முந்தைய “ஹைடெக்கரின் உலகம்” என்ற கட்டுரையின் தொடர்ச்சியாக இக்கட்டுரையை எழுதுகிறேன். வாசிப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள். முதலில் “இருத்தல்” குறித்த இந்தக் கட்டுரையை படித்துவிட்டு “ஹைடெக்கரின் உலகம்” கட்டுரையை வாசியுங்கள்.
“இருத்தல்”(being) பற்றி ஜே கிருஷ்ணமூர்த்தி தொடங்கி ஓஷோ வரையிலான விளக்கங்கள் அனைத்துமே எனக்குத் தெரிந்த வரையில் அனைத்து கண்டடைதலும் எதிர்காலம் நோக்கியதாகவே பெரும்பாலாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. உதாரணத்திற்கு, இங்கு இத்தருணமே உங்கள் கண்முன் விடுதலை இருக்கிறது, உன்னத வாழ்விருக்கிறது என்ற உபதேசம் கேட்கப்படும்போதோ, வாசிக்கப்படும்போதோ நமக்கு இந்த தருணம் என்பது உடனடி குழப்பதிற்கு உரியதாக ஆகிறதே தவிர உன்னதமானதாக இல்லை.
அல்லது அது பற்றிய அருவமாக, கற்பனையாக மாறிவிடுகிறது. இந்த நொடி உணரக்கூடிய காலம் என்பது தள்ளிப்போகிறது. ஏனெனில், சொல்லப்படும் இருத்தல் நிலையும் வாழும் வாழ்க்கைக்கும் சம்மந்தம் இல்லாமல் இருப்பதே. இந்த இடத்தில் உள்ள சிக்கல் என்னவென்றால் பெரும்பாலான புரிதலில், சுயமுன்னேற்றம் எனும் வகையோடு இணைத்து புரிந்துகொள்ளபட்டு அம்முன்னேற்றதிற்கு தடையாக இருப்பது எண்ணங்களே என்றும் அனுமானிக்கபடுகிறது. இத்தகைய பார்வையே தத்துவம், ஆன்மிகம் போன்ற விஷயத்தில் ஈடுபாடுள்ள பலரும் உத்தேசிக்கிறார்கள் என்பதை அறிகிறேன்.
இவ்வாறான “விடுதலை” என்பது காத்திருப்பின் பகுதியாக பார்க்கப்படுவதை சிந்தனையின் வறட்சியென்றே இங்கே குறிப்பிடுவேன். ஒரு ஞானியானவர் கூட மக்களிடையே உரையாடும்போது கடவுள், இருத்தல் குறித்த விஷயத்தை முழுக்க ஓர் எதிர்ப்பார்ப்பு நோக்குடனே கேட்கப்படும்போது நிச்சயம் சலிப்படைந்திருப்பார்.
ஆக, இருத்தல் என்பதை எண்ணமற்ற நிலையாக, மேலும் எதிர்காலத்திற்கு உரிய ஒன்றாக பிரம்மையில் தான் சுழலவேண்டும். முதலில் எண்ணமற்ற நிலை நமக்கானதில்லை என்பதை புரிந்துகொள்ளவேண்டும். ஒரு சராசரி மனிதனின் புரிதலுக்கு அத்தகைய முயற்சியானது அவசியமில்லை. உண்மையில் சராசரித்தனம் என்பதே இருத்தல் என்ற நிலைக்கு முரணான விஷயமாக புரிந்து கொள்ளப்படுவதாலேயே “இருத்தல்” பிரமாண்டமானதாகத் தோன்றுகிறது.
சராசரி நிலை வேறு, இருத்தல் வேறு என்பதல்ல. இந்த நிலையில் இங்கு, இத்தருணத்தில் (Here and now) உள்ள இருப்பானது என்ன? அதில் என்ன இருக்கிறது? சுயமுயற்சியால் ஒரு நாள் கண்டுகொள்ளப்போகும் அனுபவமா அது? என்ற கேள்விகளினூடே ஹைடெக்கர் எனும் ஜெர்மானிய தத்துவவாதியின் கருத்தை சற்று அலசலாம் என்று நினைக்கிறேன். ஹைடெக்கர் “இருத்தல்” என்பதை தனிமனித முயற்சியின் மூலமாக கண்டுகொள்ளும் அறிவோகவோ, ஞானமாகவோ கருதவில்லை. முதலில் அவர் “அறிதல்” என்ற முறையை கேள்விக்குள்ளாக்குகிறார்.
அறிதலால் மட்டுமே ஒரு மனிதனுடைய இருப்பு நிலைகொள்வதில்லை. அறிதலோடு சேர்ந்து பலவிதமான புறநிலை அம்சங்களும் உள்ளன என்பதை சுட்டிக் காட்டியுள்ளார். இன்னும் ஹைடெக்கரின் தத்துவார்த்த மொழி என்பது மரபார்ந்த தத்துவ முறையில் இல்லாமல் புதுவிதமான, நமக்கான மொழியாகவே கொண்டு செல்கிறார். “இருப்பு” என்பதை அதன் இயல்பை அன்றாட மனதிலிருந்து வேறுபடுத்தி காட்டவில்லை.
உதாரணமாக, அவர் முன்வைக்கும் இருப்பானது “அங்கே இருத்தல்”(being there) என்பதாகும். ஜெர்மானிய மொழியில் “டாசென்”(dasein) என்று சொல்கிறார். “அங்கே” என்பது நம் உள்ளும் புறமுமான இருப்பு. நம் அன்றாட வாழ்வோடு பின்னிப்பிணைந்தது. “அங்கே இருப்பது” என்றால் நாம் ஒரு இடத்தில் குறிப்பிட்ட காரணத்திற்காகவோ “இருப்பது” அல்லது காரணமில்லாமல் சும்மாவோ “இருப்பது”என்று மேல்நோட்டமாக பொருள் கொள்ளலாம். நாம் இயல்பெனக் கருதும் அனைத்துமே ஹைடெக்கரின் “இருத்தல்” என்ற உலகினுள் வந்து விடும். எந்த ஒரு செயலும் இவர் விளக்கும் “அங்கே இருத்தல்” என்னும் இருப்பை தாண்டி நிகழ்வதில்லை.
இவரின் தத்துவார்த்த மொழி தொடக்கத்தில் கொஞ்சம் சிக்கலாக இருந்தாலும் அதன் பயன்பாட்டு இடமென்பது நம் “அன்றாடம்” அல்லது அது சார்ந்த சூழ்நிலை என்பதால் விவாதிக்க, பேச எளிதாக இருக்குமென்று நினைக்கிறேன். அன்றாடம் என்றால் நாம் செய்யும் பணிகள், பயணம் செய்வது, நடப்பது , அமர்வது, பேசுவது என்று புரிந்துகொள்ளலாம்.
மேலும் அன்றாடமானது நம் உடலியல்பின் அளவில் மாறாது என்றாலும் செயலளவில் காலத்திற்கேற்ப மாறக்கூடியது. ஒவ்வொருவருக்கும் தனித்தனியே சராசரித்த்தனம், அன்றாடம் என்றவொன்று இருக்கும். பத்தாண்டுகளுக்கு முன் நம் அன்றாடம் வேறுமாதிரி இருந்திருக்கும். பலாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒருவன் “நான் இருக்கிறேன்” என்பதை எதன் அடிப்படையில் புரிந்துகொண்டிருப்பான்? எதனோடு தன்னை ஈடுபடுத்திக்கொண்டு தன் இருப்பை உணர்ந்திருப்பான்? உலகத்தோடு எந்த வகையில் இணைந்திருப்பான்? நிச்சயமாக ஒரு செயலோடு இணைந்திருப்பான்.
உதாரணமாக, ஒரு நூறாண்டுகளுக்கு முன் வேலைக்கு செல்பவரின் அன்றாடமும், இக்கால வேலை சூழலும் முற்றிலும் மாறுபட்டவை. மோட்டார் வாகனம், கார், விமானம் தொடங்கி நம் பயன்பாட்டு பொருட்கள் என நம் அன்றாடமானது மிக நீண்டுள்ளது. இந்த இடத்தில் தான் நம் இருப்பானது விரிவடைந்திருக்கிறது. கடந்த நூறாண்டுகளில் முற்றிலும் அறிவு சார்ந்த பல்வேறு தொழில்நுட்ப வளர்ச்சிகள், அதன் காரணமாக வாழ்க்கைமுறை மாற்றங்கள், அரசியலில் நடந்த மாற்றம் என பல்வேறு நிலைகளில் திருப்பங்களை வரலாறு ரீதியாகவும், கண்கூடாகவும் காண்கிறோம். இதனிடைய நான் இந்த உலகில் என்னவாக இருக்கிறேன்? எதனோடு இருக்கிறேன்? என்ற இருத்தலியல் சார்ந்த கேள்விகளும், குழப்பங்களும் இல்லாமலிருக்காது.
ஹைடெக்கரின் இருப்பானது பெளதீகமாக சூழ்நிலைகளை சந்திக்கும்போதும், நம் கவனிப்பற்ற நிலையிலும் கூட “அங்கே இருத்தலானது” நிலை கொள்கிறது. உதாரணத்திற்கு, நான் இப்போது காபி குடிக்கிறேன் எனில், என் இருப்பு காப்பியோடு இணைந்துள்ளது, மாலை எனும் சூழலோடு உள்ள என் தனிப்பட்ட பார்வை என பல்வேறு அம்சங்களில் என் இருப்பு விரிகிறது. இதனையே “அங்கே இருத்தல்”(dasein) என்று ஹைடெக்கர் அழைக்கிறார். முக்கியம் என்னவெனில், இருத்தலை இரண்டு வகையாக சொல்கிறார்.
நாம் ஒரு சூழலில் இருக்கும்போது நம் இயல்பானது அதிகாரம் பெறுகிற வெளிப்பாடு அடையும் இருப்பை உண்மையாக இருத்தல்(authentic) ஆகவும், அதற்கு மாறான போலியான இயல்பாக நம்மை நாமே சுருங்க வெளிபடுத்தும் இருப்பில் உண்மையான இருப்பு இல்லை, ஆனாலும் அதுவும் இருப்பாகவே இருக்கிறது(inauthentic) என்று சொல்கிறார்.
உதாரணமாக, நான் இப்போது வீட்டில் படுத்துக்கிடக்கிறேன். அப்படியிருக்கும் போது அனுமதியின்றி பக்கத்து வீட்டுக்காரர் வந்துவிடுகிறார். அத்தருணம் நான் உடனடியாக என் இயல்பான படுத்துக்கிடக்கும் நிலையை மாற்றவே முயற்சிப்பேன். என் தலைமுடி கலைந்திருக்கலாம், சட்டையில்லாமல் இருந்திருக்கலாம்.
ஆனால், அப்படியான இயல்பை உடனடியாக மூன்றாம் நபருக்கு வெளிப்படுத்துவதில் சிக்கலோடு உள்ள இருப்பே தன்னதிகாரமற்ற இருப்பு என்று சொல்கிறார். சொல்லும் போது, எது என் இயல்பு என்று தேட வேண்டியதில்லை. வெளிப்படும் சமயம் அவ்வியல்பானது இருக்கும்.