையங்களை உருவாக்க வைத்தது. அசர வைக்கும் வேகத்தில் அதைச் செய்து முடித்தார்கள். ஹுபெய் மாகாணம் ஊரடங்கில் இருந்த போது உணவு தானியங்கள், கறி, முட்டை உள்ளிட்டவற்றின் வினியோகத்தை சீனா உறுதி செய்தது. தனது நாட்டுக்குள் போதுமான முகமூடிகள் உள்ளிட்ட உபகரணங்களைத் தயாரித்து வழங்கிய சீன அரசு, தேவை குறைந்த பிறகு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் துவங்கியது.

ஒரு பெரிய தேசமான இந்தியாவின் சுகாதார கட்டமைப்பு மோசமான நிலையிலேயே உள்ளது. போதுமான முகமூடி உள்ளிட்ட தனிநபர் பாதுகாப்பு உபகரணம் இந்தியாவிடம் இல்லை. ஐ.சி.யு., வெண்டிலேட்டர் வசதியும் குறைவுதான். 134 கோடி மக்கள் கொண்ட இந்தியாவில் 31,900 ஐ.சி.யு படுக்கைகள் மட்டுமே உள்ளன. 8.28 கோடி ஜனத்தொகை கொண்ட ஜெர்மனியில் மார்ச் மத்திய வாக்கில் 28,000 ஐ.சி.யு படுக்கைகள் இருந்தன. கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகமானால் மருத்துவமனைகள் சேவை செய்ய முடியாமல் திண்டாட நேரும். பொதுத் துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் 30,000 வெண்டிலேட்டர் தயாரிப்பதற்கான அவசர கோரிக்கையை பெற்றிருக்கிறது. இந்துஸ்தான் லைஃப்கேர் (பொதுத் துறை நிறுவனம்), இந்திய ரயில்வேயின் ரயில் பெட்டி தொழிற்சாலை ஆகியவையும் வெண்டிலேட்டர் தயாரித்து வருகின்றன. அரசாங்கம் தொடர்ந்து காயடிக்க முயற்சித்து வந்த பொதுத் துறை நிறுவனமான ஆயுதங்கள் தயாரிப்பு வாரியம் இப்போது மேஸ்குகள், சானிடைஸர்கள், தனி நபர் பாதுகாப்பு உபகரணங்கள் தயாரித்து வருகிறது.

இந்தியாவில் கேரளா இந்த கொள்ளை நோயை மிகச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறது. பல்வேறு மத்திய அரசுகள் கொடுத்த நெருக்கடியை மீறி தற்போது இடதுசாரிகள் ஆட்சியின்கீழ் இருக்கும் அந்த மாநில தனியார்மயமாகவில்லை. குடும்ப ஸ்ரீ என்ற 45 லட்ச உறுப்பினர்கள் கொண்ட அமைப்பு முகக் கவசம் தயார் செய்து வருகிறது. பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் அவை வினியோகிக்கப்படுகின்றன. இளைஞர்களும் அறிவியல் இயக்கத்தினரும் இதுபோன்றவற்றில் தங்களை பெரிதும் ஈடுபடுத்திக்கொண்டனர்.

முகக் கவசம், சானிடைஸர், கையுறைகளை நம்மால் தயாரிக்க முடியாது என்பது அல்ல கேள்வி. அதற்கு எந்தப் பெரிய தொழில்நுட்பமும் தேவையில்லை. ஆனால் அவற்றைப் பெரிய அளவில், எண்ணிக்கையில் உற்பத்தி செய்யும் திறன் அவசியம். அதற்குத் தேவையான மக்களையும் திரட்ட முடிய வேண்டும். இந்த இடத்தில்தான் அமெரிக்கா தோற்றிருக்கிறது. 40 ஆண்டுகால புதிய தாராளமய  பொருளாதார கொள்கை அவர்களின் தொழில் உற்பத்தித் திறனை முடக்கிப் போட்டிருக்கிறது. அது மட்டுமல்ல, அவற்றின் மீதான அரசின் கட்டுப்பாடு இல்லாததும் பெரிய பலவீனமாகியிருக்கிறது.

இது போன்ற சூழல்களில் பின்வரும் அம்சங்களின் தேவையையே இது உணர்த்திச் செல்கிறது.

 

  • பேரிடரின் போது பணம் இருந்தாலும் உற்பத்தித் திறன் இல்லாவிட்டால் அந்த நாடு காலி. பிற நாடுகளிடம் கேட்க வேண்டியிருக்கும். அவர்கள் அதைத் தராமலும் போகலாம். இத்தாலி, செர்பியா ஆகிய நாடுகள் இதற்கு உதாரணம். அதிக பணம் கொடுத்து பொருட்களைக் கேட்பது, திருடுவது, கைப்பற்றுவது எல்லாம் நடக்கிறது.

 

  • அவசர நிலையின் போது பயன்படும் வகையில் தேவையைவிட கூடுதல் நமக்கு அவசியம் என்ற பொது சுகாதார நிபுணர் டி.சுந்தரர்ராமனின் பரிந்துரையை இங்கு கருத்தில் கொள்ள வேண்டும்.
  • தனியார் சந்தைகளையும் நிறுவனங்களையும் நம்பியிருப்பது அவசர காலத்தில் உதவுவதில்லை.
  • சுதந்திரத்திற்குப் பிந்தைய காலக் கட்டத்தின் பொருளாதாரத் திட்டமிடல் கடந்த பத்து, இருபது வருடங்களில் கைவிடப்பட்டதன் பிரச்சனைகளை நாம் எதிர்கொள்கிறோம்.
  • சமூகமோ, அதன் பிரதிநிதியான அரசாங்கமோ உற்பத்திக் கூடங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். பேரிடர் காலத்தில் அதுவே உதவும்.
  • ஒத்துழைக்காத கார்ப்பரேட்களைக் கொண்ட தேசத்தில் இது பெரிய தலைவலியாக மாறிவிடும். ஏனென்றால் அரசாங்கத்தின் மீதே கார்ப்பரேட்களுக்கு பெரிய கட்டுப்பாடு இருப்பதை நாம் அறிகிறோம். அமெரிக்காவில் நடப்பது போல அவசர கால சட்டங்களை பயன்படுத்துவதில் இத்தகைய நாடுகள் காலம் தாழ்த்தலாம். இது விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.
  • கார்பரேட் கூட்டு முதலாளித்துவத்திற்கு (cronyism) இந்தியா பேர்போனது. இதனாலோ என்னவோ இங்குள்ள பொதுத் துறை நிறுவனங்கள் முடங்கிப் போயுள்ளன.
  • அரசு துடிப்பாகக் களமிறங்கும் போதும்கூட இத்தகைய சூழலில் தீர்வு ஏற்படாது. 85 சென்ட் விலைக்கு விற்ற முகக் கவசங்களை 7 டாலருக்கு விற்ற கொடுமையை அமெரிக்காவில் காண முடிந்தது. ஏனென்றால் தனியார் நிறுவனங்கள் தங்கள் சுய லாபத்தையே பார்க்கும். இந்தச் சூழலில்தான் அத்தனை மருத்துவ வினியோகத்தையும் தேசியமயமாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் நியூ யார்க் மாகாண கவர்னர்.

அந்தந்த நாடுகள் அவர்களது தேவையை பார்த்துக்கொள்ளும் சுய நலத்தை இங்கு ஆதரித்துப் பேசவில்லை. எல்லா நாடுகளும் எல்லாவற்றையும் தயாரிக்க முடியாது. குறிப்பாக சிறிய நாடுகளுக்கு அது சிரமமாக இருக்கும். அதற்கு சர்வதேச வர்த்தகம்தான் தீர்வு. ஆனால் அவசர காலத்தில் அதெல்லாம் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்பதை இப்போது நாம் காண்கிறோம். ஏனென்றால் முதலாளித்துவம் உருவாக்கும் உலகில் ஒற்றுமை இல்லை. செல்வம் ஓரிடத்தில் குவியும் கட்டமைப்பைத்தானே அது உருவாக்கியுள்ளது. அந்தக் கட்டமைப்பை சீர்படுத்தாமல் ஓர் உலக ஒற்றுமையை உருவாக்க முடியாது.

உடனடியாக தனியார் மயத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து, பொதுத் துறையை விரிவுபடுத்துவதுதான் இந்தப் பேரிடர் நமக்குக் காட்டும் தப்பிக்கும் வழி.

12 ஏப்ரல் 2020

தமிழில் : செந்தில் குமார்

நன்றி:

https://www.newsclick.in/COVID-19-Crisis-Brings-to-Light-the-Need-for-a-Much-Stronger-Public-Sector