கடந்த வாரம் நடந்த மகாராஷ்டிரா மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜக மாநிலத்தின் 288 இடங்களில் 105 இடங்களையும், சிவ சேனா 56 இடங்களையும் பிடித்தது. இருவரும் இணைந்து, ஆட்சியமைக்க தேவைப்படும் 145 இலக்கை கடந்துவிட்டனர். ஆனால், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடந்த வாரம் “50:50 ஏற்பாட்டை” அமல்படுத்த கோரிக்கைவிடுத்தார்.
சட்டசபை பதவிக் காலம் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் இவ்வாறு சரிசம பங்கு கேட்பது தவறானது என்பது பாஜக வாதமாக உள்ளது. மகாராஷ்டிரா தேர்தலில் ஷரத் பவாரின் என்.சி.பி 54 இடங்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தது, காங்கிரஸ் 44 தொகுதிகளை வென்றது. மகாராஷ்டிராவில் தற்போதுள்ள சட்டமன்றத்தின் பதவிக்காலம் நவம்பர் 8 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவேதான், 7ம் தேதிக்குள் ஆட்சியமைக்கப்படாவிட்டால், ஜனாதிபதி ஆட்சியை மகாராஷ்டிராவில் அமல்படுத்த வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில், நவம்பர் 7 ஆம் தேதிக்குள் மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிய அரசு அமையாவிட்டால் மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் என்று நிதியமைச்சரும் பாஜக தலைவருமான சுதிர் முங்கந்திவார் தெரிவித்திருந்தார்.
இதற்கு சிவசேனா இன்று(2.11.2019) பதிலடி கொடுத்துள்ளது. சிவ சேனா தலைவர் சஞ்சய் ரவுத், இன்று அளித்த பேட்டியில், எங்கள் கட்சி விரைவில் தனது “வெயிட் அன்டு வாட்ச்” முறையை கைவிட தயங்காது என்று எச்சரித்தார்.
“இந்தியாவில், ஜனாதிபதி அரசியலமைப்பைப் பாதுகாக்கிறார்,” “கட்சி அதிகாரத்தை கோருவதற்கான அனைத்து வழிகளும் அடைபட்டதால் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதா? சிவ சேனா விரைவில் மகாராஷ்டிராவில் தனது காத்திருப்பு மற்றும் கண்காணிப்பு டெக்னிக்கை கைவிடும்” என்று ரவுத் செய்தியாளர்களிடம் இன்று கூறினார்.
சுழற்சி முறையில் தலா 2.5 ஆண்டு காலம் முதல்வர் பதவியை, பாஜக மற்றும் சிவ சேனா ஆகிய இரு கட்சிகளும் வகிக்க வேண்டும் என்பது சிவ சேனா கோரிக்கை. இதை பாஜக ஏற்கவில்லை. இந்த நிலையில், கட்சியின் பத்திரிக்கையான “சாம்னா” தனது தலையங்கத்தில் இன்று பாஜகவுக்கு எதிராக கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது.
சாம்னாவில் இன்று வெளியாகியுள்ள தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ஜனாதிபதி உங்கள் பாக்கெட்டில் இருக்கிறாரா? மகாராஷ்டிராவை அவமதிப்பது போன்ற பேச்சு இது. முங்கந்திவார், பேட்டிகள் நச்சுத்தன்மையை உருவாக்குகின்றன. குடியரசு தலைவர் உங்கள் (பாஜக) கட்டுப்பாட்டின் கீழ் ஜனாதிபதி இருக்கிறாரா அல்லது ஜனாதிபதியின் முத்திரை பாஜக அலுவலகத்தில் உள்ளதா?, அரசாங்கத்தை உருவாக்க முடியாவிட்டால், மகாராஷ்டிராவில் ஜனாதிபதியின் ஆட்சியை நீங்களாக சுமத்த முடியுமா? “சுதிர் முங்கந்திவாரின் அச்சுறுத்தல் அரசியலமைப்பிற்கு விரோதமானது … இது மகாராஷ்டிராவையும், மக்கள் ஆணையையும் அவமதிப்பதாகும்” இவ்வாறு சாம்னா அடுக்கடுக்காக சாடியுள்ளது.