உங்கள் உத்தரவின்கீழ் வேலை பார்க்கும் காவல்துறை தவறு செய்யவில்லை என்று நீங்களே எப்படி நற்சான்றிதழ் கொடுக்க முடியும்?

தில்லியில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு இரண்டு வாரங்கள் கழித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் திருவாய் மலர்ந்திருக்கிறார். கடந்த பல தசாப்தங்களில் தில்லி பார்த்திராத வன்முறை குறித்து அவர் பேச இரண்டு வாரங்களாகியிருக்கிறது என்பது வேறு கதை.

“தெளிவாக திட்டமிடப்பட்ட சதி” அல்லாமல் இது நடந்திருக்க முடியாது என்று தில்லி வன்முறை குறித்த நாடாளுமன்ற விவாதங்களுக்குப் பிறகு பேசியிருக்கிறார். 36 மணி நேரங்களில் வன்முறையை முடிவுக்குக் கொண்டு வந்ததற்காக தில்லி காவல் துறையைப் பாராட்டினார் அமித் ஷா. இத்தனைக்கும் வன்முறையை கட்டுப்படுத்தத் தவறியதாகவும் வன்முறையிலேயே கூட்டாளியாக இருந்ததாகவும் காவல்துறை விமர்சிக்கப்பட்டிருக்கிறது.

மூன்று நாள் தில்லி வன்முறை குறித்து எழுந்துள்ள பல்வேறு கேள்விகளுக்குப் பதில் கொடுப்பதற்கு மாறாக, மேலும் புதிய கேள்விகளை எழுப்பியிருக்கிறது அமித் ஷாவின் பேச்சு. இந்திய தலைநகரின், ஒட்டுமொத்த இந்தியாவின் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றும் பொறுப்பு கொண்டவர்கள் பதில் சொல்லவேண்டிய முக்கியமான கேள்விகள் மூன்று.

இது உளவுத்துறையின் தோல்வியா…?

“தெளிவாகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட” தாக்குதல் என்கிறார் அமித் ஷா. உத்தரப் பிரதேசத்திலிருந்து நூற்றுக்கணக்கானோர் இதில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார். எங்களுது செய்தியும் மற்ற செய்திக் கட்டுரைகளின் அடிப்படையிலும் ஒன்று தெளிவாகத் தெரிகிறது: காவல்துறைக்கு கெடு விதித்த (சி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு) பி.ஜே.பி பிரமுகர் கபில் மிஷ்ராவின் பேச்சுக்குப் பிறகுதான் வன்முறை வெடித்தது. போராட்டங்களைத் தடுக்காவிட்டால் தெருவில் இறங்குவோம் என கபில் மிஷ்ரா மிரட்டல் விட்டார்.

மூத்த தில்லி காவல் துறை அதிகாரியை அருகில் வைத்துக்கொண்டு இவ்வாறு மிரட்டல் விடுத்தார் கபில் மிஷ்ரா. வன்முறை துவங்கிய பிப்ரவரி 24ஆம் தேதியன்று வன்முறை வெடிக்க வாய்ப்பு இருப்பதாக ஆறு உளவுத் தகவல்கள் காட்டுகின்றன. இன்னொன்று, உத்தரப் பிரதேசத்தை ஆள்வதும் பி.ஜே.பிதான். தில்லி போலீஸ் நேரடியாக அமித் ஷாவின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இது தெளிவாகத் திட்டமிடப்பட்ட தாக்குதல் என்றால், அது தொடர்பாக உளவுத்துறை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தால், எவ்வாறு மூன்று நாட்கள் வன்முறை தொடர்ந்திருக்க முடியும்?

முக அடையாளம் காட்டும் தொழில்நுட்பம்

வன்முறையில் இறங்கிய 1,100 பேர் முக அடையாளம் காட்டும் தொழில்நுட்பம் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் கூறியுள்ளார். வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து கண்டறியும் தொழில்நுட்பம் அது என்கிறார் அவர். அது என்ன தொழில்நுட்பம், அதை எவ்வாறு பயன்படுத்தினார்கள் என்பது பற்றி எந்தத் தெளிவும் இல்லை.

காவல்துறை பயன்படுத்தும்போது முக அடையாளம் காட்டும் நுட்பம் பெரிதும் பிழைகள் கொண்டதாக இருப்பது நாம் அறிந்ததே. பிரிட்டனில் மெடட்ரோபாலிடன் போலீஸ் பயன்படுத்தும் முக அடையாளம் காட்டும் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டில் கண்டறியப்படும் ஐந்தில் நான்கு பேர் அப்பாவிகள் என ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.

இதுபோன்ற மென்பொருள், அதைப் பயன்படுத்துகிறவர்களின், உள்ளீடு செய்யப்படும் தரவுகளின் ஓரவஞ்சனையைக் காட்டுவதாக ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்கள். அந்தரங்க தரவுகள் சார்ந்த சட்டமோ தெளிவான வழிகாட்டுதல்களோ இல்லாதபோது இத்தகைய மென்பொருள்களை பயன்படுத்துவது ஆபத்தானது.

காவல் துறைக்கு யார் மணி கட்டுவது?

தில்லி போலீஸ் மீதான அத்தனை குற்றச்சாட்டுகளையும் ஒரே அறிக்கையில் ஒதுக்கித் தள்ளிவிட்டார் அமித் ஷா. அவர்களைக் கேள்வி கேட்பது பாதுகாப்புப் படையினரின் தார்மீக சக்தியை பாதிக்கும் என்கிறார். 36 மணிநேரத்தில் வன்முறையை கட்டுக்குள் கொண்டு வந்ததாக போலீஸ் புகழ் பாடிய அவர், அந்த சமயத்தில் வன்முறை நடந்த இடங்களில் களமிறங்காதது பற்றி முனகல் போல ஒரு வாதம் வைத்தார்: தனது நாடாளுமன்ற தொகுதியான அகமதாபாதிற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அப்போது பயணம் செய்திருந்தார், அதோடு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை பொறுப்பேற்று செயல்படுமாறு கூறியதாக தெரிவித்தார்.

போலீஸ் ஒரு சார்பாக நடந்துகொண்டது என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. முஸ்லிம்களுக்கு எதிரான கும்பல்களின் தாக்குதல்களை கண்டும் காணாமல் விட்டது, துடிப்பாக கல் எறிதல்களில் ஈடுபட்டதற்கும் வீடியோ ஆதாரங்கள் உள்ளன.

ஒரு முஸ்லிம் இளைஞரை போலீஸ்காரர்கள் அடித்து உதைத்து, தேசிய கீதம் பாடச் சொன்னது வீடியோவாக வெளியாகியுள்ளது. அது ஒரு தெளிவான ஆதாரம். அந்த முஸ்லிம் இளைஞர் இறந்தும் விட்டார். புகார்களை காவல் துறை பதிய மறுப்பது, கலவரங்களுக்குப் பிறகு விசாரணை நடத்த மறுப்பது பற்றி Scroll.in செய்தி வெளியிட்டுள்ளது.

தில்லி போலீஸின் பங்கு குறித்து இவ்வளவு ஆதாரங்கள் இருக்கின்றன. அப்படி இருக்கும் போது எவ்வாறு எந்த விசாரணையும் இல்லாமல் அமித் ஷா காவல் துறை தவறே செய்யவில்லை என கூற முடியும்? காவல் துறை அவரது உத்தரவின் கீழ் பணியாற்றுவதால், உண்மையில் என்ன நடந்தது என்று விசாரித்து முடிவை அறிவிக்கும் அதிகாரத்தை அவருக்குத் தர முடியுமா?

– ரோஹன் வெங்கடராமகிருஷ்ணன்
தமிழில்: செந்தில்குமார்

நன்றி: https://scroll.in/article/955894/three-key-questions-for-amit-shah-after-his-self-serving-speech-about-the-delhi-violence