பிரதமர் மோடியும் அவர் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களும் நேற்று பதவிப்பிரமாணம் செய்துகொண்ட நிலையில், இன்று (மே 31) மாலை கூடுகிறது புதிய அமைச்சரவை கூட்டம்.

2019 நாடாளுமன்ற தேர்தலில் 353 தொகுதிகளைக் கைப்பற்றி பாஜக கூட்டணி தனிப்பெரும்பான்மையாக அபார வெற்றி பெற்றது. இதனால் இரண்டாவது முறையாக பிரதமராகும் வாய்ப்பைப் பெற்றார் நரேந்திர மோடி. இந்நிலையில் நேற்று (மே 30) மாலை 7 மணிக்கு இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றார் மோடி. அவருடன் இணைந்து அமைச்சரவையில் இடம்பெறுபவர்களும் நேற்று பதவியேற்றனர்.

மோடி தலைமையிலான அமைச்சரவையில் 25 கேபினேட் அமைச்சர்கள், 24 இணையமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இதன்தொடர்ச்சியாக, அமைச்சரவையின் முதல் கூட்டம் இன்று மாலை கூடுகிறது. இந்தக் கூட்டத்தில், புதிய அரசின் கொள்கைகள், திட்டங்கள், பட்ஜெட் போன்ற பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.