மக்களவை தேர்தலுக்கு இன்னும் சிலதினங்களே உள்ள நிலையில் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. குறைந்தபட்ச ஊதிய உத்தரவாதத் திட்டத்தில் தொடங்கி, பின் தங்கியோர், வாய்ப்புகள் மறுக்கப்பட்டோர், வறியோர் என பலதரப்புகளைப் பற்றியும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பல வாக்குறுதிகளை வழங்குகிறது.

மக்கள் காங்கிரஸை ஆட்சியில் அமர்த்தினால் விவசாயத்துறையின் குறைகளைப்பற்றிப் பேசவும் அதன் வளர்ச்சியைத் திட்டமிடவும் ‘விவசாய பட்ஜெட்’ தனியாக தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

NYAY – குறைந்தபட்ச ஊதிய உத்தரவாதத் திட்டத்திற்கு நாட்டின் GDPல் 2% மட்டுமே செலவாகும் என்றும் அத்திட்டல் பலகட்டங்களாக நாடெங்கும் செயல்படுத்தப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆண்டிற்கு ரூபாய் 72000 குறைந்தபட்ச ஊதியமாக ஏழை மக்களுக்கு நேரடியாக வழங்கப்படும்.

மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்படும் திட்டமாக இது செயல்படுத்தப்படும் என்றும் இதனை வடிவமைத்து செயல்திட்டம் வகுக்க பொருளாதார வல்லுநர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் புள்ளியியலாளர்கள் கொண்ட தன்னாட்சிமிக்க குழு அமைக்கப்படும் என தெரிவிக்கிறது அறிக்கை.

2005ல் அறிமுகப்படுத்தப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதித் திட்டத்திற்கு புதுவடிவம் கொடுக்கும் விதமாக, MNREGA 3.0 திட்டம் செயல்படுத்தப்படும். இதன்மூலம் 100 நாட்கள் வேலைத் திட்டமாக இருந்தது 150 நாட்கள் வேலையாக உறுதி செய்யப்படும். நீர் மற்றும் நீர் நிலைகள் பாதுகாப்பும் மண்வளம் காப்பதும் இத்திட்ட நோக்கங்களாக இருக்கும்.

45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6.1% அதிகம் உயர்ந்துள்ள வெலையில்லாத் திண்டாட்டத்தை சரிசெய்ய தற்போதுள்ள வேலைகளைப் பாதுகாப்பதற்கும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கவும் மேலும் அரசு அலுவலகங்களில் நிரப்பப்படாமலுள்ள 22 இலட்சம் காலிப்பணியிடங்களும் மார்ச் 2020க்குள் நிரப்பப்படும் என்று உறுதியளிக்கிறது.

விவசாயிகளுக்கும் வேளாண் துறைக்குமான வாக்குறுதிகள்:
விவசாயக் கடன் தள்ளுபடி என்பதோடு கடனைத் திருப்பிச்செலுத்தாத விவசாயிகள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படாது என்றும் அவர்கள் கடனற்று வாழ வழி செய்யப்படும் என்றும் உறுதியளிக்கிறது. “கடனை வாங்கிக்கொண்டு திருப்பிச்செலுத்தாத தொழிலதிபர்கள் சுதந்திரமாகச் சுற்றுகின்றனர், ஆனால் விவசாயிகளோ சிறைச்சாலைகளில் வாடுகிறார்கள்” என்று ராகுல் காந்தி வருந்திப் பேசியது குறிப்பிடத்தக்கது.
நிலம் கையகப்படுத்தல், மறுவாழ்வளித்தல் மற்றும் மீள்குடியேற்றச் சட்டத்திலும் வன உரிமைச் சட்டத்திலும் ஏற்படுத்தப்பட்ட சிதைவுகளைக் கலைந்து அதன் உண்மையான நன்நோக்கத்திற்காக செயல்படும் வகையில் மீட்டெடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பொருளாதாரக் கொள்கை:
பொருளாதாரக் கொள்கைகளை விரிவாகப் பேசும் அறிக்கையில் நிதிப் பற்றாக்குறையை 3%க்கும் குறைவாக வைத்திருக்கப்படும் என்றும் பண விவகாரங்களில் ரிசர்வ் வங்கியின் தன்னாட்சிக்கு மதிப்பளிக்கப்பட்டு செயல்படுவோம் என்றும் காங் உறுதியளிக்கிறது. GST ஒற்றை மிதமான வரிக்கொள்கையுள்ளதாக சீரமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. “அடாவடித்தனமான இப்போதைய GST, முறையாக எப்படி இருக்க வேண்டுமோ அவ்வாறு மாற்றியமைக்கப்படும் என்று காங் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் அறிக்கையை வெளியிடும்போது தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

முன்னரே “வெற்றுக்கூச்சலிடும், தகுதியற்ற, தகாத இடைநிலையமைப்பாகச் செயல்படும் நிதி ஆயோக் அமைப்பு” என்று ராகுல் காந்தி தெரிவித்ததற்கு இணங்க தேர்தல் அறிக்கையில் “NITI Aayog” அமைப்புக் கலைக்கப்பட்டு, பெரும்பெயர் பெற்ற பொருளாதார வல்லுநர்கள் மீண்டும் அழைத்துவரப்பட்டு வீண்சுமை குறைக்கும் சிறப்பான திட்டமிடல் குழு அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

GDPல் கல்வித்துறைக்குச் செலவிடப்படும் 3% – 6%மாகவும், 1.5% GDP செலவிடப்படும் மருத்துவத்துறைக்கு 3%மாகவும் 2023-24ற்குள் உயர்த்தப்படும் என்றும், “RIGHT TO HEALTH CARE”- சுகாதார உரிமைச்சட்டம் இயற்றப்படும் என்று தெரிவித்துள்ளது.

அரசியலில் பணத்தின் ஆதிக்கம்:
நேர்மையான தேர்தலுக்குச் சவாலாக அமைந்துள்ள – தேர்தலில் கருப்புப்பணம் பயன்படுத்தல் மற்றும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தல் ஆகியவற்றைத் தவிர்க்கவும் தடுக்கவும் இயலாத தேர்தல் ஆணையத்தின் செயல்படாத் தனத்தைப் பற்றிக் குறிப்பிட்டு, பாஜக அரசு கொண்டுவந்த தேர்தல் பத்திர திட்டம் தூக்கியெறியப்படும் என்று தெரிவிக்கிறது. அதற்கு மாற்றாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு முறையான கணக்கில் கொண்டுவரப்பட்ட நிதி வழங்கப்படும் வகையில் தேசிய தேர்தல் நிதி என்ற புதியமுறை அமல்படுத்தப்படும் எனவும் அதில் மக்கள் அனைவரும் நிதியளிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் பாதுகாப்புத் துறைக்குத் தேவையானவற்றை வாங்கிட அதற்குச் செலவிடும் தொகை அதிகரிக்கப்படுமென உறுதியளிக்கிறது. “தேசிய பயங்கரவாத எதிர்ப்பு, பகுப்பாய்வு மற்றும் உடனடி நடவடிக்கை மையம்” நிறுவப்படும் எனத் தெரிவிக்கிறது.
பயங்கரவாதம், தீவிரவாத ஊடுருவல், நக்சல், சாதி மற்றும் மதக் கலவரங்கள் நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதைச் சுட்டும் அறிக்கை அதனைத் தடுக்கவும் ஒடுக்கவும் திட்டங்களை வரையறுக்கிறது.

வெளியுறவுக் கொள்கை:
பாஜக அரசின் வெளியுறவுக் கொள்கை ஒரு மனிதனின் விருப்பத்திற்குட்பட்டதாகச் சுருங்கியுள்ளது என்பதைக் குறிப்பிட்டு, “தேசிய வெளியுறவுக் கொள்கைக் குழு” நிறுவப்படுமென்று கூறப்பட்டுள்ளது. அது கேபினட் உறுப்பினர்கள், கற்றறிந்த சான்றோர், துறைசார் வல்லுநர்கள் மற்றும் தூதர்களைக் கொண்ட குழுவாக இருக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்குழு அரசுக்கு வெளியுறவுக் கொள்கைகளுக்கான அறிவுரைகளை வழங்கும்.

ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கிலே நிலவும் பயங்கரவாதத்தினை கையாளுதல்:
தேர்தலறிக்கையில் காங் எப்போதும் பயங்கரவாதத்தினை சமரசமின்றி எதிர்த்துள்ளதைக் குறிப்பிட்டு, பிற நாடுகளோடு இணைந்து பயங்கரவாதக் குழுக்கள், அதன் செயல்பாடுகள் மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் ஒடுக்கப் பாடுபடும் எனவும் உறுதியளிக்கிறது. பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ள பாகிஸ்தானுக்கு அதன் பயங்கரவாத ஆதரவுச் செயல்களை நிறுத்திக்கொள்ள மற்ற நாடுகளையும் அழுத்தம்கொடுக்கச் சொல்லி வலியுறுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாகாணங்களுக்குத் தனிக்கவனம் தருவதாக அமைந்துள்ள அறிக்கையில் வடகிழக்குப் பகுதிகளுக்கான சிறப்பு நிலை அந்தஸ்து வழங்கப்படுமெனவும் அவற்றுக்கென தனி தொழிற்க்கொள்கைகள் கடைபிடிக்கப்படுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைகள் மூலமாகவே ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதி மக்களின் எண்ணங்களைப் புரிந்துகொள்ள முடியுமெனவும் அவர்களுக்கான கௌரவமான தீர்வுகளை வழங்கிடவும் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண முடியுமெனவும் வலியுறுத்திச் சொல்லுகிறது காங் தேர்தலறிக்கை.

எல்லைகளில் உறுதியாகவும் மக்கள் கோரிக்கைகளுக்கு நேர்மையாகவும் செயல்படும் இருபக்க அணுகுமுறை பின்பற்றப்படும் என உறுதியளிக்கிறது. மனித உரிமைகளைக் காக்கவும் பாதுகாப்பினை உறுதிசெய்யவும் ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் மறுசீரமைக்கப்படும் எனவும் உறுதியளிக்கிறது.
IPC 124A – தேச துரோக சட்டத்தை அகற்றுதல் மற்றும் IPC 499 அவதூறு சட்டத்தை மாற்றியமைத்தல்:

சட்டம் மற்றும் ஒழுங்கு பற்றி பேசுகையில், IPC 124 A – கொடூரமான தேசதுரோக சட்டம் அகற்றப்படுமெனவும் IPC 499 – அவதூறுகள் பற்றிய சட்டம் குற்றவியல் சட்டமாக அல்லாமல் சிவில் குற்றமாக மாற்றப்படும் எனவும் உறுதியளிக்கிறது. காவல்துறையில் சீர்திருத்தங்கள் செய்யப்படுமெனவும் “மாதிரி போலீஸ் சட்டம்” உருவாக்கப்படும் எனவும் கூறுகிறது.

சுற்றுச்சூழல்:
நாட்டிலே நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு பற்றிய விழிப்புணர்வோடு, அனைவருக்கும் குடிநீர் வழங்க வழி செய்யப்படுமெனவும் நிர்மல் பாரத் அபியான் திட்டத்தில் செயல்படுத்தப்படும் நதிகள் சீரமைப்புப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு இரட்டிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
புவி வெப்பமயமாதல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு இந்தியா சிறப்பான செயல் திட்டங்கள்மூல உலகளவில் முன்னிலை வகிக்கும் நிலைக்கு உயரும் என காங் உறுதியளித்து, தேசிய தூய காற்று திட்டம் (National Clean Air Programme) வலுப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது. காலநிலை பின்னடைவு மற்றும் பேரிடர் மேலாண்மைக்காக பிரத்யேக பகுதிகளை காங் தேர்தல் அறிக்கையில் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக சில:
கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை காங் தேர்தல் அறிக்கையிலே உறுதியளித்துள்ளது. “Right to Homestead” எனும் புதிய சட்டத்தின்மூலம் அனைவருக்கும் வீடு எனும் திட்டத்தையும் உறுதியளிக்கிறது.

SOURCE: https://thewire.in/politics/elections-2019-congress-manifesto

நன்றி: The Wire

– தமிழில் இந்திர குமார்