தேனி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஓ.பி.ரவீந்திரநாத் குமாரின் வெற்றி செல்லாது என்று அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நடந்து முடிந்து நாடாளுமன்ற தேர்தல் பாஜக கூட்டணி பெரும்பான்மை தொகுதிகளைக் கைப்பற்றி, இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்தது. தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி படுதோல்வியைச் சந்தித்த நிலையில், திமுக கூட்டணி 37 இடங்களை கைப்பற்றியது. தேனி நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் அதிமுக சார்பில் போட்டியிட்ட துணை முதல்வர் ஓ.பி.எஸ் மகனான ரவீந்திரநாத் குமார் வெற்றிபெற்றார்.

இந்நிலையில் அவரின் வெற்றியை எதிர்த்து, தேனி தொகுதி வாக்காளர் மிளானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில் நடைபெற்று முடிந்த தேர்தலில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.பி. ரவீந்திரநாத் குமார் வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணப் பட்டுவாடா செய்ததாகவும் அதற்குண்டான வீடியோ ஆதாரங்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இதே போன்று வேலூரில் பணப் பட்டுவாடா புகார் வந்தபோது அத்தொகுதியில் தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்தது. ஆனால் தேனி தொகுதியில் அதிக அளவில் புகார் வந்தபோதும் ஏன் தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்யவில்லை என்றும் ஓ.பி.ரவீந்திரநாத் குமாரின் வெற்றி செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் மிளானி தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாகக் கூறப்படுகிறது.