கர்நாடக சட்டப்பேரவையில் இன்று (ஜூலை 29) நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா தலைமையிலான அரசு வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது சபாநாயகராக இருந்த ரமேஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்று குமாரசாமி தலைமையில் ஆட்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில், காங்கிரஸ்- மஜத கூட்டணி கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 17 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் குமாரசாமி அரசு பெரும்பான்மையை இழந்தது.
கடந்த வாரம் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியடைந்ததை தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 26) மாலை கர்நாடகாவில் புதிய முதலமைச்சராக பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பா பதவியேற்றார். இந்நிலையில் பெங்களூருவில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியுள்ள பாஜக எம்.எல்.ஏ.க்களை நேற்று மாலை சந்தித்து நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து ஆலோசனை நடத்தினார் எடியூரப்பா.
இந்நிலையில் சட்டப்பேரவையில் இன்று காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது. எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஆதரவைக் குரல் வாக்கெடுப்பு மூலம் பதிவு செய்தனர். இதில் தேவையான பெரும்பான்மையை நிரூபித்த எடியூரப்பா தனது முதலமைச்சர் பதவியைத் தக்கவைத்துக்கொண்டார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு தன்னுடைய பெரும்பான்மையை நிரூபித்ததால், காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சபாநாயகரான ரமேஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.