நேற்று இரவு தூத்துக்குடியில் உள்ள திரையரங்கத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அசுரன்  பார்த்துள்ளார். அப்போது படம், அவரை வெகுவாக கவர்ந்ததால் படக்குழுவைப் பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.

எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை நாவலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம் அசுரன். நான்காவது முறையாக தனுஷ்- வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியிருக்கும் இப்படத்தைத் தாணு தயாரித்து உள்ளார்.

இதில் தனுஷுக்கு ஜோடியாக மஞ்சுவாரியோர் நடித்து உள்ளார். அது மட்டுமின்றி அபிராமி, கென், பாடகர் டீ,ஜே, பசுபதி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தைப் பார்த்த பல அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் வெற்றி மாறனின் இயக்கத்தையும், தனுஷின் நடிப்பையும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். மிகவும் குறுகிய காலத்தில் எடுக்கப்பட்ட தரமான படம் என தனுஷின் ரசிகர்களும் அவரைக் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில், “அசுரன் படம் மட்டுமல்ல பாடம்! பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும், சாதி வன்மத்தைக் கேள்வி கேட்கும் துணிச்சல் காரன்! கதை, களம், வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றிமாறனுக்கும், அதில் வாழ்ந்து காட்டியிருக்கும் தனுஷுக்கும் பாராட்டுகள்” என வாழ்த்தியுள்ளார்.

இதற்கு நடிகர் தனுஷ், “காலம் ஒதுக்கி அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மிக்க நன்றி ஐயா. பெருமகிழ்ச்சி அடைகிறோம்” என ட்விட் செய்துள்ளார்.

இதற்கு முன்பு பரியேறும் பெருமாள் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் படக்குழுவினரைப் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.