கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என சபாநாயகர் அறிவித்திருந்த நிலையில், முதல்வர் குமாரசாமி, சித்தராமையா உட்பட ஆளும் கட்சி எம்.எல்.ஏக்கள் இன்னும் அவைக்கு வரவில்லை. இன்று மாலை 6 மணிக்குள் கர்நாடகவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரி சுயேச்சை எம்எல்ஏக்கள் இரண்டு பேர் தொடுத்த வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்துள்ளது உச்ச நீதிமன்றம். இதனால் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுமா? என்பது தெரியவில்லை.
கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏக்கள் 15 பேர், தங்களது பதவியை அண்மையில் ராஜினாமா செய்தனர். இதையடுத்து குமாரசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியதைத் தொடர்ந்து, கடந்த வியாழக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தை குமாரசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரு தினங்களில் தீர்மானத்தின் மீதான விவாதம் மட்டும் நடைபெற்ற நிலையில் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று (ஜூலை 22) சட்டப்பேரவையில் பேசிய ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள், கூட்டணி அரசை கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக குற்றம்சாட்டினர். அதைதொடர்ந்து, “அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் முடிவு எடுக்கும்வரை, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டாம். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த 2 நாட்கள் கால அவகாசம் வேண்டும்.” எனச் சபாநாயகர் ரமேஷ் குமாரிடம் கோரிக்கை விடுத்திருந்தார் முதல்வர் குமாரசாமி. இதனை சபாநாயகர் ஏற்க மறுத்துவிட்டார்.
ஆளும் கட்சி மற்றும் எதிர் கட்சிகளிடையே விவாதம், எதிர்ப்பு, அமளி, தர்ணா என நேற்றிரவு 11.40 வரை சட்டப்பேரவை நீடித்தது. இதையடுத்து, இன்று மாலை 4 மணிக்குள் விவாதத்தை முடித்து, 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டுமெனச் சபாநாயகர் உத்தரவிட்டு, அவையை ஒத்தைவைத்தார்.
இதற்கிடையில் குமாரசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தது போன்ற ஒரு கடிதம் வெளியானது. ஆனால் அக்கடிதம் போலியானது என்றும் இதன் பின்னணியில் பாஜக இருப்பதாகவும் குமாரசாமி குற்றஞ்சாட்டினார்.
இதனிடையே கொறடாக்கள் உத்தரவுக்குப் பின்னும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையில் கலந்துகொள்ளாத நிலையில், அவர்களை ஏன் தகுதி நீக்கம் செய்யக் கூடாது எனக் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இன்று காலை 11 மணிக்கு சபாநயகர் முன்பு நேரில் ஆஜராக அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு அவர் உத்தரவிட்டிருந்த நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் நேரில் ஆஜராகவில்லை. மாறாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க 4 வார அவகாசம் கேட்டு கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
இன்று வாக்கெடுப்பு நடைபெறும் என சபாநாயகர் அறிவித்திருந்த நிலையில், வாக்கெடுப்பு நடைபெற்றால் குமாரசாமி அரசு கவிழும் சூழல் உள்ளது. கர்நாடகா அரசியல் சூழலில் இன்று உச்சக் கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.