தங்களால் ஆளமுடியாத எந்த மாநிலத்திலும் பிறரை ஆளவிடமாட்டோம் என்பதுதான் மோடி-அமித்ஷாவின் அரசியல் தாரக மந்திரமாகிவிட்டது. பல மாநிலங்களில் கவர்னரின் துணையுடன் குறுக்கு வழியில் ஆட்சி அமைத்தது மட்டுமல்ல, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையால் தாங்கள் ஆட்சியமைக்க முடியாமல்போன மாநிலங்களில் குதிரை பேரம் மற்றும் ஆள்கடத்தல்மூலம் ஆட்சிக் கவிழ்ப்புகளைத் தொடர்ந்து அரங்கேற்றி வருகிறது.

கர்நாடகாவில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதள அரசு அவ்வாறு பா.ஜ.கவால் விலைக்கு வாங்கப்பட்ட எம்.எல்.எ.க்களால் கவிழ்க்கப்பட்டு கடைசியில் எடியூரப்பா முதலமைச்சரானார். இப்போது அதே பாணியில் கவிழ்ப்பு முயற்சியை மத்தியப் பிரதேசத்தில் மேற்கொண்டிருக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் தாங்கள் ஆட்சி இழந்ததை சகித்துக்கொள்ளமுடியாத பாஜக இந்த ஜனநாயக படுகொலையில் தற்போது இறங்கியிருக்கிறது.

மத்தியப் பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்யா சிந்தியா தனது ஆதரவாளர்களுக்கு அமைச்சரவையில் போதிய இடமளிக்கப்படவில்லை என்ற அதிருப்தியில் ஏற்கனவே இருந்தார். இந்த அதிருப்தியை பயன்படுத்திக்கொண்டு தனது வழக்கமான சித்துவிளையாட்டில் பாஜக இறங்கியது.

சிந்தியா தனது கட்டுபாட்டில் உள்ள 17 எம்.எல்.ஏ.களை ராஜினாமா செய்யவைத்துவிட்டு அதன்மூலம் கமல்நாத் தலைமையிலான பதினைந்து மாத காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க ஆயத்தமாகிவிட்டார் என்று சொல்லப்படுகிறது. மேலும் அவர் பாஜகவில் சேரப்போகிறார் என்றும் அவருக்கு ராஜ்ய சபா பதவி வழங்கப்பட்டு மத்திய அமைச்சர் ஆகப்போகிறார் என்றும் செய்திகள் வருகின்றன.

மத்தியப் பிரதேச சட்டசபையில் காங்கிரஸ் கூட்டணிக்கு இப்போது 120 இடங்கள் இருக்கின்றன. இதில் காங்கிரஸ் 114, பிஎஸ்பி 2, சமாஜ்வாதி 1 சுயேட்சைகள் 4 இப்போது சிந்தியா தலைமையிலான 17 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா கடிதம் அனுப்பினால் காங்கிரஸ் அரசு தானாக கவிழ்ந்துவிடும். பாஜகவிற்கு மத்தியப்பிரதேச சட்டசபையில் 107 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றன. அதில் இரண்டு இடங்கள் இப்போது காலியாக இருக்கின்றது. கர்நாடாகாவில் செய்ததுபோல பெரும்பான்மை இல்லை என்று ஆட்சியைக் கலைத்துவிட்டு பிறகு அந்த இடங்களில் இடைத்தேர்தல்களை நடத்தி  எப்படியாவது பாஜகவை வெல்ல செய்து ஆட்சியமைக்கவேண்டும் என்பதுதான் திட்டம். கடந்த வாரமே டெல்லி அருகே உள்ள ஒரு ரிசார்ட்டில் 10 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவின் பிடியில் தங்கவைக்கப்பட்டார்கள் என்றும் அவர்களுக்கு ஆளுக்கு தலா 35 கோடி ரூபாய் விலைபேசப்பட்டது என்றும் செய்திகள் வெளிவந்தன.

இப்போது பிரதமரும் அமித்ஷாவும் சிந்தியாவுடன் டெல்லியில் நேரடி குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளனர். சிந்தியாவை தொடர்புகொள்ள காங்கிரஸ் தலைவர்கள் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன. அவர் ஏற்கனவே பாஜகவின் பேரத்திற்கு முழுமையாக உடன்பட்டுவிட்டார் என்பதையே அவரது நடவடிக்கைகள் காட்டுகின்றன. நாடுமுழுக்க எல்லா ஜனநாயக நெறிமுறைகளுக்கு மாறாக கட்சிகளை உடைத்தும் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கியும்  பாஜக நடத்திக்கொண்டிருக்கும் ஜனநாயக படுகொலையின் இன்னொரு காட்சி அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

ஹோலி பண்டிகைக்கு முன் டெல்லி கலவரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது என்று சொன்ன பாஜகவால் ஹோலி பண்டிகை அன்றே இவ்வளவு பெரிய ஜனநாயக படுகொலையை நிகழ்த்த மட்டும் நேரம் இருக்கிறது.