அமமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் தனது ஆதரவாளர்களுடன் இன்று (ஜுன் 28) அண்ணா அறிவாலயம் வந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார்.
டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் முன்னணி நிர்வாகிகளில் ஒருவராகவும், கொள்கை பரப்பு செயலாளராகவும் இருந்தவர் தங்க தமிழ்ச்செல்வன். அதிமுகவிலிருந்து விலகி அதற்கு எதிரான நிலைப்பாட்டை தங்க தமிழ்ச்செல்வன் உட்பட 18 எம்.எல்.ஏ.க்கள் மேற்கொண்டதால், 18 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் மகேந்திரன், தேனி மாவட்ட அமமுக நிர்வாகிகளுடன் தங்க தமிழ்ச்செல்வனுக்கு தெரியாமல் தனியாகக் கூட்டம் நடத்தியுள்ளார். இதற்கிடையில், டிடிவி தினகரனின் உதவியாளருடன், தங்க தமிழ்ச்செல்வன் பேசும் ஆடியோ வெளியாகி தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் டிடிவி தினகரன் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த சூழலில் தங்க தமிழ்ச்செல்வன் அமமுக கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்தார்.
இந்நிலையில், தங்க தமிழ் செல்வன் மீண்டும் அதிமுகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலையில் தனது ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயம் சென்ற தங்க தமிழ்ச்செல்வன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவருடன் தேனி மாவட்ட நிர்வாகிகள் பலரும் திமுகவில் இணைந்து கொண்டனர்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன் கடந்த மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் குமாரை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுகவில் இணைந்தபின் தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களை சந்தித்தபோது, “திமுக தலைவர் ஸ்டாலினால் மட்டுமே தமிழகத்துக்கு நல்லது செய்ய முடியும் என தேர்தல் முடிவு வந்துள்ளது. அதை ஏற்று நான் திமுகவில் இணைந்துள்ளேன். அதிமுகவில் இருந்த பலரும் திமுக வந்த பின், அவர்களுக்கு திமுக நல்லதே செய்துள்ளது. கேட்டுப் பெறுவது பதவியல்ல. உழைப்பை பார்த்து கொடுப்பது: என் உழைப்பை பார்த்து கொடுப்பார்கள் என நம்புகிறேன்.” என்று தெரிவித்தார்.