3. மழை – ஜன்னல் – தேநீர்

மெக்ஸிகோவிலிருந்து தயாராகும் பீர் பிராண்டின் பெயரை இனிதே கொண்ட கொரோனா வைரஸ், ஒட்டியிருக்கும் காதலர்களைத் தள்ளி நிற்க வைக்கிறது.. தேசாந்திரியாகத் திரியும் பயணக்காதலர்களை ஓரிடத்தில் நிலைகொள்ளச் செய்கிறது.. அன்பாகக் கை கொடுப்பவர்களை, கட்டியணைப்பவர்களைக் கை கழுவச் சொல்கிறது.. ஆஃபிஸிற்கு இருவரும் சென்றுவிடுவதால் மட்டுமே நிம்மதியாக சண்டையின்றி இருக்கும் தம்பதிகளை ஒரே வீட்டில் இருக்க வைத்து டைவோர்ஸூக்கு வழி செய்கிறது.. உணவகங்களை மூடவைத்ததால் குடும்பத் தலைவிகளை 24 மணி நேரமும் சமையலறையில் நிற்கவைத்து சாபம் வாங்கிக் கொள்கிறது.. தியேட்டர்களை மூடவைத்து பொழுதுபோக்கிற்கு வழியின்றி இளசுகளை வெறுப்பேற்றுகிறது.. நடைபாதை வியாபாரிகள், சுற்றுலா தளங்களை மட்டுமே நம்பி வியாபாரம் செய்யும் கடைக்காரர்கள் என பலரின் அன்றாட வயிற்றுப் பிழைப்பைக் கெடுத்து குதியாட்டம் போடுகிறது.. அரிதாகச் சிலரை புத்தகம் படிக்க வைக்கிறது.. ஓய்வின்றி வாழ்க்கைச் சக்கரத்தில் ஓடிக் கொண்டிருப்பவர்களைச் சற்றே நிற்கவைத்து, வாழ்வின் ருசியை அனுபவிக்கச் செய்கிறது..

கோடைக்கால விடுமுறையில், பெரும்பாலான பெண்கள், தங்கள் அம்மா வீட்டிற்கும், வெளியூருக்கும் குழந்தைகளையும் அழைத்துச் சென்று, எப்போதுமே பரபரப்பாக இருக்கும் தங்களின் இயல்பு வாழ்க்கையிலிருந்து சற்றே ஓய்வெடுத்துக் கொள்வார்கள்.. ஆனால், பல்வேறு காரணங்களால் அப்படியொரு வாய்ப்பும், ஓய்வும் அமையாத நான், இம்முறை மூன்று தினங்கள் வெளியூரில் விடுமுறையை அனுபவிக்க திட்டமிட்டேன்..

கொரோனா பற்றிய பேச்சு அப்போதுதான் ஆரம்பித்திருந்த நிலையில், நாங்கள் அதை மிக சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல், ஓசூர் சென்று நண்பர் வீட்டில் தங்குவது, அங்கிருந்து பெங்களூர், மைசூர் செல்வது என்கிற பயணத் திட்டத்தோடு கிளம்பியாயிற்று..

விடியற்காலை 4 மணிக்கு ஓசூர் பஸ்ஸ்டாண்ட் அடைந்து தொலைபேசியதும், நண்பர் தன் வண்டியோடு எங்களை அழைத்துச் செல்ல வந்துவிட்டார்..

அடுத்தநாள் பென்னர்கட்டா உயிரியல் பூங்கா செல்ல நண்பருடைய காரை ஏற்பாடு செய்து, கொரோனா பீதியால் Zoo இயங்குகிறதா, விடுமுறையா என்பதையும் தொலைபேசியில் உறுதி செய்துகொண்டு உற்சாகமாகக் கிளம்பினோம்..

பாடல்களும், அதைப்பற்றிய கதைகளுமாக நீண்ட பயணம், பென்னர்கட்டாவின் பூட்டியிருந்த வாயிலில் முடிவடைந்தது. கொரோனாவுக்காக மூன்று தினங்கள் விடுமுறை என்கிற தகவல் எங்களுக்குக் கூறப்பட்டது.. மிகுந்த ஏமாற்றம் அனைவரையும் சூழ்ந்தது. அடுத்ததாக, மைசூர் போகலாமா என்கிற திட்டமும், அங்கும் அனைத்துமே பொது இடங்கள் என்பதால் கைவிடப்பட்டது.

சற்றும் மனம் தளரா விக்ரமாதித்தனைப் போன்று, ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிக்குப் போகலாமென்ற முடிவுடன் தளி சாலையில் திரும்பியது கார்.. சாலை முழுவதும் மரங்களடர்ந்து ‘வா வா..’ என்று எங்களை விழுங்கக் காத்திருக்க, நாங்களும் ஊர்ந்து போய்க் கொண்டிருந்தோம். தளி எல்லையில் கொரோனா தற்காப்புக் குழு காருக்குள் சானிடைசர் அடித்து முடித்து எங்கள் கைகளிலும் தெளித்து தூய்மைப்படுத்திய பின்பு எங்களை அனுமதித்தனர்..

அஞ்செட்டி மலைப்பகுதி கொண்டை ஊசி வளைவுகளோடு வசீகரித்தது..

ஒகேனக்கலை அடைந்து நீர்வீழ்ச்சிக்கு நடந்து செல்லும் வழியில், நீர்வீழ்ச்சியும் கொரோனாவிற்காக மூடப்பட்டதாகத் தகவல் தெரிவித்தனர்… அங்கும் ஏமாற்றமடைந்தாலும், இயற்கை அன்னையின் அருளால் அங்குள்ள காட்டாற்றில் இறங்கி ஆட்டம்போட்டு விளையாடிக் களித்தோம்.. அன்று காலையிலிருந்து தொடர்ந்த ஏமாற்றங்களுக்கான அருமருந்தாக காட்டாற்றுக் குளியல் அமைந்தது. நீர்வீழ்ச்சி, கடல் என்றெல்லாம் ஏற்கனவே நாங்கள் அனுபவித்து முடித்ததைத் தெரிந்துகொண்டதாலேயே கொரோனா, அழகான மீன்கள் துள்ளி விளையாடும் ஆற்றை அடையாளம் காண்பித்து புண்ணியம் தேடிக் கொண்டது.. சமைத்துக் கொண்டு போயிருந்த புளியோதரையும், தயிர்சாதமும், குளியலுக்குப் பின் தேவாமிர்தமாக ருசிக்க.. வீடு திரும்பினோம்..

வைரஸ் தாக்குதலுக்கு ஆளானோர், தொற்று பரவாமலிருக்க ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். இதற்கு மருந்து இன்னமும் கண்டுபிடிக்கப்படாத சூழ்நிலையில், வழக்கமான காய்ச்சல் சளிக்கு வழங்கப்படுகின்ற சிகிச்சை முறைகளில் சிறிது நாட்களிலேயே சிலருக்கு சரியாகிவிட்டதாகச் சொல்கின்றனர். சுவாச மண்டலத்தை நேரடியாகத் தாக்குவதாலேயே உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. கொரோனோ தாக்குதலைவிட, வாட்ஸப் வதந்திகளாலும், ஊடகங்களாலும் அதன்மீதான அச்சமும், குழப்பங்களும் வளர்ந்து கொண்டேயிருக்கிறது..

பல மருத்துவர்களும் கொரோனா விஷயத்தில் நம் நாட்டில் அரசாங்கத்தின் செயல்பாடுகள் மிகச் சிறப்பாக இருப்பதாகவே தெரிவிக்கின்றனர்.. வெளிநாடுகளில் கொரோனா பரிசோதனைக்கு டாலர்களில் செலவு செய்ய வேண்டியிருக்க, நம் நாட்டில் அரசாங்கம் இலவசமாகவே அதைச் செய்வது பாராட்டுக்குரியதே.. அரசாங்கத்தின் சரியில்லாத செயல்களை விமர்சித்துக் கேள்வி கேட்கிற நாம், எப்போதாவது இதுபோல் செய்யும் நற்காரியங்களைப் பாராட்டவும் செய்ய வேண்டும்..

ஒகேனக்கலில் மீன் விற்கும் அம்மாவும், சென்னையில் ஓலா ஆட்டோ ஒட்டுநரும் கூறிய தகவல்கள், பலரின் அன்றாட பிழைப்பு பாதிக்கப்பட்டு சாப்பிடவே வழியில்லாத துயர நிலையை கொரோனா அளித்திருப்பதை உணர முடிந்தது..

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. பெண்கள் தேவதைகள் அல்ல- அகிலா ஸ்ரீதர்
  2. வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் நமக்காக வாழத் துவங்குவோம்..! - அகிலா ஸ்ரீதர்