இந்தியாவின் பல மாநில அரசுகள் கொரோனாவை எதிர்க்க கடுமையாகப் போராடிக்கொண்டிருக்கும்போது பா.ஜ.க ஆளும் உத்திரபிரதேசத்தில் பல இலட்சம் பேர் கூடும் ‘ராமநவமி விழா’வை கொண்டாட பெருமளவில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. பிரதமர் மோடி தனித்திருப்பதற்கான ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துக்கொண்டிருக்கும் நேரத்தில்  நிகழ்ச்சியை மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆரத்தை எடுத்து தொடங்கிவைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வருகிற மார்ச் 25 முதல் எப்ரல் 2 வரை நடக்கவிருப்பதாகத் அறிவிக்கப்பட்டுள்ள இந்த விழாவை அரசு ரத்து செய்ய வேண்டுமென கூறியுள்ள அயோதியா மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி கன்ஷியாம் சிங், “பல லட்சம்பேர் இந்த விழாவில் கூடும்போது  அவர்களைப் பரிசோதிப்பதற்கான எந்த வசதியும் உபகரணங்களும் எங்களிடம் இல்லை” என்றார்.

இந்துத்துவாதிகளின் விருப்பத்திற்கேற்ப, அரசு இந்த விழாவை நடத்துவதற்கு அனுமதிக்க முடிவு செய்துவிட்டதாக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. வருடா வருடம் லட்சக்கணக்கான மக்கள் கூடும் ராமநவமி விழா கொண்டாட்டம் இந்த ஆண்டு மிகவும் விஷேஷமாக கருதப்படுகிறது. காரணம் உச்சநீதிமன்றம் ராமர் கோவில் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய நிலத்தை முற்றிலுமாக இந்து அமைப்புகளிடம் கோவில் கட்ட ஒப்படைத்ததுதான். அரசாங்கம் விழாவை அனுமதிக்கும் முடிவுக்கு வந்திருப்பதால் அரசு அதிகாரிகளும் தங்கள் முடிவை மாற்றிக்கொண்டு கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க, தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். மாவட்ட நிர்வாகம் எல்லா ஏற்பாடுகளையும் செய்திருப்பதாகவும் மக்களை முகக்கவசங்கள் அணிய வலியுறுத்தியிருப்பதாகவும் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைபற்றிய அறிவுறுத்தல்களை வழங்கியிருப்பதாகவும் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக, ராமர் கோவில் கட்டுவதற்கான குழுவின் உறுப்பினரும் அயோதியா மாவட்ட நீதிபதியுமான அனுஜ்குமார் ஜா, அரசின் இந்த முடிவை ஆதரித்து “இது ஒரு பாரம்பரிய நிகழ்ச்சி. நாங்கள் எல்லாப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்வோம். ஆனால் ராமநவமி விழாவை ரத்துசெய்யும் பேச்சுக்கே இடமில்லை, மாவட்ட நிர்வாகம் கடந்த ஒருமாத காலமாக இந்த விழாவிற்கு ஏற்பாடு செய்துவருகிறது” என்று கூறினார்.

யோகி ஆதித்யநாத் அரசின் இந்த முடிவை இந்து சாமியார்களும் இந்து அமைப்புகளும் பெரிதும் வரவேற்றுள்ளனர். “இந்த விழாவை நிறுத்த முடியாது. அப்படி நிறுத்தினால் அது லட்சோபலட்ச இந்துக்களின் மனதை புண்படுத்துவதாகிவிடும். அதிலும் இந்த வருட ‘ராமநவமி’ மிகவும் முக்கியமானது. முதல்முறையாக ராமர் இப்போதுதான் சுதந்திரமாக இருக்கிறார்.” என டெக்கான் ஹெரால்டு இதழுக்கு தெரிவித்தார். மேலும் “ராம பக்தர்களுக்கு ஒரு தீங்கும் வராது. ஜீயர்கள் மக்களின் பாதுகாப்பிற்காக சிறப்பு யாகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்” கூறினார்.

அரசு இந்த விழாவை நடத்துவதற்கு அனுமதி அளித்ததற்கு விஸ்வ இந்து பரிஷக்த் மற்றும் ராமர் கோவில் கட்டுவதற்கான குழுவினர் அளித்த கடும் அழுத்தமே காரணம் என்று சொல்லப்படுகிறது. விஸ்வ இந்து பரிஷக்த் இதை பெரும் விழாவாகக் கொண்டாட திட்டமிட்டுள்ளது மட்டுமல்ல, குண்டு தொலைக்காத கண்ணாடி கவசத்துடன் கூடிய ராமர் சிலை ஒன்றையும் நிறுவுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விழாவை நேரலையாக ஒளிபரப்ப தூர்தர்ஷன் தொலைக்காட்சி  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு உபதேசம் செய்துகொண்டே தங்கள் மத அரசியலை எந்தவிலைகொடுத்தும் நிறைவேற்ற பாஜக அரசு தயங்காது என்பதையும் கொரோனா தடுப்பில் அவர்களின் இரட்டை நிலைப்பாட்டையும் இந்த முடிவு காட்டுகிறது.

ஆதாரம்:https://thewire.in/religion/uttar-pradesh-coronavirus-ram-navami/amp/?fbclid=IwAR0lIxI92KIyOD1mEO0F0OZIQTIbYtiMfQhqnR-rG7a6NSUWM1QPF9jZ6Mg