மக்களவை தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல்களில் போட்டியிடும் டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்குப் பரிசுப் பெட்டி சின்னத்தை ஒதுக்கியிருக்கிறது தேர்தல் ஆணையம்.
தமிழகத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலிலும், 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அமமுக போட்டியிடுகிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆர்.கே.நகர் தொகுதியில் குக்கர் சின்னத்தில் டிடிவி தினகரன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இரட்டை இலை சின்னம் ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் தரப்புக்கு ஒதுக்கப்பட்டதால், தங்களுக்குக் குக்கர் சின்னத்தை ஒதுக்ககோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் டிடிவி தினகரன்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பதிவுசெய்யப்பட்ட கட்சிகளுக்கு மட்டும்தான் பொதுச் சின்னம் ஒதுக்க முடியும் என்றும் அமமுக கட்சிப்பதிவு செய்யாததால் அக்கட்சிக்கு குக்கர் சின்னமோ, பொதுச் சின்னமோ ஒதுக்கமுடியாது என்றும் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.
ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு வெவ்வேறு சின்னத்தை வழங்கினால் அவர்களது அரசியல் வாழ்வு கேள்விக்குறியாகிவிடும் எனக் கூறிய உச்ச நீதிமன்றம், மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் டிடிவி தரப்புக்கு பொதுசின்னத்தை வழங்க தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்நிலையில் அமுமுகவுக்கு பரிசுப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இந்த சின்ன ஒதுக்கீடு பற்றிய தகவலை டிடிவி தினகரன் இன்று (மார்ச் 29) காலை 7 மணிக்கு வெளியிட்டிருக்கிறார்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, டிடிவி தினகரனின் அமமுகவிற்கு 36 சின்னங்களை ஒதுக்கி இதிலிருந்து ஒரு சின்னத்தைத் தேர்ந்தெடுக்கச் சொல்லியிருந்தது தேர்தல் ஆணையம். இதுகுறித்து, தன் கட்சி நிர்வாகிகளுடன் தீவிரமாக ஆலோசனை நடத்திய தினகரன், “பரிசுப் பெட்டி” சின்னத்தை இறுதியாக தேர்ந்தெடுத்திருக்கிறார். தினகரனின் தேர்வை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, அமமுக வேட்பாளர்களுக்குப் பரிசுப் பெட்டி சின்னம் ஒதுக்குவதாக அறிவித்துள்ளது.
பரிசுப் பெட்டி சின்னத்தை மக்களிடம் தெரிவித்துத் தேர்தலில் வெற்றிபெறுவோம் என அமமுகவின் தேனி தொகுதி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன்.