இது அரசியலில் “அவமானப்படுத்தும்” காலம். தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஒருவரை ஒருவர் மிஞ்சும் வகையில் கீழ்த்தரமான சொற்களில் திட்டிக்கொள்வது வேட்பாளர்களிடையே சாதாரணம்.
உதாரணமாகக் கடந்த ஜனவரியில் உத்திர பிரதேச பாஜக எம்எல்ஏ ஒருவர் மாயாவதியை அவர் “பெண் இனத்திற்கே ஒரு கறை” என்றும் “திருநங்கையை விட மோசமானவர்” என்று பகுஜன் சமாஜ் கட்சிக்கும் சமாஜ்வாடி கட்சிக்கும் இடையேயான கூட்டணி பற்றி இழிவாக விமர்சித்தார்.
ஆபாச திட்டுகளும் ஜாதி ரீதியான அவச்சொற்களுமே அரசியல் களத்தில் பெரும் கோபத்தை வரவைப்பதாக உள்ளன. ஆனால் ஒருவரின் மனநிலையைப் பற்றி சொல்லும் வசை சொற்களால் இங்கு யாரும் வருத்தமோ கோபமோ அடைவதில்லை.
சமாஜ்வாடியின் தலைவர் அகிலேஷ் பிரதமர் மோடியை விமர்சிக்கும் விதமாக “பாஜகவினருக்கு மனச்சிதைவு” என்று சொன்னார்.
இது தேர்தல் காலமாக இல்லாவிட்டாலும் ஒருவரின் மனநலம் பற்றிய வார்த்தைகள் அரசியலில் அவமானப்படுத்துவதற்குப் பிரயோகிக்கிறார்கள். கடந்த வருடம் பாஜக எம்பி ஷோபா கரண்ட்லஜேவும் உள்துறை மந்திரி ஆர். ராமலிங்க ரெட்டியும் ஒருவரை ஒருவர் ‘நிம்ஹான்ஸ்’ எனும் புகழ்பெற்ற மனநல மருத்துவமனைக்குச் செல்லுமாறு வசை பாடினார்கள்.
கடந்த ஏப்ரலில், திரிபுராவின் முதலமைச்சர் மேற்கு வங்காள முதல்வரான மம்தா பானர்ஜியை “உங்கள் மூளையை மருத்துவமனையில் பரிசோதியுங்கள்” என்றார். சில மாதங்கள் கழித்து மீண்டும் இவ்வாறு திட்டினார்.
பிரதமர் மோடியும் ஒரு பொது நிகழ்ச்சியில் ராகுல் காந்தியின் அறிவுத்திறனைப் பற்றிக் குறிப்பிடும்போது 40 இல் இருந்து 50 வயதுள்ள மூளை வளர்ச்சியில்லாதவர்களுக்கு ஏதேனும் மருத்துவ பயிற்சி முறைகள் உள்ளனவா என்று கேட்டார்.
இந்திய உளவியாளர்கள் சங்கம்(IPS) இந்த விஷயத்தை தற்போது தேர்தல் ஆணையத்திடம் கொண்டு செல்ல முடிவெடுத்துள்ளது. அவர்கள் இதுபோன்று பேசும் அரசியல்வாதிகளின் மீது நடவடிக்கை எடுக்குமாறு எழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். 7000க்கு மேற்பட்டோர் உறுப்பினர்களாக இருக்கும் இச்சங்கம் 1947 ஆம் ஆண்டு இந்திய மக்களின் மனநிலையை மேம்படுத்தும் நோக்கத்தில் அமைக்கப்பட்டது.
தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த கடிதத்தில் இதுபோன்ற வார்த்தை பிரயோகங்கள் “மனிதத்தன்மையற்ற, மிகவும் இழிவான, பாகுபாடுகள்” கொண்டவையாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது போன்ற சொற்களை அரசியல்வாதிகள் பயன்படுத்துவதைக் கடுமையாக ஆட்சேபிக்கிறோம்.
தங்களைத் தலைவர்கள் என்றும் சொல்லிக்கொள்ளும் இவர்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. இது போன்ற வார்த்தைகளை இவர்கள் சொல்வதைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்று எந்த ஒரு அரசியல்வாதியையும் கட்சியையும் குறிப்பிடாமல் அக்கடிதம் இருந்தது.
இந்தியா, குறைபாடுகள் கொண்டவர்களின் உரிமைக்காக ஐக்கிய நாடுகளின் சபையில் கையெழுத்திட்டுள்ளது. மேலும் மன நல மருத்துவ சட்டம் இந்தியப் பாராளுமன்றத்தில் 2017 அன்று செயல்படுத்தப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தனர்.
“அரசியல்வாதிகளின் இந்த வசைகள் மக்களிடையே மன நோயைச் சுற்றியுள்ள சமூகக் களங்கத்தை மேலும் அதிகரிக்கும்” என மும்பையைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர் ஷகீதா கூறியுள்ளார்.
“நாம் யாரையும் அவர்கள் ‘புற்றுநோய் வந்தவர்கள்’ என்று திட்டுவதில்லை தானே?” அப்படி இருக்க மனநோயும் மிகக் கடுமையான நோய் தான் அதனால் பாதிக்கப்பட்டவர்களை மிகவும் கவனமாகவும் அக்கறையுடனும் கவனித்துக்கொள்ள வேண்டும்” என மும்பையைச் சேர்ந்த மனநல மருத்துவர் ருச்சிதா சந்திரசேகர் கூறினார்.
பொதுவெளியில் எப்படிப் பேசவேண்டும் என்ற அடிப்படை நாகரீகம் துளி கூட இல்லாதவர்கள் தான் நமக்குத் தலைவர்களாக நம்மிடையே வாக்கு கேட்டு வருகிறார்கள். ஒருவரின் நோயைச் சொல்லித் திட்டுவது என்பது இருப்பதிலேயே கீழ்த்தரமானது. அவர்கள் மாறுவது என்பது கடினம். தேர்தல் ஆணையம்தான் இதற்கு கண்டனத்தையும் சட்டங்களையும் இயற்றி அவர்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.