“அவர்கள்” என்ற சொல்லை கேட்டவுடன் உடனடியாக நினைவிற்கு வருவது மற்றவர்கள், சொந்தங்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என நம்மை தவிர்த்த பிற மனிதர்கள் நினைவிற்கு வரும். இந்த அர்த்தததினூடே ஹைடெக்கரின் “அவர்கள்” (they) என்ற சொற்ப்ரயோகத்தை புரிந்துகொள்ளமுடியும் என்று எண்ணுகிறேன்.
ஹைடெக்கரின் “அங்கே இருத்தலில்”(Da-sein) தன்னதிகார இருத்தல்(authentic da-sein) மற்றும் தன்னதிகாரமற்ற இருத்தல்(inauthentic da-sein) என்ற இரு வகை உள்ளது. இது முக்கியமானது, புரிந்துகொள்ள சிக்கலானதும் கூட. ஏனெனில், எளிதில் இவற்றை எல்லாவற்றிக்கும் அப்பாலான விஷயமாக கருதிவிடமுடியும். தன்னதிகார இருத்தல் என்பது என்னால், எனக்கு சொந்தமான காரியத்தை, என் இயல்பில் தன்னதிகாரத்தோடு வெளிப்படுத்துவது. எனக்கு சொந்தமான காரியங்கள் வெளிப்புற செயலால் மட்டும் நிறைவேறுவதல்ல. அது காலத்திற்கேற்ப மாறலாம். உதாரணத்திற்கு, ஒரு தச்சர் நேற்று ரம்பம் வைத்து மரத்தை அறுத்திருப்பார். இன்று அறுப்பதற்கென ஒரு இயந்திரம் வந்துவிட்டது. ஆக, அதனை கையாளும் விதத்தோடு இயல்பாக ஒன்றிவிடும் செயலாக அமையும். ஆனால், நமக்கென பிரக்ஞை பூர்வமான தன்னதிகார இருப்பானது நான் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைப் பற்றியது. இவ்வாறான தன்னதிகார இருப்பின் இயல்பை தொலைத்துவிட்டோம்(lost) என்கிறார் ஹைடெக்கர். என் இருப்பின் இயல்பை கண்டறிவது என்பது எளிதில் முடியும் அறிவோ, தொழிலோ அல்ல.
இதில் பல்வேறு புறநிலை அம்சங்களும் உள்ளன. அன்றாடம் ஒவ்வொரு சூழ்நிலையையும் சந்திக்கிறேன் என்பதை விட எல்லா இடத்திலும், காலத்திலும் சூழ்நிலைகளில் “வீழ்கிறேன்” என்றே சொல்லவேண்டும். இதனை falling(வீழ்தல்) என்று ஹைடெக்கர் சொல்கிறார்.
“நான்” இவ்வுலகில் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் அது ஆஸ்பத்திரியிலோ, வீட்டிலோ, குடிசையிலோ, எங்கோ நான் பிறந்து விழுந்துவிட்டேன். தவிர்க்கமுடியாத நிகழ்வு அது. அவ்வாறு விழுந்த பின் தப்பி எங்கும் ஓட முடியாது. பின் நான் வளர வளர ஒவ்வொரு சூழ்நிலையிலும் தற்செயலாக குதிக்கப்படுகிறேன் அல்லது விழுகிறன்(falling). இந்த விதத்தில் அன்றாடமானது நம்மை சந்திக்கும் அல்லது நாம் சந்திக்கிறோம் என்றும் சொல்லலாம். அதில் இந்த உலகம் என்னை எவ்வாறு கண்டுகொள்கிறதோ அதன் படியே “நான்” வாழ வேண்டும். எனது சுயம் அதனோடு ஒட்டவேண்டும். அப்படியிருக்கும் பட்சத்தில் சுயமானது இரண்டாக பிளவுபடுகிறது. இந்த இருமையும் எளிதில் புலப்படாது. (“பிளவு” என்பதை ஒரு புரிதலுக்காகவே பயன்படுத்துகிறேன்.) ஏனெனில், இயல்பை வெளிப்படுத்தாதவாறு “அவர்களின் சுயம்” ஆட்கொள்கிறது. ஆம், அன்றாடம் என்பது “அவர்களின்”(they) சுயத்தால் கட்டமைக்கப்படுகிறது. ஹைடெக்கேர் மொத்தமாக மொழி அடிப்படையிலேயே அவர்கள்(they) என்று சொல்கிறார்.
அன்றாடம் முழுமையும் மக்களோடுடனே இருக்கிறோம் இதனை being with(உடனிருப்பு) என்கிறார். ஒவ்வொரு நாளும் கிழமையும் இவர்களோடு இருத்தலிலே கழிந்துகொண்டிருக்கிறது. ஹைடெக்கர் சொல்லும் போது சராசரியாக நம் சுயத்தின் “அங்கே இருத்தலானது”(da-sein), அவர்களின் சுயமாகவே(they self) ஆகவே வெளிப்படுகிறது. They-self ஐ அப்படியே சொன்னால் “அவர்களின் சுயம்”. “அவர்கள்” என்றால் அதில் மக்கள், கோட்பாடுகள், கொள்கைகள், பிறரால், சமூகத்தால் நமக்கு ஏற்படும் சின்ன சின்ன தடுமாற்றங்கள், அதற்கேற்றபடி மாறும் நம் பாவனைகள், எல்லாம் அடங்கும். அதாவது நான் என்பது நானில்லை. நான் என்பவன் அவர்களாகவே வெளிப்படுகிறேன். “அவர்கள்” என்றால், மற்றவர்கள் மட்டுமல்ல. அதில் மொத்த சமூகமும் அடங்கும்.
உதாரணமாக, கைபேசியில் பணம் அனுப்பும் வசதியிருக்கிறது. இவ்வசதி மக்களிடையே புழக்கத்திற்கு வந்து ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளாகிறது. எனக்கு போனில் பணம் அனுப்புவதில் இன்றுவரை விருப்பமில்லை. ஏனென்று தெரியவில்லை. ஆனாலும், இன்று அதை உபயோகிக்கிறேன். செல்கிற இடமெல்லாம் டீ கடை முதற்கொண்டு ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என சில்லறை காசுகளை ஒரு நொடியில் கைபேசியில் அனுப்பிகொண்டிருக்கிறார்கள். நண்பனிடம் செலவிற்கு நூறு ரூபாய் கேட்டால் கூட கைபேசியிலே பணம் அனுப்புகிறேன், உன்னிடம் ஆன்ட்ராய்டு கைபேசி இல்லையா என்று கேட்கிறான். நான் இப்போது அந்த வசதியை உபயோக்கிக்கிறேன் என்று சொல்வதை காட்டிலும் உபயோகிக்க நிர்பந்திக்கபட்டேன் என்று சொல்லலாம். இந்த முடிவு சமூகத்தால் திரும்பத் திரும்ப வலியுறுத்தப்படுவதால் நான் செய்துகொண்ட சமரசம். சமூகம் என்றவுடன் மிக விரிவாகவெல்லாம் சிந்திக்கவேண்டியதில்லை. நம் அருகில் வருவதை, என் கண் முன்னால் வருவதே, வருபவர்களே நான் காணும் சமூகம். இதில் சாதி மத பேதமில்லை. இவ்வாறான நிர்பந்தமான சூழ்நிலையில் வீழ்ந்தேனில்லையா? இது “அவர்களால்” அவர்களுக்காக நான் என் சொந்தமான கருத்தாக கொண்டிருந்த முடிவை மாற்றிக்கொண்டது. ஆயிரம் பேர் அனைத்து வசதியுள்ள கைபேசி வைத்திருக்கும்போது கூட்டத்தில் நான் மட்டும் ஒன்றுமில்லாமல் வானத்தைபார்த்த படி நின்றிருந்தால்? அப்படியான கேலிக்குரிய சூழ்நிலையிலிருந்து தப்பிக்க மொத்தமாக என்னை ஒப்புகொடுத்து தடுக்கி விழுந்தேன் இல்லையா? கைபேசி ஒரு சாதாரண உதாரணம் தான். ஆனால், நுட்பமாக கவனித்தால் எதிலெல்லாம் விழுந்திருக்கிறேன், தப்பிக்க வழியின்றி குதிக்கபட்டிருக்கிறேன் என்று யோசித்தால் “அவர்கள்” என்பது வேறெதுவுமில்லை. அது “நான்” தான்.
அதாவது, என் இருப்பானது “அவர்களோடு” இனைந்துவிடுகிறது. “அவர்களின்” சுயம்(they self) தான் என் சுயம். “அதுவே நான்”. ஆகவே, “நான்” அவர்களின் நானாகவே வாழுகிறேன். அவர்களுக்காகவே இருக்கிறேன். அவர்களுக்கான பொய்யான பொருந்தாத இயல்பை கொண்டிருக்கிறேன்.
“அவர்களே நான்” எனும் போது எப்படி சொந்தமான சுயத்தை அதன் இயல்புப்படி செயலாற்ற முடியும்?. என் சொந்தமான இயல்பில் எனக்கு பிடிக்கும், பிடிக்கவில்லை என்ற எந்தக் காரணமும் இடம்பெறுவதில்லை. அதேநேரம் தேடிப்பெறவேண்டியதுமல்ல. “அவர்களின்” சுயத்தை நமக்குள் நம்மால் கண்டறிய முடியுமென்றால் தன்னதிகாரமுள்ள இருத்தலின்(authentic dasein) சாத்தியங்கள் வெளிப்படும். ஒரு புதிய பாதை அமையலாம். அப்படி வெளிப்படும் போது அதில் பிறருடைய, மக்களுடைய கருத்தோ அல்லது சமூகத்தினால், கோட்பாட்டினால் நமக்கு ஏற்பட்ட பழக்கமோ, பிறவற்றினால்(other) ஆட்கொண்ட எதுவும் என் மனதிலும், வெளியிலும் இல்லாமல், உள்ளது உள்ளபடி சுயம் இயல்பாக வெளிப்படும். இது ஹைடெக்கரின் கருத்துப்படி தன்னதிகரமாக “அங்கே” இருத்தல்(authentic da-sein) எனப்படும். சொந்தமான சுயமாக இல்லாத பட்சத்தில் என் இருப்பானது எப்படி இவ்வுலகில் நிலைநாட்டபடுமென்றால் மேற்சொன்னபடி அவர்களின் நானாக, தன்னதிகாரமற்றதாக இருத்தலாக(Inauthentic Da-sein), இருக்கும்.
இவ்வாறான தன்னதிகாரமற்ற இருத்தலும்(inauthentic da-sein) இருத்தல் தான். ஆனால், அது என் சொந்தமான இருப்பல்ல. அது அவர்களின் இருப்பு, ஒரு ஊர் மக்களின் இருப்பு, “அவர்களின்” அபிப்ராயத்தின் இருப்பு. அப்படி இருப்பதால் ஒன்றும் தவறில்லை. அங்கே இருத்தலில்(da-sein) சரி, தவறு என்றவொன்றில்லை. ஹைடெக்கர் புறநிலை காரணிகள் தான் முழுக்கக் காரணமென்று அறிந்து மொத்தமாக ஒதுங்க சொல்லவில்லை. இருப்பின் இயல்பெனப்படுவது தன்னதிகாரத்தோடும் அல்லது தன்னதிகரமற்றும் இருக்கும். அவ்வளவே. ஏனெனில், “அது இருக்கிறது அதனால் வெளிப்படுகிறது”.
ஹைடெக்கர் இருத்தலியலில் உள்ள சிக்கலை மட்டும் வேறுபடுத்தி காட்டுகிறார். இங்கே ஒன்றை நான் குறிப்பிட்டாகவேண்டும். மீண்டும் மீண்டும் “இருத்தல்” என்ற சொல் அடிபடுகிறது. வாசிப்பவர்களுக்கு சலிப்பையும் ஏற்படுத்தலாம்.
இப்போது நான் எழுதும்போது கூட ஹைடெக்கர் வெகுஜனத்திற்கானவர் தானா? அவரின் தத்துவார்த்த கருத்துகள் அனைவருமே புரிந்துகொள்ளக்கூடியதா என்ற கேள்வியும் எழுகிறது. குறிப்பிட்ட சில நூறு பேருக்கு மட்டுமே ஹைடெக்கர் பயன்படுபவரா? என்ற வினாவும் எழாமலில்லை.
அதுவிருக்க, “நான்” அல்லது “சுயமானது” என்பது “அவர்களாகவே” வெளிப்படும் வரை தன்னிச்சையான சூழ்நிலையில் நம்மால் நமக்கு சொந்தமான இருத்தலில் நிலைகொள்ள முடியாத படி எறியப்படுவோம்(thrown).