டெல்லியில் அமைதியான முறையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கடந்த 70 நாட்களுக்கும் மேலாக போராட்டங்கள் நடந்த வந்தன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக ஆளும் பா.ஜ.க அரசின் கைக்கூலிகள் போராட்டத்தில் புகுந்து வன்முறையை கிளப்பிருக்கின்றன. இதனால் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இடையே கடுமையான மோதல்கள் ஏற்பட்டு வடகிழக்கு டெல்லி கலவர பூமியாக மாறியது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நடந்து வரும் வன்முறை சம்பவங்களால் ஒரு போலீஸ்காரர் உள்பட 18க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியாகி வருகிறது. கல்வீச்சு, கடைகளுக்குத் தீவைப்பு, வாகனங்கள் எரிப்பு என்று தொடர்ந்து பல அசம்பாவிதங்கள் நடந்து வருகின்றன. இதனால், டெல்லியில் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் மட்டும் 6 பேர் பலியானதாக கூறப்படுகிறது.
டெல்லியில் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடந்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கலவரம் தொடர்பான செய்தியை கவர் செய்த டி.வி, பத்திரிகை ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். வடகிழக்கு பகுதிகளான மவுஜ்பூர், பாபர்பூர், கோகுல்புரி உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் உள்ளிட்ட பல மாநில தலைவர்கள் போராட்டத்தை கண்டித்து வருகின்றனர். கலவரத்தைக் கட்டுப்படுத்த முடியாத மத்திய உள்துறை அமைச்சகத்தின் மீது பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். அதே நேரத்தில், போலீஸை கட்டுப்படுத்தும் அதிகாரம் இல்லாத டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பா.ஜ.க-வினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அவர் டிவிட்டரில், “இரவு முழுவதும் சம்பவ இடத்தில் இருந்தும் நிலைமையை சீர் செய்ய முடியவில்லை, இதனால் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இதைப்பற்றி உள்துறை அமைச்சருக்கு தெரியப்படுத்தியிருக்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.