நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு முடிவடைந்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் தமிழக அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடுகளை விரைந்து முடிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு முடிவடைந்ததாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார்.
முன்னதாக காங்கிரஸ் கட்சிக்கு பத்து தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கிய நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் விடுதலை சிறுதைகள் கட்சிக்கு இரண்டு தொகுதிகளும், இந்திய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் என ஒரே நாளில் மூன்று கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை முடித்தது.
அதிமுக பாஜக கூட்டணியில் தேமுதிகவை சேர்ப்பதில் தொடர்ந்து இழுபறி நடக்கும் சூழலில். இன்று [மார்ச்5] மதிமுகவிற்கு ஒரு நாடாளுமன்ற தொகுதி மற்றும் ஒரு ராஜ்ஜிய சபா சீட்டும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகளையும் திமுக தலைமை ஒதுக்கியது. அதற்கான ஒப்பந்தங்கள் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. ஆக தமிழகத்தில் 39 புதுச்சேரி 1 என மொத்தம் உள்ள நாற்பது தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு 20 தொகுதிகளை ஒதுக்கி மீதம் உள்ள 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஆளும் கட்சியான அதிமுக பக்கம் தேமுதிக மற்றும் தமாகா வராததால் அதிமுக கூட்டணி முடிவடையாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-ர.ரங்கநாதன்