டெல்லி தேர்தல் முடிவுகளில் ஆம் ஆத்மி வெற்றிபெறுவதற்கான எல்லா நியாயமான காரணங்களும் இருக்கின்றன.தேர்தலுக்கு முந்தையை பிந்தைய கருத்துக்கணிப்புகள் எல்லாமே அதையேதான் சொல்கின்றன. ஆட்சியைப்பற்றி மதிப்பிடுகளில் கூட சில போதாமைகள் இருந்தாலும் கல்வி, சுகாதாரம், நிர்வாகத்தை மக்களுக்கு அணுக்கமாக கொண்டு செல்லுதல், குடிநீர் மற்றும் மின்கட்டண விலை குறைப்பு போன்றவை ஒரு மக்கள் நல அரசு என்ற நல்லெண்ணத்தைப் பெற்றுத் தந்திருக்கின்றன. மத்திய பா.ஜ.க அரசு கொடுத்த அத்தனை நெருக்கடிகளையும் தாங்கி ஆம் ஆத்மி இந்த சாதனைய செய்துள்ளது. பா.ஜ.கவிற்கு வாக்களிக்க ஒரு நியாயமான காரணத்தைக்கூட யாரும் சொல்ல இயலவில்லை.
இருந்தும் எல்லாக் கருத்துக்கணிப்புகளையும் பொய்யாக்கிவிட்டு ஆம் ஆத்மி தோற்றுவிடுமா என்ற பயம் பரவலாக இருக்கிறது. ஏன்? கருத்துக்கணிப்புகள் எப்படியிருந்தாலும் தாங்கள்தான் வெற்றிபெறுவோம் என டெல்லி பா.ஜ.க தலைவர் சொல்வதை ஒரு அரசியல் வாய்சவடாலாக மட்டும் ஏன் எடுத்துக்கொள்ள தயங்குகிறார்கள்?
முதலாவதாக தேர்தல் ஆணையம், வாக்குப்பதிவு, வாக்க எண்ணிக்கை எல்லாவற்றிலும் மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள். இந்த நாட்டில் என்னவேண்டுமானாலும் முறைகேடுகள் நடக்கும் என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள்.வாக்குப்பதிவு விபரத்தை அளிக்க தேர்தல் ஆணையம் எடுத்துக்கொண்ட நீண்ட அவகாசமும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்த அச்சங்களும் தீவிரமடைந்திருக்கின்றன.
இரண்டாவதாக, 200 எம்பிகள் , 50 அமைச்சர்கள், 11 முதலமைச்சர்கள் என ஒரு யூனியன் பிரதேச தேர்தலுக்காக களமிறங்கிய பா.ஜ.க தனது வெறுப்புப் பேச்சுகளை உச்சத்திற்கே கொண்டு சென்றது. தொடர்ந்து மாநில தேர்தல்களில் அடையும் தோல்விகளை மறைக்கவும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் போராட்டங்களுக்கு எதிராகவும் டெல்லி யூனியன் பிரதேசத்தை எப்படியாவது கைப்பற்றுவது பா.ஜ.கவின் கெளரவப்பிரச்சினையாகியிருக்கிறது. இருபதாண்டுகளுக்குப்பிறகு எப்படியாவது டெல்லியை கைப்பற்றிவிடவேண்டும் என மூர்க்கமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது பா.ஜ.க
மூன்றாவதாக, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை பயன்படுத்திக்கொண்டு ஒரு இந்துத்துவா வாக்கு வங்கிக்கான அணி திரட்டல் இந்தத் தேர்தலில் நிகழ்ந்திருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி நடந்தால் அது பேரழிவின் அடுத்த கட்டமாக இருக்கும்.
நான்காவதாக, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் டெல்லி பா.ஜ.கவிற்கு சாதகமாக வாக்களித்த ட்ரெண்டிங் தொடருமா அல்லது மத்தியிலும் மாநிலத்திலும் மாறுபட்டு வாக்களிக்கும் அணுகுமுறையை டெல்லி மக்கள் கடைபிடிப்பார்களா என்பதற்கும் இன்று பதில் கிடைத்துவிடும்.
ஐந்தாவதாக, கருத்துக்கணிப்புகள் சொல்வதுபோல் அல்லாமல் யாருக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்காமல் ஒரு தொங்கு சட்டசபைக்கான சூழல் ஏற்படுத்தப்பட்டு பா.ஜ.க தன் அரசியல் சித்துவிளையாட்டுகளை நடத்தவும் வாய்ப்பிருக்கிறது. எது எப்படியோ ஆம் ஆத்மி வெற்றிபெற்றால் அது நாடுமுழுக்க பா.ஜ.கவிற்கு எதிராகபோராடிக் கொண்டிருக்கும் மதசார்பற்ற ஜனநாயக சக்திகளுக்கு மிகப்பெரிய தார்மீக வெற்றியாகவும் கொண்டாட்டமாகவும் இருக்கும். ஒரு வேளை பா.ஜ.க வென்றால் அது தனது அனைத்து பாசிச நடவடிக்கைகளுக்கும் மக்கள் கொடுத்த அங்கீகாரம் என பிரகடனம் செய்யும். டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்துகொண்டிருக்கும் போராட்டங்கள் கடுமையாக ஒடுக்கப்படலாம்
டெல்லி தேர்தல் முடிவுகள் எப்படியிருந்தாலும் நாட்டை அதிரவைக்கக்கூடிய ஏதேனும் அடுத்த சட்டத்தை பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைய இருக்கும் இந்த நேரத்தில் கொண்டுவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை..அது பொது சிவில் சட்டமாகக்கூட இருக்கலாம். சில மணி நேரங்களில் டெல்லி தேர்தல் முடிவுகள் தெரிந்துவிடும். எதிர்பார்த்தவை, எதிர்பாராதவை என நமக்கு நிறைய காத்திருக்கின்றன. டெல்லியை மூன்றுமுறை ஆண்ட காங்கிரஸ் எங்கும் கண்ணிலேயே காணவில்லை என்பது எவ்வளவு பெரிய வினோதம்.