நாடுமுழுவதும் உள்ள ஐஐடி கல்லூரிகளிலிருந்து கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் 2461 மாணவர்கள் தங்களது படிப்பைப் பாதியிலே நிறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியிட்டுள்ளது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம். இதில், பெரும்பான்மையானவர்கள் பட்டியலின, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் என்று தெரிவிக்கின்றன புள்ளிவிவரங்கள்.
தொழில்நுட்ப கல்விக்கு நாட்டிலேயே முன்னோடி கல்வி நிறுவனமாக இருந்து வருவது ஐஐடி நிறுவனங்கள். அதனால், ஐஐடியில் படிக்க வேண்டும் என்பது மாணவர்கள் அனைவரின் கனவு என்று கூறலாம். மேலும் எப்படியாவது ஐஐடி கல்லூரியில் பயில வேண்டும் என பல மாணவர்கள் தங்களின் பள்ளிப் பருவம் முதல் தீவிர முயற்சியில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில், இந்தக் கல்வி நிறுவனங்களிலிருந்து அதிக மாணவர்கள் தங்களின் படிப்பைப் பாதியில் நிறுத்திவிடுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தத் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் மாநிலங்களவையில் தாக்கல் செய்த அறிக்கையில், ஐஐடியிலிருந்து கடந்த 2017ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 2461 மாணவர்கள் தங்களின் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. படிப்பைப் பாதியில் நிறுத்திய 2461 மாணவர்களில் 57 சதவீதம் பேர் டெல்லி மற்றும் காரக்பூர் ஐஐடி கல்லூரிகளைச் சேர்ந்தவர்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் ஐஐடி டெல்லியிலிருந்து 782 பேரும், ஐஐடி கராக்பூரிலிருந்து 622 பேரும் படிப்பைப் பாதியில் விட்டுள்ளனர்.
அதேபோல சென்னை ஐஐடியிலிருந்து 190 பேர் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளனர். இந்த எண்ணிக்கையில் 47.5 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். அதாவது இந்தப் பிரிவைச் சேர்ந்த 1,171 மாணவர்கள் ஐஐடி நிறுவனங்களிலிருந்து படிப்பை முடிக்காமல் பாதியிலேயே வெளியேறியுள்ளனர் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான காரணம் குறித்து மாநிலங்களவை உறுப்பினர் விஜயாசாய் ரெட்டி எழுப்பிய கேள்விக்கு, சொந்த காரணங்கள், உடல்நிலை, வேறு கல்லூரிகளுக்கு மாறுதல், வெளிநாடுகளுக்கு மேற்படிப்புக்குச் செல்லுதல், உயர்கல்வியின் போதே வேலை கிடைத்தல் ஆகியவை காரணமாக இருக்கலாம் என மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் விளக்கமளித்தது. இருப்பினும் இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்கள் அதிக அளவில் இடைநின்றிருப்பது மேலும் சில சந்தேகங்களை எழுப்புகிறது.
பல்கலைகழங்களில் அதிகரித்து வரும் சாதிய பாகுபாடு இதற்குக் காரணமாக இருக்கலாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இடஒதுக்கீட்டின் மூலம் கல்லூரியில் சேரும் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்கள் சாதியின் பெயரால் வன்கொடுமைகளுக்கும், தீண்டாமைகளுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்.
உடன் படிக்கும் மாணவர்களாலும், கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களாலும் சாதிய பாகுபாட்டால் புறக்கணிக்கப்படுகிறார்கள் பட்டியலின, பழங்குடியின மாணவர்கள். இதன்காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது, படிப்பைப் பாதியில் நிறுத்திவிடுவது போன்ற சம்பவங்கள் கல்லூரிகளில் தொடர்ந்து நடந்துகொண்டுவருகின்றன.