உள்ளாட்சி தேர்தலை ஏன் இன்னும் நடத்தாமல் இருக்கிறீர்கள்? என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
2011ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பதவிக்காலம் 2016 அக்டோபர் 24ஆம் தேதியுடன் முடிவடைந்தது. மூன்று ஆண்டுகள் கடந்தநிலையில், இன்னும் உள்ளாட்சி தேர்தலை நடத்தப்படவில்லை. இந்நிலையில், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி ஆகஸ்ட் இறுதியில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது மாநில தேர்தல் ஆணையம். இதைதொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்காளர் பட்டியலைத் தயார் செய்வதற்கான வழிமுறைகளையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
இதற்கிடையில், தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிடுமாறு மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கினை தொடர்ந்தார். இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மறு வரையறை நடந்து வருவதாகவும், இந்தப் பணி நிறைவடைந்து தொகுதி மறுவரையறை குறித்த அறிவிப்பாணை அரசிதழில் வெளியிடப்பட்ட பின்னரே உள்ளாட்சித் தேர்தல் நடத்த வாய்ப்பிருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இன்று மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. உள்ளாட்சி தேர்தலை ஏன் இன்னும் நடத்தவில்லை என நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு, மக்கள் தொகை கணக்கெடுப்புபடி தொகுதி மறுவரை செய்யும் பணி நடந்ததால் தான் தேர்தலை நடத்த முடியவில்லை எனத் தமிழக அரசு சார்பில் மீண்டும் அதே பதில் அளிக்கப்பட்டது.
தேர்தலை நடத்துவது தொடர்பான இறுதி பணிகளை எப்பொழுது செய்வீர்கள் என்பதை இரண்டு வார காலத்திற்குள் பதிலளிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.