இந்தியன் 2 படப்பிடிப்புத்தளத்தில் விபத்து நடந்தது எப்படி என கமலஹாசனை நடித்துக்காட்டும்படி காவல்துறையினர் சொன்னது அராஜகத்தின் உச்சகட்டம். அவரை உளவியல் ரீதியாக துன்புறுத்தி அவமானப்படுத்தும் முயற்சி.

நடந்த விபத்து மிகவும் துயரமானது. மொத்த படப்பிடிப்புக் குழுவினரையுமே இந்ததுயரம் வெகுவாக பாதித்திருக்கும். அதிலும் கமல் தன்னுடைய துயரத்தை வெளிப்படையாக பதிவு செய்திருந்தார். நடந்தது ஒரு கொலையோ கொள்ளையோ சதியோ அல்ல. தள அமைப்பாளர்கள் ஏதேனும் தவறு செய்தார்களா என அங்குள்ள சாதனங்களை ஆய்வு செய்வதன்மூலமும்  சம்பந்தப்பட்ட கண்ட்ராக்டர் மற்றும் தொழிலாளிகளை விசாரிப்பதன் மூலம் காவல்துறையினர் சில முடிவுகளுக்கு வரமுடியும். விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படலாம்.  அதை கமல்ஹாசன் நடித்துக்காட்ட வேண்டும் என்பது எந்த விசாரணை முறை? இதன்மூலம் அவர்கள் எதைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்கள். அப்படி நடித்துக்காட்டி கண்டுபிடிக்கக்கூடிய விஷயமா அது?

சினிமா படப்பிடிப்பு விபத்துகளை மட்டுமல்ல, எந்த விபத்தையும் இதுபோல காவல்துறையினர் நடித்துக்காட்டச் சொன்ன வரலாறு உண்டா? நாளை விமான விபத்து, ரயில் விபத்து, பேருந்து விபத்து, கார் விபத்து, இரண்டு சக்கர வாகன விபத்துகளில் எல்லாம் சாட்சியாக இருந்தவர்களை இப்படி நடித்துக்காட்டச் சொன்னாலும் சொல்வார்கள். அல்லது சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரிகள் கமல் நேரில் எப்படி நடிப்பார் என காண ஆசைப்பட்டவர்களோ என்னவோ? இதெல்லாம்  ஒரு அபத்த நாடகத்தின் காட்சிகள்போல இருக்கின்றன.

உண்மையில் அந்த விபத்தை கண்ணால் கண்டவர்கள்கூட காரணத்தை உடனடியாகப்ன் புரிந்துகொள்ள முடியாது. இந்த விஷயத்தில் தன் மீது நடத்தப்படும் இந்தவகையிலான விசாரணைகுறித்து கமலின் எதிர்ப்பு மிக மிக நியாயமானது. தமிழக காவல்துறை மிக மிக அற்பத்தனமாக நடந்துகொள்கிறது. நிச்சயமாக தானாக அவர்கள் இதைச் செய்யவில்லை. மேலிடத்திலிருந்து வரும் அழுத்தம் அவர்களை இந்த அளவு கேலிகூத்தான, முறைகேடான நடவடிக்கைகளுக்குத் தூண்டுகிறது. கலைஞரை நள்ளிரவில் பலவந்தமாகக் கைது செய்து அவமானப்படுத்தியவரின் வழி வந்தவர்கள்தானே இவர்கள்? இதில் கமல்ஹாசன் எம்மாத்திரம்? ஆனால் நாளை ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்த விசாரணையில் இன்று அதிகாரத்தில் இருப்பவர்களையெல்லாம் மரணம் எப்படி நடந்தது என நடித்துக்காட்டச் சொன்னால் என்னவாகும் என்பதை சிந்திக்க வேண்டும்….

விஜய மீதான வருமானவரித்துறை விசாரணையும் இதே போன்றதுதான்.

அவரை நெய்வேலியில் படப்பிடிப்புத்தளத்திலிருந்து கைதியைபோல அழைத்து வருகிறார்கள். அதற்குப்பிறகும் தொடர் ரெய்டுகள். கடைசியில் அவர் வருமான வரியை எல்லாம் ஒழுங்காக கட்டினார் என்று செய்தி வருகிறது. அப்படியானால் இது வேறு ஏதோ நோக்கத்திற்காக நடத்தப்பட்டசோதனை என்பது தெளிவாக தெரிகிறது. அந்த நோக்கம்தான் என்ன?

ஒன்று, கமல், விஜய் போன்றவர்கள்மீது தொடர்ந்து கவனத்தை திசை திருப்புவதன்மூலம் தங்கள்மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து கவனத்தை எடப்பாடி குழுவினர் திசை திருப்புகிறார்கள்.

இரண்டு, கமல் –விஜய் இருவரையும் அரசியல் ரீதியாக தீவிரப்படுத்த விரும்பும் பா.ஜ.கவின் திட்டத்திற்கு ஏற்ப இந்த வேலையை செய்துகொண்டிருக்கிறார்கள்.

கமல்-ரஜினி-விஜய் என தமிழகத்தின்  அரசியல் விவாதக்களம் கட்டமைக்கபடுவது மிகத்தெளிவான நோக்கங்கள் கொண்டது.