இன்று காலை 10:30 மணிக்கு மாநிலங்களவை கூடியது. அவை தொடங்கிய சில நிமிடங்களிலேயே அதிமுக எம்.பிக்கள் “அஞ்சல் துறை தேர்வுகளை தமிழில் நடத்த வேண்டும்” என்று கோஷங்களை எழுப்பினர். “இவ்விவகாரம் பற்றி பேச உங்களுக்கு உரிய நேரம் ஒதுக்கப்படும்; இவ்வாறு அமளி செய்வது முறையல்ல; இதனை அனுமதிக்க முடியாது” என்று அவைத்தலைவரும் துணைக்குடியரசுத் தலைவருமான வெங்கைய நாயுடு கேட்டுக்கொண்டார். மேலும் “இவ்வாறு செய்தால் இதனை ஜீரோ ஹவரில் எழுப்ப முடியாது” என்றும் தெரிவித்தார். ஆனாலும் அதிமுக எம்.பிக்கள் தொடர்ந்து கோஷமிட அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் 11 மணி முதல் 12 மணிவரை கேள்வி நேரம் என்றும், 12 மணி முதல் 1 மணிவரை ‘ஜீரோ ஹவர்’ என்று கூறப்படும். இந்த ஜீரோ ஹவரில் அவைத்தலைவரிடம் முன்னனுமதி பெற்று கேள்விகளை எழுப்பலாம். அதற்கு அரசு தரப்பு பதிலளிக்கும்.

இந்த ஜீரோ ஹவரில் அஞ்சல்துறை தேர்வுகளை தமிழில் நடத்துவது பற்றி கேள்வியெழுப்ப அவைத்தலைவர் முன்னரே அனுமதி அளித்தும் அதிமுகவினர் கேள்வி நேரத்தை வீணடிக்கும் நோக்கில் இவ்வாறு அமளியில் ஈடுபட்டது வருந்தத்தக்கது. மாநிலங்களவை அறிவின் அவை என்று அழைக்கப்படும். மக்களவை விவாதங்களைவிட இங்கு நடைபெறும் விவாதங்கள் மிகவும் உற்றுநோக்கப்படும். இந்நிலையில் அதிமுக உறுப்பினர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் தமிழகத்து தரப்பினை எடுத்துரைக்காமல் இவ்வாறு செய்தது கேள்வி நேரத்தை நடைபெறாமல் செய்துள்ளது.