மூடப்பட்ட இரும்பு தாது உருக்கு தொழிற்சாலை மீண்டும் திறக்கபட்டதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் மாவத்தில் உள்ள நாகராஜ கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த மக்கள் நேற்று நடைப்பெற்ற மக்களவை தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த நாகராஜ கண்டிகை கிராமத்தில் சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்ட இரும்பு தாது உருக்கு தொழிற்சாலை மீண்டும் திறக்கப்பட்டது. இதற்கு அந்த கிராம மக்கள் ஒட்டு மொத்தமாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தினர். ஆனால் ஆலை மூடப்படவில்லை. இதனால் அவர்கள் வீடுகளில் கருப்பு கொடிகளை ஏற்றியதோடு தேர்தலில் ஓட்டுப்போடுவதில்லை எனவும் முடிவு செய்தனர்.
இந்நிலையில் வாக்குப்பதிவு நாளான நேற்று அந்த கிராம மக்கள் வாக்களிப்பதற்காக அங்குள்ள பள்ளியில் வாக்குசாவடி அமைக்கப்பட்டது. சுமார் 537 வாக்காளர்களை கொண்ட அந்த கிராமத்தில் வாக்குப்பதிவு நேரம் துவங்கிய நேரத்தில் இருந்து யாரும் ஓட்டுப்போட முன்வரவில்லை. ஓட்டு போடும் பூத்களிலும் ஏஜென்ட் பணிக்கு எந்த கட்சியைச் சேர்ந்தவர்களும் வரவில்லை. தேர்தல் பணிக்காக வந்தவர்கள் மட்டுமே வாக்குசாவடியில் மக்களுக்காக காத்துக் கொண்டு இருந்தனர்.
இதனையடுத்து வாக்குசாவடி அதிகாரிகள், தேர்தல் அதிகாரிகளுக்கு மக்கள் வாக்களிக்க வராத தகவலை தெரிவித்தனர். தொடந்து தேர்தல் அலுவலர்களும், போலீசாரும் பொதுமக்களிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்கள் மனம் மாறாததால் அதிகாரிகளின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. பொதுமக்களும் ,”ஆலையை மூடினால்தான் வாக்களிப்போம்” என திட்டவட்டமாக கூறினர். தொடர்ந்து அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதி வரையில் எந்த பலனும் இல்லை. கிராம மக்களும் வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணித்து விட்டனர்.