ஆந்திர அரசு இனி அரசு நியமன பொறுப்புகளில், ஒப்பந்த பணிகளில் இனி தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை மக்களுக்கே ஒதுக்கீடு செய்யப்படும் என ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஆர்.ஜெகன்மோகன்ரெட்டி அறிவித்துள்ளார்.

தலித்மக்கள், தலித் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் சிறுபான்மை சமூக மக்கள் இனி அரசு நிறுவனங்கள் , அரசு வாரியங்கள், அரசு சங்கங்கள், அரசின் கீழ் வரும் அறக்கட்டளைகள், அனைத்திலும் உள்ள நியமன பணிகளில் 50 சதவீத இடஒதுக்கீடு பெறுவர். அறநிலையத்துறையின் கீழ் வரும் திருக்கோயில்களில் தலித், தலித் பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு வழங்ப்படவிருக்கிறது. மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வருடாந்திர பொருளாதார உதவிகள் வழங்கப்படவும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சலவைத்தொழிலாளர்கள், முடி திருத்துனர்கள், தையல் கலைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு ஆண்டுக்கு 10 000 ரூபாய் வழங்கவதெனவும் அறிவிக்கப்பட்டது.

மாதம் ஒன்றுக்கு 200 யூனிட் வரை தலித் குடும்பங்களுக்கு இலவச மின்சாரம் வழங்குவதெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 15.62 லட்சம் தலித்துகள் பலனடைவார்கள் என்றும் அதே நேரம் அரசுக்கு 411கோடி நிதி செலவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவையனைத்தும் ஜெகன் ரெட்டி தேர்தல் பரப்புரை களத்தில் வழங்கிய வாக்குறுதிகளாகும்.

வேலையில்லாத் திண்டாட்டத்தினை தவிர்க்க தொழிற்சாலைகளில் உள்ளூர் மக்களுக்கு 75 சதவீத வேலை வாய்ப்பினை வழங்கவேண்டும் என உத்திரவிடப்பட்டுள்ளது. தொழிலக மேம்பாட்டுக்காக தம் நிலத்தை இழந்தவர்களுக்கு வேலை வழங்குவதை உடனடியாக நிறைவேற்ற அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.

ஊழலை ஒழித்துக்கட்டும் முக்கிய நடவடிக்கையாக 100 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அரசு திட்டங்களை கண்காணிக்க ஒய்வுபெற்ற அல்லது தற்போது பணியில் இருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான ஆணையம் அமைக்கப்படும் அது தொடர்பான சட்ட முன்வடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது இதனால் வெளிப்படையான ஒப்பந்த புள்ளிகள், லஞ்ச ஊழலை அறவே ஒழித்தல், வேண்டியவர், வேண்டாதவர் பாகுபாடு ஒழுங்கீனம் போன்றவற்றை அகற்ற இந்த முயற்சி உதவும் என அரசு கருதுகிறது.

ஒவ்வொருதுறையும் தம் பணிகள் நடவடிக்கை, செயல் திட்டங்கள் குறித்து ஆணையத்தின் முன்பு சமர்ப்பிக்கவேண்டும். அதற்கு நிபுணர்களின் ஒத்துழைப்புடன் மொத்த டெண்டர் குறித்த கால அட்டவணை 15 நாட்களுக்குள் நிறைவடையும். ‘ஒய்.எஸ்.ஆர். நவோதயம்’ என்ற திட்டத்தின் கீழ் சிறுதொழில்கள், குறு தொழில்கள், போன்றவை நலிவில் இருந்து மீட்டெடுக்க 4000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆந்திர பிரதேசம் பொருளாதார மேம்பாட்டு ஆணையத்திற்கு பதிலாக ஆந்திர பிரதேச முதலீட்டு மேம்பாடு மற்றும் கண்காணிப்பு முகமை என்ற பெயரில் அமைக்கப்படுகிறது அதற்கு முதல்வர் தலைமை வகிப்பார் ஏழு இயக்குனர்கள் அவருக்கு உதவியாக கடமையாற்றுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்வாயிலாக முதலீடுகளை நாலா புறமும் ஈர்க்கும் குறிக்கோளுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெகனின் அதிரடி ஆந்திர அரசியல் உலகை கலக்கி வருகிறது.

மேலோட்டமாகப் பார்க்கும்போது ஒரு பாப்புலர் அரசியல் தலைவர் தம் வாக்காளர்களை ஈர்க்க, வோட்டு அரசியல் செய்வதற்காக இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள் என நாட்டுநிலவரம் தெரியாதவர்கள், மக்களின் மீது நிஜமான அக்கறை இல்லாதவர்கள், உண்மையான ஏழைகளைப் பற்றி அக்கறை இல்லாத, ஆனால் அந்த 10 விழுக்காடு பரம ஏழைகளைப்பற்றி மட்டும் அக்கறைப்படும் ஒரு கூட்டம் விமர்சிக்கக்கூடும். ஆனால் ஜெகனின் நலத்திட்ட அறிவிப்புக்கு அரசியல் சமூக பொருளாதாரரீதியாக ஒரு காரணம் இருக்கிறது ஜெகனின் தந்தையார் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி மிருக பலத்துடன் ஆட்சியில் இருந்த சந்திரபாபுநாயுடுவை ஆட்சிக்கட்டிலில் இருந்து இறக்க நீண்ட நெடிய பாதயாத்திரை மேற்கொண்டார். 3 மாதம் 1475 கிலோ மீட்டர் கொடும் வெயில் காலத்தில் சாதித்தார். வெறும் வளர்ச்சி என நகர்ப்புறத்தில் கணினி தொழில் நுட்பம் பற்றி மட்டுமே கவலை கொண்டு கடமையாற்றிய நாயுடு காருவின் பிடியில் இருந்து விடுபட ஆந்திர துடித்தது.

விவசாயிகளுக்கு எதுவும் செய்யாத அன்றைய நாயுடு அரசுக்குப் பதிலாக விவசாயிகளின் குறைதீர்க்க பாத யாத்திரை மேற்கொண்ட ரெட்டி காரு ஆ ட்சி என்று அமையும் என மக்கள் ஏங்கினர் 2004இல் டாக்டர் ஒய் எஸ் ராஜசேகர ரெட்டி வென்று ஐயாம் ரெடி என்று அறிவித்தார். மருத்துவ காப்பீடு திட்டம், இலவச ஆம்புலன்ஸ், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், இரண்டு ரூபாய்க்கு மலிவு விலை அரிசி, பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர் தரிசு நிலங்களை வேளாண்மைக்கு பயன்படுத்தும் வண்ணம் நீர்ப்பாசன திட்டங்களை கொண்டுவந்தார். இவையெல்லாம் நாம் குறிப்பிட காரணம் பெரிய ரெட்டி, சின்ன ரெட்டி புகழ் பாட அல்ல அது நமக்கு அவசியமும் அல்ல.

பின்னர் ஆட்சியைப்பிடித்த சந்திரபானு நாயுடு ஐடி செக்டர் விஷயத்தில் மட்டும் அக்கறை செலுத்தாமல் சாமான்யமக்களை நேரடியாக பயனடைய செய்யும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். நலன் நாடும் விஷயத்தில் ஆரோக்கியமான போட்டி ஆந்திராவில் தொடங்கியது இப்போது இரண்டாம் ரெட்டியின் இன்னிங்ஸ் இவரும் தூள் கிளப்புகிறார். உண்மையில் இதற்கெல்லாம் முன்னோடி தமிழ்நாடுதான் என்பதில் ஐயமில்லை. திமுகவின் போர்முழக்கமும் , பெரியாரின் அறிவுறுத்தலும் பெருந்தமிழன் காமராஜரை கவனத்துடனும் கவலையுடனும் அடியெடுத்து வைக்க உந்து சக்தியாக அமைந்தது. அதனால் இன்னொரு ராஜாஜி அல்லது மற்றொரு பக்தவத்சலம் ஆட்சிபோல் அமையவில்லை.

கலைஞர் எம்.ஜி.ஆர். என்ற இரு ஆளுமைகளுக்கிடையே கடும் போட்டி நிலவிய வேளையில் கலைஞரின் நாவசைவுதான் ராமாவரத்தை நகர்த்தியது என்பார்கள்.

இலங்கை தமிழர் பிரச்னையில் திமுக முழுஅடைப்பு அறிவித்த அதே நாளில் எம் .ஜி.ஆரும் தமிழக அரசின் சார்பில் பந்த் அறிவித்தார்.  எம்.ஜி.ஆர். அறிவித்த சத்துணவு திட்டத்தை மேம்படுத்தி சத்துணவில் முட்டை வழங்கினார் 1989ல் கலைஞர்.

அவ்வாறே 1992 டிசம்பர் 6 பாப்ரிமஸ்ஜித் தகர்க்கப்பட்டதை கண்டித்து டிசம்பர் 10 ம் தேதி திமுக முழுஅடைப்புக்கு அழைப்பு விடுத்தபோது ஜெயலலிதா அரசும் அன்றே அறிவித்தது . ஆக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் கலைஞரை பின்பற்றி நடந்தார்கள் என்று நாம் சொல்ல வரவில்லை நல்லவற்றை, குடிமக்கள் நலன்நாடும் விஷயத்தில் தென் இந்திய தலைவர்கள் ஈகோ பார்க்கவில்லை. 1991/96 மற்றும் 2001/2006 ஆண்டுகளில் ஆட்சி செய்த அம்மையார் ஜெயலலிதா எதிர்க் கருத்தாளர்கள்,  தமக்கு வாக்களிக்காதவர்கள் விஷயத்தில் கடுமை காட்டினார் 91-96 காலகட்டத்தில் அவரது கட்டவுட்டுக்கு பாலாபிஷேமமும் எதிர்ப்பவர்களுக்கு ஆசிட் அபிஷேகமும் நடந்தை மறக்க முடியாதுதான்.

2001-2006 வரை ஜெயலலிதா தமது ஆட்சியில் தம்மை எதிர்க்காமல் தாம் என்ன செய்தலும் ‘எஸ்.மா’ என்று சொல்லவேண்டும் என எதிர்பார்த்தார் திமுக வாக்கு வங்கியாக கருதப்பட்ட அரசு ஊழியர்களை ‘எஸ்.மா’, டெஸ்மா சட்டங்களின் மூலம் ஒடுக்க நினைத்தார். இரண்டாவது முறை தோல்வியைச் சுவைத்த பின் சற்றே அவர் போக்கில் மாற்றம் தொடங்கியது. திமுக ஒரு ரூபாய்க்கு அரிசி வழங்கினால் அதனை அவர் இலவசமாக்கினார். வண்ண தொலைக்காட்சி பெட்டி பெற்றோர்களுக்கு கலைஞர் வழங்கினால், பிள்ளைகளுக்கு இலவச மடிக்கணினி ஜெயலலிதா அம்மையார் வழங்கினார். நலத்திட்டங்களில் ஆரோக்கியமான போட்டி இருந்தால் அது தென் இந்தியா. நீர்ப்பாசனத்திட்டங்களுக்கு முன் உரிமைகொடுத்தால் அது தென் இந்தியா. பசுவின் சிறுநீர் திட்டங்களுக்கு முன் உரிமை கொடுத்தால் அது வட இந்தியா.

அங்கு இப்படி ஒரு ஆரோக்கியமான இருந்ததாக நாம் கேள்விப்படவில்லை இத்தனைக்கும் நமக்கு பெரியார், அண்ணா, கலைஞர், காமராஜர், காயிதேமில்லத் என கிடைத்ததுபோல் அவர்களுக்கும் காந்தியார் நேரு, ஜோதிபாபூலே, அம்பேத்கர், ராம் மனோகர் லோகியா, வி.பி.சிங் என சான்றோர்கள் கிடைக்கத்தான் செய்தார்கள் . அவர்கள் சாவர்கார்களை கோல்வால்கர்களை, கோட்ஸேக்களை பிடித்து தொங்கி கொண்டிருப்பது மட்டுமின்றி தென் இந்தியா முன்னேறுகிறது என்று புலம்பினால் மட்டும் போதுமா ?