எப்போதெல்லாம் பாஜகவிற்கு நெருக்கடி ஏற்படுகிறது அப்போதெல்லாம் ரஜினி அவதரிப்பார். எப்பொதேல்லாம் தமிழகம் மத்திய மாநில அரசின் கொடுமைகளுக்கு எதிராக கொதித்து எழுகிறதோ அப்போதெல்லாம் அரசை நியாயப்படுத்தக் களத்தில் இறங்குவார். தூத்துக்குடி துப்பாகிச்சூடு உள்பட பல பிரச்சினைகளில் மத்திய அரசிற்கான இந்த மூன்றாம் தர வேலையைக் கூச்சமின்றி செய்து வருபவர் ரஜினி

இன்றைக்கு ரஜினி திடீரென பத்திரிகையாளர்களை வரவழைத்து தேசிய குடியுரிமை சட்டம் பற்றி திருவாய் மலர்ந்தருளவேண்டிய அவசியம் என்ன? மேலே முதலாளியிடம் இருந்து உத்தரவு வந்துவிட்டது என்று அரத்தம். நேற்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஒரு கோடி கையெழுத்துக்களைப் பெறும் இயக்கத்திற்குத் தலைமையேற்று அவரே தெருவில் இறங்கி மக்களை சந்தித்தார். தமிழ்நாடு முழுக்க இந்த கையெழுத்து இயக்கத்தின் மூலம் மக்களிடம் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கும்( AAA)தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி), மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேடு( என்.பி.ஆர்) ஆகியவற்றிற்கு எதிராக பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்ல, இந்த சட்டத்தின் மூலம் இஸ்லாமியர்களிடம் பதட்டத்தை ஏற்படுத்தி இஸ்லாமியர்களையும் இந்துக்களையும் பிரிக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு மு.க. ஸ்டாலின் செக் வைத்துள்ளார். ஒரு கோடி தமிழர்களின் கையெழுத்தால் மதத்தால் பிளவு படுத்தமுடியாத ஒன்றுபட்ட தமிழகம் என்ற குரலை அவர்  முன்னெடுக்கிறார். இது இந்தியா முழுக்க விரிவுபடுத்த வேண்டிய இயக்கம்.

இந்த இயக்கம் தீவிரமடைந்ததும் உடனடியாக ரஜினி களம் இறக்கப்படுகிறார். ‘’ தேசிய மக்கள் தொகை பதிவேடு முக்கியம்..  சி.ஏ.ஏ இன்னும் அமுல் படுத்தப்படவில்லை, ஆலோசிக்கப்பட்டுத்தான் வருகிறது… இதற்கு எதிராக மாணவர்களை அரசியல்வாதிகள் தூண்டிவிடுகிறார்கள்……….மாணவர்கள் ஆராயாமல் போராட்டத்தில் இறங்கக்கூடாது.. சிஏஏ இஸ்லாமியர்களுக்கு எதிரானது எனப் பீதி கிளப்பப்படுகிறது.. அதனால் அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை’’ என்றெல்லாம் பா.ஜ.க தலைவர்களும் பிரச்சாரகர்களும் சொன்ன பொய்களை எந்தக் கூச்சமும் இல்லாமல் ரஜினி அவிழ்த்துவிடுகிறார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடும் இயக்கங்களிடமிருந்து பொதுமக்களைத் திசை திருப்ப பா.ஜ.க பயன்படுத்தும் மலிவான ஆயுதம்தான் ரஜினி. இந்த வேலையை இதற்குமுன்பும் அவர் பலமுறை செய்திருக்கிறார். இப்போதும் செய்கிறார். ரஜினிக்கு என எதன்மீதும் சொந்தக் கருத்துகள் இல்லை. பா.ஜ.க எப்போது சாவி கொடுக்கிறதோ அப்போது அதற்கேற்ப ஆடுவார்.

ஒரு நடிகனுக்கு மக்கள் அளித்த ஆதரவை ஒரு மக்கள் விரோத ஆட்சிக்கு பூட்ஸ் துடைக்க ரஜினி பயன்படுத்துவதன் மூலம் தனது ரசிகர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் துரோகம் இழைக்கும் வேலையில் இறங்கியிருக்கிறார். ஒரு சூப்பர் ஸ்டார் அமித்ஷாவிற்கு அடியாளான அவலம்.