நடிகர் விஜய்மீது இப்போது நடத்தப்படும் வருமான வரி விசாரணைகளுக்கு முகாந்திரம் இருக்கிறதா இல்லையா என்பது வேறுவிஷயம். லைக்கா, அன்பு செழியன், விஜய்யின் சம்பளம் என எல்லாவற்றிலும் சட்டத்திற்கு உட்பட்ட கேள்விகள் இருக்கலாம். இவர்களுக்கு மட்டுமல்ல தமிழ் சினிமா துறையின் பண விவகாரங்கள் அனைத்திலும் ஒரு நிழல் நடவடிக்கை உண்டு என்பது யாருக்கும் தெரியாத ரகசியம் அல்ல.

ஆனால் இப்போது விஜய் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுவது அவரை அரசியலை நோக்கி இழுத்துவரவேண்டும் என்பதே, இது பா.ஜ.கவின் தமிழகம் தொடர்பான ’மெகா ப்ராஜெக்ட்’ டின் ஒரு பகுதி என்றே நினைக்கிறேன். ரஜினி பா.ஜ.கவின் ஆதரவு பிம்பமாகவும் கமல் மைய பிம்பமாகவும் அரசியலுக்கு கொண்டுவரப்பட்டு விட்டார்கள். மிஞ்சியிருக்கும் பெரிய நட்சத்திரம் விஜய். இவரையும் கொண்டு வந்துவிட்டால் பா.ஜ.கவின் இந்த மெகா ப்ராஜெக்டின் பாதி நிறைவேறிவிடும். இதனால் பா.ஜ.கவிற்கு என்ன பலன்?

ரஜினியோ கமலோ தன்னை அரசியல் ரீதியாக ஆதரிக்கவேண்டும் என பா.ஜ.க நினைக்கவில்லை. அப்படி ஆதரித்தால் அது தமிழ் நாட்டில் எடுபடாது என்பதும் அவர்களுக்கு நன்கு தெரியும். மாறாக அவர்களின் ஒரே திட்டம் தமிழகத்தின் இரண்டு திராவிட கட்சிகளின்  வாக்கு வங்கியை சிதறப்படிதாகும். அப்போதுதான் அதன் அரசியல் ஸ்திர தன்மையை குலைத்து எதிர்காலத்தில் தனக்கான ஒரு இந்துத்துவா வான்க்கு வங்கியை எதிர்காலத்தில் உருவாக்க முடியும். ஜெயலிதாவின் மறைவுக்குப் பின் அதிமுக ஆட்சியின் நிச்சயமற்ற நிலையினைப் பயன்படுத்தி அதன்மீது சவாரி செய்துகொண்டே அந்தக் கட்சியை கொஞ்சம்கொஞ்சமாக விழுங்க வேண்டும். அதே சமயம் அதிமுக எதிர்ப்பு வாங்கு வங்கியையும் முதல் தலைமுறை வாக்காளர்களையும் திமுக பக்கம் முழுமையாக போய்விடாமல் தடுக்க வேண்டும். இதற்காக உருவாக்கப்படும் வெவ்வேறு பொம்மைகள்தான் இந்த நடிகர்கள்.

தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளுக்குப் பிறகு கணிசமான வாக்கு வங்கியுடன் உருவான கட்சி விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக. வேறு எந்த புதிய  கட்சியும் அந்த வாக்கு வங்கியை நெருங்கமுடியவில்லை. எதிர்கட்சி தலைவர் என்ற அந்தஸ்துவரை சென்றார் விஜய காந்த், எம்.ஜி.ஆர் என்ற நடிகர் ஒரு பெரிய கட்சியை உருவாக்கி ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு ஒரு எதிர்கட்சி என்ற அந்தஸ்திற்கு விஜய காந்த் என்ற இன்னொரு நடிகர் வருகிறார். ஆனால் தேமுதிக எந்த கொள்கை அடித்தளமும் இல்லாத அரசியல் விபரீதம் என்ற உண்மை சீக்கிரமே வெளிப்பட்டது. தேமுதிகவை ஊக்கப்படுத்திய ஜெயலலிதாவே அதை அழிக்கவும் செய்தார். இப்போது பிரேமலதாவின் வழிகாட்டுதலில் அந்தக் கட்சி பா.ஜ.கவின் தொங்கு சதையாக மாறிவிட்டது.

ஆனால் திமுக என்ற வலிமையான இயக்கத்திற்கு எதிராக தமிழ்நாட்டில் நடிகர்கள்தான் அரசியல் செய்து வந்திருக்கிறார்கள், எனவே அவர்களை நாம் ஒரு கருவியாக பயன்படுத்தலாம் என பா.ஜ.க திட்டமிடுகிறது என்று தோன்றுகிறது.

இன்றைய சூழலில் ஒரு நடிகர் அரசியல் அபிலாஷைகளுடன் பா.ஜ.கவை ஆதரித்தாலும் சரி அல்லது எதிர்த்தாலும் சரி அவர்கள் செயல்பாடு இறுதியாக பயன்படப்போவது பா.ஜ.கவிற்குத்தான். அதற்குத்தான் அரசியலை நோக்கி விஜய் உந்தித் தள்ளப்படுகிறார். கமலஹாசனை எப்படி அதிமுகவினர் உந்தித்தள்ளினார்களோ அதேபோல. இது வெறுமனே நிர்பந்தத்தால் மட்டும் உருவாவதல்ல. திரைமறைவில் பல்வேறு பேரங்களும் இதில் இருக்கலாம். இன்றைய தமிழகத்தின் அரசியல் உரையாடல் ஏன் நடிகர்களை மையமாக வைத்து நிகழ்த்தப்படுகிறது என்பதை யோசியுங்கள்.. களத்தில் நிற்கும்  பிரதான கட்சிகளின்மேல் எந்தக்கவனமும் குவியாமல் இந்த பொம்மைகளின் மேல் அத்தனை கவனமும் குவிக்கபடுகிறது.

கமல் .ரஜினி, விஜய் ஆகியோர் தனிக் கட்சி கண்டோ அல்லது அவர்களுக்குள் கூட்டணி அமைத்துக்கொண்ட்டோ ஆளுக்கு ஐந்து சதவிகித வாக்குகளைப் பிரித்தால்கூட போதும் தமிழ்நாட்டில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாமல் போய் அதன்மூலமாக உருவாகும் அர்சியல் குழப்பங்கள் வழியே தனக்கு ஒரு களம் கிடைக்கும் என்பதுதான் பா.ஜ.கவின் தொலைநோக்குத் திட்டம்.

ரஜினியின் பா.ஜ.க ஆதரவு சவடால்கள், விஜய்யின் பா.ஜ.க எதிர்ப்பு வசனங்கள், கமலின் மைய்ய நிலைப்பாடுகள் எல்லாமே ஒரே நாடகத்தின் வெவ்வேறு அங்கங்கள். இதில் இந்த ரெய்டு எல்லாம் விஜய்யை அரசியல் ’லைம் லைட்’ டிற்குகொண்டு வருவதற்கே. இதில் அன்புச் செழியன், வருமானவரித்துறை எல்லாம் துணை கதாபாத்திரங்கள்.