கர்நாடகா அரசியலில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஆளும் மத சார்ப்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி இடையே விரிசல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா கட்சிகளைச் சேர்ந்த 14 எம்.எல்.ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 21 அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர்.

கர்நாடகாவில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 12 பேர் நேற்று முன்தினம் திடீரென ராஜினாமா செய்தனர். இதனால் சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை இழந்த குமாரசாமி தலைமையிலான அரசு கவிழும் நிலை உருவாகியுள்ளது.

ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள, மும்பையில் தங்கவைக்கப்பட்டுள்ள அதிருப்தி எம்.எல்.ஏக்களிடம் ராஜினாமா முடிவைத் திரும்பப் பெறும்படி சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன இரு கட்சி நிர்வாகிகளும். ஜனநாயக முறைபடி, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டினார் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.

இந்நிலையில், அமெரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் சென்ற முதல்வர் குமாரசாமி, பயணத்தை முடித்துக்கொண்டு அவசரமாக நேற்று மாலை பெங்களுரு திரும்பினார். அங்குள்ள தாஜ் வெஸ்ட் என்ட் ஹோட்டலில் அவர் கூட்டணிக் கட்சியினருடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார். இதில், அமைச்சர் எச்.டி தேவகவுடா, துணை முதலமைச்சர் பரமேஸ்வரா மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

முன்னதாக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி மூத்த தலைவர் சிவராம் கவுடா, ராஜினாமா கடிதம் அளித்த சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் தங்கள் பக்கம் வருவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள சித்தராமையாவை முதலமைச்சராக நியமிக்க வேண்டும் என்றால் அதற்கு மறுப்பு தெரிவிக்க மாட்டோம் என்று அமைச்சரும், மதசார்பற்ற ஜனதாதள நிர்வாகியுமான எச்.டி தேவ கவுடா தெரிவித்தார். இதற்கிடையே, ராஜினாமா முடிவில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ. சோமசேகர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

இதனைதொடர்ந்து, அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ள சொகுசு விடுதி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைதுசெய்து அப்புறப்படுத்தினர். இந்தக் குழப்பமான சூழலில் சுயேட்சை எம்.எல்.ஏ.வும் மாநில அமைச்சருமான நாகேஷ், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும், குமாரசாமி அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெற்றுக்கொள்வதாகவும் அவர் ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்துள்ளார்.

பாஜக ஆட்சி அமைந்தால் ஆதரவு அளிப்பேன் என்று கூறிய நாகேஷ் மேலும், பலர் ராஜினாமா செய்வார்கள் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தக்கவைத்து அவர்களுக்கு அமைச்சர் பதவியை அளிக்கும் வகையில், காங்கிரசை சேர்ந்த 21 அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளதாக சித்தராமையா கூறியுள்ளார்.

கர்நாடகா அமைச்சரவையிலுள்ள அமைச்சர்களில் முதலமைச்சர் குமராசாமி தவிர மற்ற அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்தனர். இதனைத் தொடர்ந்து கர்நாடகா அமைச்சரவையில் புதிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.