நாட்டின் பிரதமர் மோடிக்காக உருவாக்கப்பட்ட டிவி நமோ டிவி, மோடியின் அரசியல்ரீதியான பேச்சுகளையும் பிரச்சாரங்களையும் ஏன் பயணங்களையும்கூட உடனுக்குடன் தெரிவிக்கும் டிவியாக நமோ டிவி கடந்த சில மாதங்களாக இயங்கிவந்தது.
முழுக்க முழுக்க பாஜக ஆதரவு சேனலான நமோ டிவி தற்போது மக்களவைத் தேர்தல் முடிந்தவுடன் தனது ஒளிபரப்பை நிறுத்திக்கொண்டுள்ளது.
மக்களவைத் தேர்தலை மையமாகக்கொண்டு மார்ச் 26ம் தேதி தொடங்கப்பட்ட நமோ டிவி மே 17ஆம் தேதியோடு தன்னுடைய சமூக பணிகளை நிறுத்திக்கொண்டுள்ளது.
எந்தவித கட்டணமுமின்றி டாடா ஸ்கை, வீடியோகான், டிஷ் டிவி போன்ற அரசு சாரா நிறுவனங்களில் ஒளிப்பரப்பபட்டது. இந்நிலையில் ஏற்கனவே பல எதிர்ப்புகளையும் புகார்களையும் சமாளித்து சமூகத்திற்கு தனது முக்கிய சேவைகளை எந்தவித பாரபட்சமுமின்றி பல முக்கிய தகவல்களை அளித்த நமோ டிவியை தேர்தல் ஆணையத்தால் கூட கட்டுப்படுத்த முடியவில்லை
இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், “நமோ டிவி பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்துக்காக தொடங்கப்பட்டது. மக்களவைத் தேர்தல் முடிந்தபின் இனிமேலும் அந்த சேனல் தேவையில்லை. அதனால் 17-ம் தேதியோடு அந்த சேனலின் ஒளிபரப்பை நிறுத்திவிட்டோம்” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் கூறுகையில், “நமோ சேனலுக்கு எந்தவிதமான அங்கீகாரமும் தேவையில்லை ஏனென்றால், நமோ சேனல் ஒரு விளம்பரச் சேனல் மட்டும்தான்” எனத் தெரிவித்தது.
ஆனால், தலைமைத் தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 12-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், நமோ சேனல் ஒளிபரப்பும் அனைத்து நிகழ்ச்சிகளும் தேர்தல் ஆணையத்திடம் ஒப்புதல் பெற்று அதன்பின் ஒளிபரப்ப வேண்டும். தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகளின் ஒப்புதல் பெறாமல் ஒளிபரப்பாகும் எந்த நிகழ்ச்சிகளும் உடனடியாக நீக்கப்படும் என்று தெரிவித்திருந்தது.
பாஜகவின் நமோ சேனல், இஸ்ரோவின் என்எஸ்எஸ்-6 வகை செயற்கைக்கோளில் இருந்து தனது ஒளிபரப்பைச் செய்துள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. பிரதமரின் பிரச்சாரத்துக்காக தொடங்கப்பட்ட சேனல் எவ்வாறு அங்கீகாரம் இல்லாமல் செயற்கைக்கோளின் அப்லிங், டவுன்லிங்க் சிக்னல்களை பயன்படுத்த முடியும் என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மக்களின் இதயநாடியை பிடித்து மோடியின் பிம்பத்தை நமோ டிவி மூலமாக பதியவைக்க எண்ணிய பாஜக அதை எந்தளவிற்கு சாத்தியமாக்கியது என தேர்தல் முடிவுகள் வந்தவுடன் தெரியவரும்.