உலகம் முழுவதும் நேற்று(பிப்ரவரி 14) காதலர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 44 வீரர்கள் வீர மரணமடைந்துள்ளனர். வெயில், மழை, பனி என்று பாராமல் நாட்டின் எல்லையில் நின்று நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காக தங்கள் உயிரையே தியாகம் செய்கின்றனர் ராணுவ வீரர்கள்.

 

 

44 வீரர்கள் உயிரிழப்பு 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்மு-வில் இருந்து 78 வாகனங்களில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், நேற்று ஸ்ரீநகர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். அவர்கள், புல்வாமா மாவட்டம் அவாந்திபோரா என்ற பகுதிக்கு வந்தபோது, 350 கிலோ வெடிபொருகளை ஏற்றிக்கொண்டு எதிரே வந்த கார், சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் வந்த பேருந்தின்மீது மோதியது. இந்தத் தாக்குதலில், இதுவரை 44 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர்களில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்த வீரர்கள். மேலும் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயங்களுடன் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். பாகிஸ்தானைச் சேர்ந்த  ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி ஆதில் அகமது தார் என்ற 22 வயது இளைஞர்தான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார்.

தீவிரவாதிகளின் இந்தத் தாக்குதலுக்கு பிரதமர் மோடி, அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். உலக நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பலரும் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  இதைதொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் தெற்கு காஷ்மீர் பகுதியில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லைப் பகுதிகளில் உள்ள கிராமங்களையும், ராணுவ வீரர்களின் இருப்பிடங்களையும் குறிவைத்து பாகிஸ்தான் தீவிரவாதிகளும், பாகிஸ்தான் ராணுவத்தினரும் தொடர்ந்து அத்துமீறித் தாக்குதல் நடத்திவருகிறார்கள். இது தினமும் நடந்துகொண்டிருக்கும் ஒரு விஷயமாக இருப்பதால், இதுகுறித்து எந்த மக்களுக்கும் கவனம் செலுத்துவதில்லை. ஒரு வாரத்திற்குக் குறைந்தது 2 வீரர்களாவது எல்லையில் உயிரிழந்து வருகின்றனர்.

 

தொடரும் தாக்குதல் சம்பவங்கள்

2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதியன்று புது டெல்லியில் உள்ள இந்திய பாராளுமன்ற கட்டிடத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாகிச் சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் வாஜ்பாய் ஆட்சியில் நடந்தது. 2016 ஜனவரி 2ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட்டில், இந்திய ராணுவம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 7 பாதுகாப்பு அதிகாரிகள் கொல்லப்பட்டனர். தற்போது, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது நேற்று நடத்தியுள்ளது ஜெய்ஷ் இ முகமது இயக்கம்.  இந்த தக்குதல் சம்பவங்கள் மோடி ஆட்சியில் நடந்துள்ளது.

நாட்டைப் பாதுகாக்கும் விஷயத்தில் பா.ஜ.க அரசு முற்றிலும் தோல்வியடைந்து விட்டன என்பதையே இந்தத் தாக்குதல்கள் உறுதிப்படுத்துகின்றன. பாதுகாப்பு படை வீரர்கள் நிறைந்த காஷ்மீரிலேயே 350கிலோ வெடி மருந்தை ஏற்றிகொண்டுவந்து இவ்வளவு பெரிய தாக்குதலைத் தீவிரவாதிகள் நடத்த முடியும் என்றால் மற்ற பகுதிகளின் நிலை என்ன? என்ன என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் தீவிரவாதிகளின் இந்தத் தாக்குதல் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது.

 

 

மிகவும் வேண்டப்பட்ட நாடு

பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று (பிப்ரவரி 15) காலை நடந்தது. அமைச்சர்கள் அருண் ஜெட்லி, ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், நிர்மலா சீதாராமன், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். “பாகிஸ்தானுக்கு எதிராக அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுக்க வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டும். தீவிரவாதத்தை பாகிஸ்தான் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறது. உலக நாடுகள் மத்தியில் கோரிக்கை வைக்க இந்தியா அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். பாகிஸ்தானுக்கு கொடுத்த மிகவும் வேண்டப்பட்ட நாடு என்ற அந்தஸ்தை திரும்ப பெற்றது இந்தியா. இதனால் வர்த்தக ரீதியாக அனைத்து உறவுகளும் தடைபடும்” என்று தெரிவித்தார் அருண் ஜெட்லி.