நாடாளுமன்றத்தில் இன்று (ஜூலை 17) இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது பேசிய தமிழக உறுப்பினர் மருத்துவர் கலாநிதி வீராசாமி தனது முதல் நாடாளுமன்ற உரையை நிகழ்த்தினார். திருக்குறள், பெரியார், அண்ணா, கலைஞர் பற்றி மேற்கோள்களுடன் தனது பேச்சை தொடங்கிய வீராசாமி அவர்கள் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் பற்றியும் இந்தி திணிப்பிற்கு எதிரான தனது குரலையும் உரக்கப் பதிவுசெய்தார்.

நாடாளுமன்றத்தில் தனது முதல் பேச்சை தொடங்கிய கலாநிதி வீராசாமி, தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையுள் எல்லாம் தலை என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து அவர்களது காலத்தில் நாங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தோம் என்றும் அவர்களது கடின உழைப்பாலும் புரட்சிகரமான சிந்தனையாலும் தமிழகம் இந்தியாவில் முன்னேறிய முதல் மூன்று மாநிலங்களில் ஒன்றாக மாறியது என்பதையும் சுட்டிக்காட்டிப் பேசினார்.

ஜல்லிக்கட்டும் இந்தி திணிப்பு எதிர்ப்பும்:

“இளைஞர் விவகாரம் மீதான மானியக் கோரிக்கை என்பதால் நாடும் உலகமும் திரும்பிப் பார்க்கும் வகையில் மெரினாவிலே, பலநூறாண்டுகளாய் தமிழர் பண்பாட்டில் ஒன்றாய் விளங்கிய ஜல்லிக்கட்டை மீட்க ஜனநாயக வழியிலே போராடத் திரண்ட ஆண், பெண் என அத்தனை இளைய சமூகத்தினருக்கும் இத்தருணத்தில் எனது நன்றியைத் தெரிவிக்கிறேன். அவர்கள் உலக கவனத்தை ஈர்த்து தங்களின் அமைதியான போராட்டத்திலே வென்று காட்டினார்கள்! எப்படி இந்தி திணிப்புக்கு எதிராக திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் வலுவாக நின்று வெல்லுமோ அப்படியே அவர்களும் வென்றார்கள்!” என்று குறிப்பிட்டார்.

மேலும் ‘இந்த அரசாங்கம் பொறுப்பேற்று மூன்று மாதங்கள்கூட ஆகாத நிலையில் மூன்று முறை இந்தியை திணிக்க முற்பட்டுவிட்டது; முதலில் மும்மொழிக்கொள்கை, இரண்டாவதாக ரயில்வேதுறை வெளியிட்ட சுற்றறிக்கை, மூன்றாவதாக தற்போது அஞ்சலகத்துறை செய்த அறிவிப்பு; இந்த ஒவ்வொன்றையும் போராடி எதிர்த்து வெற்றியும் பெற்றுள்ளோம்! 1930 முதல் இன்றுவரை பல தசாப்தங்களாக நாங்கள் இந்தி திணிப்பை எதிர்த்துவந்துள்ளோம்! மற்ற மாநிலங்களும் அப்படியே. எங்கள் தலைவர்களின் விடாப்பிடியான கொள்கையினாலே இது சாத்தியப்படுகிறது..” என்று அவர் பேசிக்கொண்டிருந்தபோதே அவை சலசலக்கத் தொடங்கியது. பல பாஜக உறுப்பினர்கள் அவரைப் பேசவிடாமல் இடைமறித்து கூச்சலிட்டனர்.

“இது மானியக் கோரிக்கை மீதான விவாதம்; உறுப்பினர் பேசுவது பொறுத்தமற்றது” என்று இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

தொடர்ந்த கர்ஜனை:

இது அவரது முதல் உரை என்பதால் அவரை பேச அனுமதிக்குமாறு அவைத்தலைவர் கூறியதையடுத்து வீராசாமி தனது உரையினைத் தொடர்ந்தார்.

“எங்கள் தலைவர்களின் விடாப்பிடியான கொள்கைகளாலே இதெல்லாம் சாத்தியப்பட்டது. அது எங்கள் தலைவர்களின் வழிவந்த தளபதி ஸ்டாலினிடமும் உண்டு; இந்தி எவ்வடிவத்தில் திணிக்கப்பட்டாலும் எதிர்ப்போம்! எங்கள் மொழிப்பற்றையும் உரிமையையும் விட்டுத்தர மாட்டோம்! இம்முயற்சியில் எங்களோடு பல மாநிலங்களும் துணை நிற்கின்றன. என்று தெரிவித்து 1962ல் அண்ணா மாநிலங்களவையில் பேசிய “I belong to  the Dravidian stock and I am proud to call myself a dravidian; that does not mean I am against a Bengali or a Maharastrian or a Gujarathi; I strongly believe that the dravidians have something concrete, something distinct, something different to offer this nation” என்ற உரையினை மேற்கோள்காட்டி, இப்படியான சீரிய வழிகாட்டுதல்கள் எங்களுக்கு இருப்பதாலேதான் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை எங்கள் இளைஞர்கள் முன்னெடுத்தார்கள்; மீண்டும் அதனை நிரூபித்துள்ளார்கள்” என்றார்.

நகைச்சுவை கலந்த அரசியல் பேச்சு:

இந்த அமைச்சகத்தை Youth Affairs and Sports என்று அல்லாமல் Youth Empowerment and Sports என்று பெயரிட்டு அழைக்கலாம் என்ற தனது வேண்டுகோளை முன்வைத்த அவர் “ஏனென்றால் நாடெங்கிலும் சில சமூகத்தை சீரழிக்கும் கும்பல்கள் மதம், இனம், சாதி எனும் பெயராலே பல இளம் காதலர்களைப் பிரித்தும் துன்புறுத்தியும் வருகிறார்கள், Youth Affairs என்பதை அவர்கள் தவறாகப் புரிந்துகொண்டார்களோ என்னவோ” என்று சொல்ல அரங்கம் சில நொடிகள் கலகலத்தது.

மாணவர்கள் நலன் பற்றி:

இளைஞரைப் பற்றி பேசும்போது, கல்வி பற்றி பேசாமல்விட்டால் அது சரியாக இருக்காது. நான் மனிதவள மேம்பாட்டுத்துறையைக் கேட்டுக்கொள்கிறேன்; நாம் 11ஆம் மற்றும் 12ஆம் வகுப்புகளில் இயற்பியல் வேதியியல் கணிதம் மற்றும் உயிரியல் போன்ற பாடங்களை படித்துதான் வந்துள்ளோம்; இங்கு என்னைப்போலவே மருத்துவர்கள் இருக்கிறார்கள்; அவர்களிடம் கேட்கிறேன், இவற்றில் என்னென்னவெல்லாம் நாம் இன்னும் நினைவில் வைத்துள்ளோம் அல்லது மருத்துவ படிப்பிலே படித்தோம்? இல்லையே பிறகு எதற்கு அதனை அடிப்படையாகக் கொண்டு நீட் என்ற மிகக்கடினமான தேர்வு?” என்று குறிப்பிட்டு பல்லாயிரம் மாணவர்கள் இதனால் பாதிக்கப்படுவதையும் குறிப்பாக தற்கொலை செய்துகொண்ட தமிழக மாணவர்கள் அனிதா, பிரதீபா பற்றியும் குறிப்பிட்டுப் பேசினார்.

நாட்டில் மாணவர்கள் தற்கொலை என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது என்று இந்திய அரசே புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது. 2015இல் மட்டும் 8934 குழந்தைகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஒவ்வொருமணி நேரத்துக்கும் ஒரு குழந்தை இறக்கிறது. ‘நீட்’டால் இது இன்னும் அதிகரிக்கத்தான் போகிறது குறையாது. பள்ளிக்கூடங்களெல்லாம் ஹிட்லரின் கொலைக் கூடாரங்களாக மாறிக்கொண்டிருக்கின்றன; குழந்தைகளை அவர்களது வயதுக்கும் அறிவுக்கும் மீறிய செயல்களை இவ்வரசு செய்யச்சொன்னால் அவர்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் வாழப்பிறந்தவர்கள்! கனவுகளோடும் எதிர்பார்ப்புகளோடும்! என்றும் தெரிவித்தார்.

தமிழக அரசை நடத்தும் பாஜக அரசு!

“நாட்டிலே பொறியியல் படித்தவர்களும் பல் மருத்துவம் படித்தவர்களும் 5000 ரூபாய்க்கும் 8000 ரூபாய்க்கும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். படித்து முடித்தவர்கள் வேலை கொடுக்கும் அளவிற்கு தகுதி பெறவில்லை என்று கூறப்படுகிறது. ஒரு சமையல் கலைஞர் இதனைவிட அதிகம் ஊதியம் பெறுகிறார் இச்சூழலில் பள்ளிக் கல்வி என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது! அவர்களுக்கு திறன்மேம்பாட்டை தரவேண்டிய அரசு பள்ளிக்கூடங்களை மூடிக்கொண்டிருக்கிறது. காமராசர், அண்ணா, கலைஞர் போன்ற பெருந்தலைவர்களின் பேருழைப்பால் உருவான கல்விச்சாலைகளுக்கு மூடுவிழா நடத்துகிறது தமிழக அரசு. தமிழக அரசு 1500 பள்ளிக்கூடங்களை மூடிவிட்டு டாஸ்மாக்குகளை திறப்பதிலேயே நாட்டம் காட்டுகிறது. அதனை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இதனை ஏன் நான் உங்களிடம் சொல்கிறேன் என்றால் மத்திய பாஜக அரசுதான் தமிழக அரசை நடத்துகிறது என்று சொல்லப்படுகிறது அதனால்தான்” என்றார்.

அதிகரித்துவரும் பாலியல் குற்றங்கள்:

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே இருப்பதை குறிப்பிட்டு பொள்ளாச்சி சம்பவத்தை மேற்கோள்காட்டிப் பேசினார். மேலும் சட்டங்களை சரியாக அமல்படுத்துவதில்லை என்பதைக் குறிப்பிட்டு குழந்தைகள்மீதான பாலியல் குற்றவழக்குகளில் கைதான குற்றவாளி ஒருவர் விடுதலையாகி மீண்டும் மீண்டும் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்துவந்த சம்பவத்தையும் குறிப்பிட்டார்.

வேலையில்லா திண்டாட்டம்!

நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் இருப்பதை பற்றிப் பேசிய அவர், பட்டதாரிகளுக்கு 23.8%, படிப்பறிவற்றோருக்கு 2.3%, தொடக்கப்பள்ளி வரை பயின்றோருக்கு – 3.3%, இடைநிலை முதல் மேல்நிலை வரை படித்தோருக்கு – 3.7% என பட்டதாரிகளுக்கு வேலையின்மை அதிகரித்துள்ளதைக் குறிப்பிட்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையால்தான் வேலையின்மை இந்நிலை அடைந்துள்ளது என்றார். 5 இலட்சம் குறு சிறு மற்றூம் நடுத்தர நிறுவனங்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மூடப்பட்டுள்ளது என்பதையும் அதனால் 50 இலட்சம் பேர் வேலையிழந்ததையும் தெரிவித்தார்.

இதனிடையே மீண்டும் சலசலப்பு எழுந்தது; விதிமீறல் புகார் தெரிவித்தார் அமைச்சர். ஆனால் இது முதல் உரை என்பதால் தொடருமாறு கூறினார் அவைத்தலைவர்.

விளையாட்டுத் துறை:

விளையாட்டுத் துறைக்கு ஒதுக்கப்படும் தொகை அதிகரிக்கப்பட்டிருந்தாலும்கூட அது இத்தனை பெரிய நாட்டிற்கு போதுமானதாக இல்லை. பிப்ரவரி 2014ல் கடந்த காங். அரசு அறிவித்த ராஜீவ் காந்தி கேள் அபியான் திட்டம் – நாடெங்கும் விளையாட்டு வளாகங்களை உருவாக்கி ஒவ்வொரு மண்டல அளவிலும் அதனை செயல்படுத்த திட்டமிட்டது. தற்போதைய கேலோ இந்தியா திட்டத்தை முந்தைய காங். அரசின் நகர்புற விளையாட்டு உட்கட்டமைப்புகள் உருவாக்கும் திட்டம் மற்றும் தேசிய விளையாட்டு ஆர்வம் உள்ளோரைக் கண்டறியும் திட்டம் ஆகியவற்றுடன் இணைத்திட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

வடசென்னை மக்களுக்காக கால்பந்து மற்றும் பாஃக்ஸிங்:

உரையின் இறுதியாக தனது தொகுதியான வடசென்னை பற்றி பேசியபோது, “எனது தொகுதி படிப்பறிவிலும் வேலைவாய்ப்புகளிலும் மிகவும் பின் தங்கிய ஒரு தொகுதியாகும். அம்மகளை மேம்படுத்தவும் வழிப்படுத்தவும் எனது தொகுதியில் உள்ள இளைஞர்களுக்குப் பயன்படும் வகையிலே கால்பந்து மற்றும் பாஃக்ஸிங் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில் சில திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

மேலும் சேலத்தில் மகாத்மா காந்தி விளையாட்டு அரங்கத்தை மேம்படுத்தித் தரவும் தமிழகத்திலுள்ள எல்லா மண்டலங்களிலும் ஒரு விளையாட்டு வளாகம் அமைத்துத் தரவும் கோரிக்கை வைத்தார்.

தனது முதல் உரையினை பல்வேறு எதிர்ப்புகளுக்கும் மத்தியில் வெற்றிகரமாக தமிழகத்தின் எல்லாப் பிரச்சனைகளையும் எடுத்துரைக்கும்.