ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370ஆவது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370ஆவது சட்டப்பிரிவை ரத்து செய்து உத்தரவிட்டது மத்திய அரசு. இதுதொடர்பான மசோதாவைக் கடந்த திங்கட்கிழமை மாநிலங்களவையிலும், கடந்த செவ்வாய் கிழமை மக்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. மேலும், இந்த மசோதா குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற்று நேற்று (ஆகஸ்ட் 7) அரசிதழில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் வழக்கறிஞர் மனோகர் லால் ஷர்மா. மேலும் இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன்பு முறையீடு செய்தார் அவர்.

ஷர்மாவின் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தனர்.