ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரான ஷேக் காலித் ஜஹாங்கிரின் தேர்தல் விளம்பர போஸ்டர்கள் உள்ளூர் செய்தித்தாள்களில் வந்துள்ளது. அதில் காவி நிறத்திற்கு பதிலாக பச்சை நிறத்தில் விளம்பரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அந்த விளம்பரத்தில் பாஜகவின் வேட்பாளர் காலித் ஜஹாங்கிருக்கு வாக்களிக்குமாறு வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. காஷ்மீரில் பாஜக தனது பாரம்பரிய காவி நிறத்தில் இருந்து பச்சை நிறத்திற்கு மாறியிருப்பது இதுவே முதல்முறை. அந்த விளம்பர போஸ்டரின் மேற்பகுதியில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது.

இந்த விளம்பரங்கள் ‘கிரேட்டர் காஷ்மீர்’ மற்றும் ‘காஷ்மீர் உஸ்மா’ ஆகிய இரு முக்கிய உள்ளூர் செய்தித்தாள்களில் இடம் பெற்றிருக்கிறது. இந்த இரண்டு செய்தித்தாள்களுமே காஷ்மீர் பள்ளத்தாக்கில் பலராலும் படிக்கப்படுவதாகும். இதைப்பற்றி அம்மாநில பாஜக தலைவர்கள் “காஷ்மீரில் ஏற்கனவே பாஜக வெற்றி பெற தொடங்கிவிட்டதாகவும், அதனால்தான் பச்சை நிறத்தை தேர்ந்தெடுத்ததாகவும்” தெரிவிக்கின்றனர்.

காஷ்மீர் மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் அல்தாஃப் தாக்கூர் இதைப்பற்றி கூறுகையில், “இதில் புதிதாகவோ அல்லது வியப்பாகவோ எதுவுமில்லை. நீங்கள் பாஜக கொடியை கவனித்திருந்தால், அதில் பச்சை நிறம் இருக்கும். பாஜக கொடியில் பச்சை மற்றும் காவி நிறங்கள் இருக்கும். அமைதி மற்றும் முன்னேற்றத்தின் அடையாளமாக பச்சை நிறம் இருக்கிறது. இங்கு நகராட்சி அமைப்பு தேர்தல்களில் பாஜக எப்படியான வெற்றியைப் பார்த்தது என்பதை அறிந்திருப்பீர்கள். காஷ்மீரின் முஸ்லிம் பெரும்பான்மையினர் பாஜகவை ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பது இதிலிருந்து தெரிகிறது. காஷ்மீரின் பாஜக கொடியில் பச்சை நிறம் இல்லாமல் இருந்தது. ஆனால், எங்கு எந்த புதிய திட்டம் தொடங்கப்பட்டாலும், அதில் பச்சை நிறம் சேர்க்கப்படுகிறது. எனினும், பாஜகவுக்கு நிறங்களில் எல்லாம் நம்பிக்கை இல்லை. அனைவரும் ஒன்று, அனைவருக்கும் முன்னேற்றம் என்பதையே பாஜக நம்புகிறது” என்றார்.

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் மற்றும் தேசிய மாநாட்டு கட்சியின் துணை தலைவருமான ஒமர் அப்துல்லா, “காஷ்மீர் மாநிலத்தை அடையும்போது மட்டும் பாஜகவின் காவி நிறம், பச்சையாக மாறுகிறது. வாக்களர்களை முட்டாள் ஆக்குவதற்கா? அல்லது தன்னைத்தானே முட்டாள் ஆக்கிக்கொள்வதற்கு இதனை செய்கிறதா என்று தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.

காஷ்மீர் அரசியலில் பச்சை நிறம் எப்போதும் ஒரு உணர்ச்சிகரமான பங்கை ஆற்றியுள்ளது என்றும் இந்த நிறமாற்றம் அம்மாநில மக்களை கவரத்தான் என்றும் சில விமர்சகர்கள் நம்புகின்றனர். பச்சை நிறம் மதம் மற்றும் இஸ்லாமையும் அடையாளப்படுத்தும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

source: BBC