முதல்முறை பிஜேபி கட்சி வெற்றிபெற்றபோது எனது நண்பர் சொன்னார், இனி நமது நாட்டை ஏழைகளே இல்லாத நாடாக மாற்றிவிடுவார்கள் என்று அது அப்போது புரியவில்லை, ஆம் நிச்சயமாக அஸ்ஸாமிலும், டெல்லியிலும் ஒரு இந்துத்துவக் கட்சி ஏழைகளை, அன்றாடம் உழைக்கும் பாட்டாளிகளை, சிறுபான்மையர்களை, ஒடுக்கப்பட்டவர்களை, இஸ்லாமியர்களை எரித்து கொன்றுதான் போட்டுவிட்டது. அவர்களின் வாழ்நிலையை ஒரே நாளில் புரட்டிப்போட்டு உள்நாட்டிற்குள்ளேயே அகதியாய் இடமாறும் அளவுக்குக் கொண்டுபோய் நிறுத்தியுள்ளது. இந்த நிலமெங்கும் ஒடுக்கப்பட்டவர்களின் பொருளாதார, சமூகவளத்தை தீதான் தழுவிக்கொள்கிறது இதுதான் வரலாறெங்கும் பதிவாகி உள்ளது. இதை ஒரு மாடலாக வைத்து எங்கும் இதே பாணியில் எல்லோரையும் மிரட்டிவிடலாம் என நினைக்கின்றது இந்த ஒற்றை மலர் ஆட்சி. அது நிச்சயம் கருகிடத்தான் வேண்டும், கருணையில்லாமல் கடுகி ஒழியத்தான் வேண்டும்.
பொருளாதாரச் சரிவு, சுகாதாரக் கட்டமைப்பு சரியில்லை, நீராதாரக் கட்டமைப்பு சரியில்லை, பண பரிவர்த்தனையில் பிரச்சனை, வளங்கள் அனைத்தும் தனியாருக்குத் தாரைவார்த்தல் முறையில்லை, வேலையின்மை, உற்பத்தி குறைவு, பொருட்களின் கிடு கிடு விலையேற்றம், பண வீக்கம் அதிகரித்தல், மாநில அரசுடன் சுமூக உறவில்லை அல்லது அவர்களை அடிமையாக்குவது, நீதி, பாதுகாப்பு, காவல் என எந்த முக்கியத்துறைசார்ந்த நல்ல நடவடிக்கையுமில்லை, எல்லாவற்றையும் மையத்தை நோக்கிக் குவித்தல், அனைத்துத் தூண்களையும் கரையான்கள் அரித்துவிட்ட அவலங்களைச் செய்தல் என்ற பல குற்றச்சாட்டுகளை நாம் அவர்களிடம் எடுத்துவைத்தாலும் அவர்களோ குருடான கோழி குப்பையைச் சீய்ப்பது போல் ஒரே விசயத்தை வைத்துக் கொண்டு நம் அனைவரையுமே திசைத் திருப்பிக்கொண்டே உள்ளனர், அனைத்து அறிவுசார்ந்த தளங்களுக்கும் அவர்கள் தரும் சொற்களே தீனியாக அமைந்துவிட்டன.
இச்சூழலை எதிர்கொள்ள நல்ல தலைமையுடன் மக்களைத் திரட்டிப் போராட முடியாத நிலை வந்துவிடுமோ என்று பயந்த நிலையில் மாணவர்கள் தன்னெழுச்சியாக குடியுரிமை சட்டத்திற்கு எதிராக எழுந்த போராட்டத்தையும் சிதைத்து, போரட்டத்தில் பொதுச் சமூகத்திலிருந்து இஸ்லாமியர்களைத் தனித்து பிரித்து காண்பிக்கும் வேலையை நமது ஊடகங்களே செய்து கொடுத்துவிட்டன. ஆனாலும் எழுச்சியில் மிகவும் அமைதியாக அகிம்சைமுறையில் நடந்த போராட்டத்தை வன்முறையால் கலவரத்தைத் தூண்டிவிட்டது முழுக்க முழுக்க இந்துத்துவ சங்க் பரிவார் அமைப்புகளைச் சார்ந்தவர்களும், காவல் துறையும்தான் இந்தப் பூசணிக்காயை அவர்களால் சோற்றில் மறைக்கவே முடியாது. ஆனால் இங்குள்ள அறிவு ஜீவிகள் அதற்கு எத்தனை எத்தனை சப்பைக் கட்டுகளும் முட்டுக் கொடுப்புகளும் இவர்களுக்கு அதிகாரத்தின் கட்டை விரல் சூப்புவதற்கு அத்தனை விருப்பம்.
அவர்கள் வலிமைகொண்டு தாக்க ஆரம்பித்துவிட்டார்கள், எதிரி பலமாகி விட்டார்கள், பாசிசம் தலை எடுக்கின்றது, நாஜி படைகளைப் போல் வருகிறார்கள் என்று எதிரியை மிகப் பெரிய ஆளாக சித்தரிப்பதும் எரிச்சலை தருகின்றது, அவற்றை விடுத்து மக்கள் சக்திமுன் எந்த அதிகாரத்தாலும் ஒன்று செய்ய முடியாது, மக்களுக்கு யார் அவற்றை எடுத்துக்கொண்டு செல்வது, பேரியக்கமாக இதை முறைப்படுத்த தவறிய எல்லா மாநில அரசுகளும் தவறிழைத்தே உள்ளார்கள். இதில் பொதுப்புத்திக் கொண்ட மக்களின் மன நிலையைத்தான் புரிந்துகொள்ள முடியவில்லை, அது மௌனித்துக் கிடக்கின்றது ஏன்? என புரியவில்லை.
இந்தியாவெங்கும் ஒரு வன்முறையை கட்டவிழ்க்க நினைக்கின்றது இந்த ஆளும் இந்துத்துவ அரசு அதற்காக வெவ்வேறு பெயரில் 142க்கும் மேற்பட்ட நிறுவன அமைப்புகளை அமைத்து வரிந்து கட்டிக்கொண்டு வேலையை ஆரம்பிக்க நினைக்கிறார்கள் அதற்கு என்ன செய்யப் போகிறோம் நாம்.
டெல்லியில் உயிரிழந்த எண்ணிக்கையைக் கூட சரியாக நம்மிடம் தெரிவிக்காத சதிக் கூட்டத்தாரிடம் மாட்டிக் கொண்டோமா? என்று தோன்றி விடுகின்றது. அவர்கள்தான் நமக்கான நிலத்தையும், பொருளாதாரத்தையும், கல்வியையும், உணவையும், சுகாதாரத்தையும் கையில் எடுத்துக்கொண்டவர்கள். இறந்தவர்களில் எல்லோரும் யாராக உள்ளார்கள் என்று பார்த்தால் அதிகமானோர் ஏழை அன்றாடங்காட்சிகள். எத்தரப்பிலும் பணக்காரர்கள், பெரும்பான்மை சாதிகளைச் சார்ந்தவர்கள் இறக்கவில்லை. பணக்காரர்கள் சாக வேண்டும் என்று சொல்லவில்லை இதுபோன்ற எல்லா வன்முறைகளும், சட்டத் திருத்தங்களும் அதிகமாக ஏழைகளையும் சிறுபான்மையரையுமே பாதிப்படையச் செய்வதை பார்க்கலாம். அதுவும் குறிப்பாக இந்த ‘இந்து’ பெரும்பான்மை வாதத்தை எடுத்துரைக்கும் கட்சி ஆட்சியில் அதிகம் பணக்கார, பெரும் தனியார் நிறுவனங்களுக்கே அதிகமான சலுகைகளும் சட்டங்களும்.
இந்த உலகில் நிலம், சூரியன், காற்று, நீர் என பௌதீக பொருட்கள் அனைத்தும் இயற்கையில் அனைத்து ஜீவனுக்கும் பொதுவாக இருக்க வேண்டும். அங்கு இயற்கையில் பிரிவினையில்லை, இவற்றை காக்க மனிதனால் ஏற்படுத்தப்பட்ட அரண்தான் அரசு என பெயரிடப்பட்டு இன்றைக்குக் கட்சி ஆட்சியாக உருமாறி, கடும் நிறுவன மய அரசாங்கமாக, அனைத்து அதிகாரங்களையும் வலைத்துக் கொள்ளும் அரசாக சுய நலம்கொண்டு இயங்குகின்றது. நாமே ஏற்படுத்திக்கொண்ட அரண் நம்மை காக்காமல் பெரும்பான்மை கொள்கையை வைத்துக்கொண்டு வாதம் செய்து ஏழை எளிய சிறுபான்மை மக்களை வஞ்சிக்கின்றது. எதற்கு இந்த அரசு. அதை தூக்கியெறிய பொதுமைச் சமூகம் என்ன செய்யப் போகின்றது.
சிக்கலைத் தீர்க்க வேண்டிய அரசுதான் சிக்கலை மேலும் மேலும் சிக்கலாக்கி கொண்டுள்ளது. அந்த மக்களை முற்றும் கைவிட்டுவிட்டு இன்று அமைதியாய் இருக்கச் சொல்லுவது என்ன வகையான செயலுக்குள் அதை அடக்குவது. இஸ்லாமியர்கள் தீவிரவாத எண்ணம் கொண்டவர்கள் என தொடர்ந்து கட்டமைக்க நினைத்தவர்களுக்கு டெல்லி மற்றும் அனைத்து போராட்டங்களும் அமைதியாக அகிம்சை முறையில் நடந்தது அவர்களை இன்னும் கோபமடையச் செய்தும், தோல்வி பயத்தாலும், தாம் நினைத்தைவைகள் சரியான போக்கில் நடக்காதது குறித்தும் எரிச்சலாகி நேரம் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு டெல்லி ஒரு சரியான வாய்ப்பாகி கட்டற்ற வன்முறையை காவல் துறையுடன் இணைந்தே நடத்தியுள்ளதற்கான சாட்சிகள் சாதாரண மக்களுக்கு தெரியுமளவுக்கு வந்து விட்டன. இதற்காக அவர்கள் அடுத்த வாய்ப்பையும் எதிர் பார்ப்பார்கள்.
நாம் இங்கே அவர்கள் எனக் குறிப்பது முழுக்க முழுக்க இந்துத்துவ சங்க் பரிவார் கூட்டத்தையே சொல்லுகிறோம். ஒரு முகநூல் பதிவிலும், ஒரு தொலைக்காட்சி நிகழ்விலும் டெல்லியில் நடந்த வன்முறையை அக்குவேறு ஆணி வேராக பிரித்து எழுதியவர்களும் சொன்னவர்களும் சொல்ல மறுத்த விசயம் யார் இச்செயலை செய்தது என்பதைத்தான். முஸ்லீம் கூட்டத்தார்(Muslim mob) and முஸ்லீம் அல்லாத கூட்டத்தார் Non-Muslim Mob என்றே வகைமை படுத்துவதில் ஒரு சூழ்ச்சியுள்ளது. அல்லது இரு தரப்பு என சொல்லி தாங்கள் எந்த தரப்பிற்கு ஆதரவென சொல்லி விடுகின்றனர். அதனால்தான் நாம் இக்கட்டுரையில் அவர்கள் எனச் சுட்டினாலும் அது இந்துத்துவ தீவிரவாதிகளையே குறிக்கும் சொல்லாக பயன் படுத்துகிறோம். மேலும் எதிர் தரப்பினர் அதாவது இஸ்லாமியர்கள் மிகவும் அமைதியாகவே போராட்டத்தை முன்னெடுத்து சென்றனர் அதிலும் எல்லா மக்களும் கலந்து கொண்டாலும் நாம் அதை இஸ்லாமியர்கள் ஏற்பாடு செய்த போராட்டக் களம் என்றே குறித்து பேசுகிறோம். இப்படியான் மாய்மாலச் சொல்லாடல்கள் அனைத்தும் இந்துத்துவ சார்பு ஊடகத்தாரிடமிருந்து அதிக அளவில் வருவதும் வருந்தத்தக்க விசயமே. இவ்வகையில் ஊடகத்தின் வழியாக ஒரு பொய்யான கருத்தை திரும்ப திரும்ப சொல்லி அதை உண்மை ஆக்குவதற்கு பார்க்கிறார்கள். அதுவே மாய்மாலம் என புரிந்தால் சரி.
ஏற்கனவே உலகத்தார் குறிப்பாக அமெரிக்கா கொஞ்சமாக ஏற்படுத்திய இ|ஸ்லாமாபோபியாவை இன்னும் அதிகமாக்க இந்துத்துவ ஆட்களும், அரசு சார்பு ஊடகங்களும் முயல்கின்றது. அது மட்டுமா, மையத்தை நோக்கி அரசு நிர்வாகக் நிறுவன கட்டமைப்பையும், நீதித்துறையையும், கல்வித்துறையும் திசைத் திருப்பி அதன் வழியாக பண்பாட்டு போர் தொடுக்க, செயல்கள் தீவிர அடைந்துள்ளன. அதில் எல்லோரிடமும் இருக்கும் சாதிய, மத உணர்வுகளை தட்டி எழுப்பி புதிய இந்துராட்டிரம் அமைக்க பார்க்கிறது ஆளும் இந்துத்துவ நடுவண் அரசு. அதை இஸ்லாமிய வெறுப்புணர்விலிருந்து கட்டியெழுப்ப முயற்சி எடுக்கிறபோது அது மிகை வெறுப்புண்ர்ச்சியாகி தோல்வியை தழுவுகிறது, ஓட்டு பெற முடியாது போகின்றது அதனால் வெறுப்படைந்த ஒரு ஓநாயைப் போல் அசுர வேட்டைக்கு தயாராகி கட்சியைத் தாண்டிய அமைப்பைக் கொண்டு இது போன்ற வன்முறைச் சம்பவங்களை நிகழ்த்தி சாம்பிள் பார்க்கிறார்கள்.
அவர்கள் இந்து மதத்தின் குறியீடுகளாக சொல்லும் சூலம், சுவஸ்திக், ஓம், தீபம், தாமரை எல்லாமே பௌத்த குறியீடுகளாகவே உள்ளன. அதில் சில சைவ சமயத்தை சார்ந்தவையாகவும் உள்ளன. ஆரம்ப காலத்தில் சமயம் என்ற சொல்லே சமம்+இயம் என்றுதான் அமைந்திருக்க வேண்டும் அப்படியிருந்தால் சமம் இந்து மத அடிப்படையில் இல்லையே அங்கே பிறப்பின் அடிப்படையில் வருண வேறுபாடுகள் உள்ளனவே.
எனக்கென்னவோ பின் வந்தவர்களே மனுவில் உள்ள பன்னிரெண்டு அத்தியாயத்தையும் சுவீகரித்து அதை இந்து மத நூலாக ஆக்கிக் கொண்டார்களோ என்று தோன்றுகிறது. காரணம் அதிலும் இதுதான் இந்து மதம் என குறிப்பிட்டுள்ளதாக யாரும் குறிப்பிடவில்லை, மேலும் அதில் ஆரிய பண்பாட்டு கூறுகளே மிஞ்சியுள்ளன.ஆரிய வர்த்தம் கொடுத்த மனு வாழ்வியல் சடங்கு சம்பிரதாயங்கள் மாறாதது ஆனால் ஸ்மிருதி என்பது மனிதர்களால் கட்டமைக்கப்பட்டவை ஆகையால் அது காலத்திற்கு ஏற்ப மாறக்கூடியது அவ்வாறு பார்த்தால் அந்த வேத காலத்தில் சொல்லப் பட்ட எந்த ஒன்றும் இன்றைய காலக் கட்டத்திற்கு பொருந்தாது என மனுவே சொல்லியுள்ளதுதான் நிதர்சனம்.
தமிழும் கருநாடகமும் இந்து மத மாய்மாலத்தை அதிகமாக எதிர்க்கிறார்கள். லிங்காயத்தும், பௌத்தமும், சித்த மரபும், கொஞ்சம் சைவ மரபும் இந்துத்துவத்திற்கும், வேத மரபுக்கும் எதிரான கருத்தமைவை கொண்டுள்ளன அதனால்தான் அவை இவற்றை முழுதாக எதிர்க்கின்றன.
இவர்களையும் ஆலிங்கனம் செய்ய பார்ப்பனிய ஆட்களை இங்கே களம் இறக்கிறார்கள். அது திராவிட கருத்தியலாலும், இடதுசாரிய அமைப்பாலும் முற்றிலும் முறியடிக்கப் படுகின்றன.
இதில் குறிப்பாக இந்துராஷ்டிரம், RSS அமைப்பால் அமைக்க நினைத்த போதே, இஸ்ரேலுக்கும், ஜெர்மனிக்கும் சென்று இராணுவப் பள்ளிகளை பார்த்து அதுபோல இங்கே அமைப்பை கட்ட நினைத்தவர்கள். நான்கு எதிரிகளை உருவாக்கி கொள்கிறார்கள், அவர்களில் முதலில் கம்யூனிஸ்ட், இஸ்லாமியர்கள், கிருத்துவர்கள், தலித்துகள் அதன் பின்னடுக்கில் தற்போது திராவிடர்கள் என எழுதி வைத்து விட்டும் இவர்களை அழித்துதான் இந்துராஷ்டிரம் அமைக்க முடியும் என இன்னமும் நினைத்துக் கொண்டும் அதற்கு பன்னிரெண்டு தொகுதி கொண்ட புத்தகங்களையும் எழுதி வைத்து விட்டு, ஆட்சியை வைத்து கொண்டு இந்திய பன்முகத்தன்மையை அழித்து ஒற்றைத் தன்மைக்கு கொண்டு வர முயற்சி நடந்து கொண்டே இருக்கிறது பொது புத்தியில் அது அமைந்து விட்டதாக ஒரு பிம்பத்தை கட்டமைக்கவும், அதனை குறித்த பயத்தையும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள். உண்மையில் இப்பெரும் சனத்திரளில் அது சாத்தியமில்லை என்பதை அவர்கள் அறியவேயில்லை. இதை விட இந்த மாய்மாலத்தை எதிர் தரப்பினரும் அவர்கள் வெற்றி பெற்று விட்டதாக பறைசாற்றுவதுதான் மிகவும் எரிச்சலாக உள்ளது.
இந்துராஷ்டிரம் என்ற சாத்தியமில்லாத உட்டோப்பியன் கனவை இந்தியாவெங்கும் 5,75,000க்கும் மேல் உள்ள கிராமங்களை முழுதும் ஆய்வு செய்து சொன்னால் மட்டுமே நாம் நம்ப முடியும். இன்னும் சகோதர அமைப்பிலும் சில சில சச்சரவுகளுடனும்தான் இந்த சாதிய, மத அமைப்புகள் இயங்கி கொண்டுள்ளன. வேற்றுமையில் ஒற்றுமையும், ஒற்றுமையில் வேற்றுமையும் கலந்த இந்திய ஆன்மாவின் அடியாழத்தில் இன்னும் அன்பும் கருணையும் மிச்சமிருக்கிறது என்ற நம்பிக்கையை நாம் சில நாட்களுக்கு முன் ஒருமித்த குரலில் பார்த்தோம். குடியுரிமைச் சட்டம் வந்த அடுத்த அடுத்த எதிர்ப்பு போராட்டங்களில் பார்த்த விசயமே இவை. நன்கு அவதானித்துதான். இஸ்லாமியர்களை தனித்து விட வைக்கும் உள்ளடி வேலைகளையும் அவர்கள் செய்தனர்.
இந்து என்ற சொல்லே எந்த காலத்திலிருந்து பயன் பாட்டுக்கு வந்துள்ளது என பார்த்தால் நமக்கு மிக எளிமையாக புரியும். கிரேக்கர்களும் குறிப்பாக பெரிசியர்களும் அதாவது இன்றைய ஈரானியர்களும் சிந்து நதிக்கு அப்பால் வாழ்பவர்கள் என குறிக்க 6 நூற்றாண்டு வாக்கில் பயன்படுத்தப் பட்ட சொல்தான் இண்டுஸ், அரேபியர்கள் அல்-ஹிந்து எனவும் பயன் படுத்தியுள்ளனர் எனவும் விக்கிலீக்ஸ் மிக தெளிவாக குறிப்பிட்டுள்ளது. இதில் ஐரோப்பிய, பிரித்தானியர்கள்தான் ஆட்சி வசதிக்காகவும் இனக்குழுக்கள் வரையறைக்கும் சிந்து வெளியிலிருந்து வந்த குழுக்கள் என்று குறிக்க பயன் படுத்திய சொல்லெனவும் சொல்லுகிறார்கள். புராணீக சொல்தான் என்றால் நமக்கு அப்படியான சொல்லகராதிகளில் தேடி சொல்ல முடியவில்லை. இல்லை என தீர்க்கமாக சொல்லி விடலாம். அக்காலத்தில் இஸ்லாமியர்கள் ஆட்சி செலுத்திய பகுதிகளில் வெள்ளைக்கார கம்பெனிகள் செய்த பிரிவுதான் எனவும் சிந்துவெளி நபர்கள் அது மறுவி இந்து என சொல்லப் பட்டுள்ளன. சரி யாரை இவர்கள் இந்துவாக ஏற்றுக் கொள்வார்கள் எனப் பார்த்தால் அதில் இன்னும் மிக மோசமான பிரிவினைகள் உள்ளன. இச்சொல் சனாதன, பார்ப்பனிய, ஆரிய சொல்லாடலாக 19ம் நூற்றாண்டுக்கு பிறகே எடுத்தாளப் பட்டுள்ளது.
இங்கிருந்து பின்னோக்கி மனிதகுல நூறாண்டுகள் வரலாற்றை எடுத்து பார்த்தால் ஒருவரும் இன்று அவர்கள் இருக்கும் சாதியோ, மதமோ, இனமோ சார்ந்து இருந்திருக்க மாட்டார்கள் என அறுதியிட்டுக் கூற முடியும். மிகப் பெரிய கலப்பினமாகத்தான் மனிதகுலம் உருவாகி வந்துள்ளன. இதை மறுக்க முடியாது அப்புறம் எப்படி இவர்கள் இந்து, இஸ்லாம், கிருத்துவம் என மத அடையாளங்களை கொண்டு மட்டும் வாழுகிறார்கள்.
நண்பன் நகைச்சுவையாக கேட்பான் பல இஸ்லாமிய நாட்டிலிருந்து வரும் பெட்ரோல் மட்டும் வேண்டுமாம் ஆனால் அவர்களுக்கு நிலம் தர மறுப்பார்களா? இது கூட கூற்றாக வைக்க முடியாத பிரிவுதான். இருந்தாலும் இவர்களின் வெறுப்புணர்ச்சியை பொது சனப் புத்தியில் திணிக்கத்தான் இவ்வளவு வேலையும். அவர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூறாவது ஆண்டை நோக்கி நகர்கிறார்கள் அதற்குள் சில செயல்பாடுகளை நிகழ்த்த முடியுமா? என பார்க்கிறார்கள். இந்து நாடு என்ற மாய்மாலத்தை உடைத்து சுக்கு நூறாக்க எதிரணிக்கு என்ன வகையான செயல் திட்டங்கள் உண்டு. அது கேள்விக் குறியே.
1990களிலேயே நான் எனது ஊரான திருவாரூர் மாவட்டத்திலுள்ள முத்துப்பேட்டையில் பார்த்த விசயங்களை வைத்து அனுபவ மொழியில் சொன்னால் அவர்கள் அன்றே தொடங்கி, விதைக்க ஆரம்பித்தார்கள் அது நாடு முழுக்க செயலானதும் தெரிந்த ஒன்று. அப்போதெல்லாம் காவிக் கொடியைக் கண்டாலே சூடாகும் தோழர்கள் ஏன்? அசட்டுத்தனமாக இருந்து விட்டார்கள், இன்று ஓரணியில் ஏன்? நிற்க மறுக்கிறார்கள் அவர்களுக்குள்ளும் அந்த ஒற்றைத் தன்மை பிசாசு பிடித்து விட்டனவா? தொடர்ந்து கம்யூனிஸ்ட்டுக்களை, தலித்களிடமிருந்தும், பெரியாரிஸ்ட்டுக்களை கம்யூனிஸ்ட்டுக்களிடமிருந்து பிரிக்கும் வேலையை கன கச்சிதமாக உருவாக்கி விட்டார்களா? அல்லது கருத்தியலாக அதிலேயே அப்பிரிவினை அடிப்படைகள் அமைந்து விட்டனவா? என்ற கேள்விகள் பல எழும்பும் நேரத்தில். உப நிடதங்களை எடுத்துப் பார்த்தால் அதில் உடல், வாழ்வு, பொருட்களின் நிலையாமை கருத்துக்களே அதிகமுள்ளன, கீதையையும் எடுத்து படித்துப் பார்த்தால் நிலையாமை கருத்தியல் வாசகங்கள் உள்ளன. அப்படியிருக்க ஆன்ம தத்துவத்தைப் பார்த்தாலும் ஆன்மாவிற்கு எந்த அடையாளங்களுமில்லை அது தனித்த அழியாத பொருளென கொள்கிறது.
அப்போ எதில்தான் இந்த இந்துத்துவ தத்துவம் இருக்கிறதென தேடினால் எங்குமில்லை அவர்களின் மனுவில்கூட இந்துராஷ்ரம் இல்லை, அக்கூறுகளை கொண்ட ஏதாவது தெரிந்தால் யாரும் சொல்லலாம். எனக்கு நான் தேடிய வரையில் இல்லை. இவர்களே உருவாக்கிய கருத்தியேலே இது முழுக்க முழுக்க புரட்டுக் கதைகளே. இராம ராச்சியத்திலும் இது போன்ற பிரிவினையான இடமுண்டா என்றால் இருக்க வாய்ப்பில்லை கம்பன் நமக்கு சொன்ன ராமன் குகனை ஏற்றவனே. அதிலும் கூர்ந்தால் பார்ப்பனிய கருத்தாக்கங்கள் வழியே கட்டமைக்கப் பட்ட மாய்மாலமே இந்து நாடு என்ற சொல்லாடல். அவற்றையும் அவர்கள் தந்த குடியுரிமை சட்டத்தின் மாய்மால கட்டுக் கதைகளையும், பொய் புரட்டுகளையும் தவிடு பொடியாக்க ஒரு தேசிய அளவிலான எதிர்க் கட்சிகள் சேர்ந்து அமைப்பு கட்டுவதும், அனைத்து மக்களை திரட்டுவதுமே சரியான வழியாகும் இத்தோடு சேர்த்து அவர்களின் உண்மை முகத்தை காட்டும் வண்ணம் அவர்கள் அணிந்திருக்கும் இந்துத்துவ பெரும்பான்மை வாதம் என்ற முகத்திரையை கிழித்து காண்பிக்க ஒரு நல்ல முன்னெடுப்பும் வேண்டும்.
சத்யமேவ ஜயதே!