சாதாரண அமைப்புகள் முதல் சட்டப்பேரவை வரை சாதிதான் ஆதிக்கம் செலுத்துகிறது என்று வேதனை தெரிவித்தார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி.
தமிழகத்தில் ஆணவ கொலைகள் அதிகரித்து வருவது தொடர்பாக, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க இருப்பதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் இன்று (ஜூலை 9) காலை அறிவித்தனர். தமிழகத்தில் ஆணவக்கொலைகளை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதன்படி இந்த வழக்கு இன்று மதியம் விசாரணைக்கு வந்தபோது, சாதாரண அமைப்புகள் முதல் சட்டப்பேரவை வரை சாதிதான் ஆதிக்கம் செலுத்துகிறது என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். தென் மாவட்டங்களில் பள்ளி செல்லும் குழந்தைகளின் கையில் வண்ணக்கயிறு கட்டி சாதி அடையாளப்படுத்தப்படுவதாகத் தெரிவித்த நீதிபதிகள், ரத்தத்திலோ, உடலுறுப்பு தானத்திலோ யாரும் சாதி பார்ப்பதில்லை எனக் குறிப்பிட்டனர்.
விழிப்புணர்வு ஏற்படுத்துதாக அரசு கூறினாலும் ஆணவப் படுகொலைகள் நடக்கின்றன எனத் தெரிவித்த உயர் நீதிமன்றம், ஆணவப் படுகொலையைத் தடுக்க வேண்டும் எனக் கூறும் கட்சிகள்தான் சாதியையும் ஊக்குவிக்கின்றன எனக் குறிப்பிட்டது.
ஆவணக் கொலைகளை தடுக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு பின்பற்றப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஆணவப் படுகொலையை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கையளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டனர்.