நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளைப் பரிசீலிக்க ஐஏஎஸ் அதிகாரி செந்தில்ராஜ் நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.

ஊதிய உயர்வு, குறிப்பிட்ட கால வரம்பில் பதவி உயர்வு, முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு, முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்துள்ள அரசு மருத்துவர்களுக்கு கவுன்சிலிங் நடத்தி மீண்டும் பணியிடம் வழங்க வேண்டும், பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் கடந்த நான்கு நாட்களாக அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ,மூன்று பெண் மருத்துவர்கள் உட்பட ஆறு மருத்துவர்கள் சாகும் வரை உண்ணாநிலை போராட்டத்தைக் கடந்த 4 நாட்களாக ,சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையிலிருந்து வருகிறார்கள். அவர்களில் நான்கு மருத்துவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போராட்டம் தொடர்கிறது.

கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் நடத்தும் வேலைநிறுத்த போராட்டம் தொடர்பாக அரசு மருத்துவர்களுடன் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. அரசு எங்களுடைய கோரிக்கையை ஏற்காதவரைப் போராட்டத்தைக் கைவிட மாட்டோம் எனப் போராட்டக்காரர்களும் தெரிவித்துள்ளனர்.

”வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்; மக்களின் நலன் கருதி மருத்துவர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும்” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளைப் பரிசீலிக்க ஐஏஎஸ் அதிகாரி செந்தில்ராஜ் நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.