நிஷாந்த் குமாரின் முகத்திலிருந்த இளிப்பு அகலவே இல்லை. பேசும் போது குரலில் ஒரு நடுக்கம் மட்டும் இருந்தது. கைகளைக் காற்றின் திசையெங்கும் நீட்டி, அசைத்து, காட்சிப்பூர்வமாகப் பேசிக்கொண்டிருந்தார் நிஷாந்த். எல்லாம் பிப்ரவரி 25ஆம் தேதி முஸ்லிம்களைக் கொன்றது பற்றித்தான்.

அது ஒரு ‘பதிலடி’ தாக்குதல் என்று அவர் சாதித்தார். அதற்கு முந்தைய நாள் மதியம் ஒரு ‘முஸ்லிம்’ கும்பல் யமுனா நகரில் வாகனங்களை எரித்தாக நிஷாந்த் கூறினார். மதியம் ஒரு மணி என துல்லியமாகக் கூறினார். அப்போது பஜானாபுரா பெட்ரோல் பங்கில்தான் இருந்ததாகவும் தனது லாரிக்கு டீசல் ஏற்றிக்கொண்டிருந்ததாகவும் அவர் கூறுகிறார். அவர் சொந்தமாக இரண்டு லாரிகள் வைத்திருக்கிறார். வட கிழக்கு தில்லியில் வஸிராபாதிலிருந்து லோனி செல்லும் பாதையில் உள்ளது யமுனா விஹார்.

“எனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நான் ஓடினேன்” என்கிறார்.

சிறிது நேரத்திலேயே அந்த பெட்ரோல் பங்க் எரித்து சாம்பலாக்கப்பட்டது. அந்தப் பகுதியெங்கும் எரிந்த வாகனங்கள் சடலங்கள்போல் அசைவற்று கிடக்கின்றன.

வஸிராபாத்-லோனி சாலையின் நேரெதிர் பகுதியான கராவால் நகரில் வசிக்கிறார் 29 வயது நிஷாந்த். இந்திய தலைநகரில் அதிக வகுப்புவாத வன்முறை நடக்கும் பகுதி இது. மொத்தம் 47 பேர் அத்தகைய வன்முறைகளில் இறந்திருக்கிறார்கள். பெரும்பாலானோர் முஸ்லிம்கள். இந்த வன்முறை அசலாக பிப்ரவரி 24ஆம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சி.ஏ.ஏ) எதிராகப் போராட்டம் நடத்தியவர்களுக்கும் ஆதரவாகப் போராட்டம் நடத்தியவர்களுக்கும் இடையிலான மோதலாகத் துவங்கியது.

இரும்பு ராடு, நுனியில் ஒரு கத்தி

மத்திய தில்லியிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில், யமுனை நதிக்கரைக்கு அப்பால் போராட்டம் நடந்த இடங்களில்தான் வன்முறை வெடித்தது. அந்தப் பகுதிகளில் வீடுகளும் கடைகளும் கொளுத்தப்பட்டன. தனக்கு எந்தப் பாதிப்பும் இல்லாத போதும் தெருவில் இறங்கி வன்முறையில் ஈடுபட்டதாகச் சொல்கிறார் நிஷாந்த்.

“உங்க பக்கத்து வீட்டுக்காரரை யாராவது தாக்கினால் சும்மா இருப்பீர்களா” என்று கேட்கிறார் நிஷாந்த்.

பிப்ரவரி 25ஆம் தேதி களத்தில் இறங்குகிறார் நிஷாந்த். அவர் கையில் ஒரு இரும்புத் தடி இருந்தது. கையில் துப்பாக்கி இல்லாத குறையைப் போக்குவதற்காக அதன் நுனியில் அடுப்பங்கறை கத்தியைக் கட்டிவைத்தார்.

“துப்பாக்கியுடன் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை” என்கிறார்.

கராவால் நகருக்கு வெளியே செல்லவே இல்லை என்கிறார் நிஷாந்த்.

“நாங்கள் அங்குதான் இருக்கிறோம். என்ன செய்வதென்றாலும் அங்குதான் செய்வோம்” என்கிறார்.

தனது கும்பலில் வேறு யார் இருந்தார்கள் என்பதையோ, அந்த கும்பல் எப்படி ஏற்பாடு செய்யப்பட்டது என்பது பற்றியோ அவர் எதையும் சொல்ல மறுத்துவிட்டார். காலை 10 மணி அளவில் முதல் தாக்குதலைத் தொடங்கியதாகச் சொல்கிறார். இது நிஷாந்தின் வர்ணனை:

“அந்த முஸ்லிம் ஓடிக்கொண்டிருந்தார். ஒரு இந்து கும்பல் அவரைத் துரத்திக்கொண்டிருந்தது. நான் அவர்களுக்கு தலைமை தாங்கினேன்.”

“நான்தான் முதலில் விரட்டிப் பிடித்து அவன் மண்டையில் இரும்பு ராடால் அடித்தேன்” குரலில் ஏற்ற இறக்கத்துடன், அந்தத் தாக்குதலை மீண்டும் நிகழ்த்துவதுபோல் நடித்துக் காட்டுகிறார்.

“அவன் கீழே விழுந்தான். எல்லோரும் சேர்ந்துகொண்டு அடித்தார்கள். கும்மாங்குத்து விழுந்தது.”

இதேபோல மேலும் இரண்டு பேரைக் கொன்றதாகச் சொல்கிறார் நிஷாந்த். இந்து கும்பலிடமிருந்து ஓடி தப்பிக்க முயலும் முஸ்லிம்களை விரட்டிப் பிடித்து, கையில் கிடைத்ததை எல்லாம் கொண்டு அடித்துக் கொல்வேன்.

“நான் மூன்று பேரைக் கொன்றாக வேண்டும். அதை முடித்தேன்.”

“முஸ்லிம்களை விரட்டியபோது போலீஸ்காரர்கள் அங்கு இருந்தார்களா?”

“அப்போது அவர்கள் யாருமில்லை. கொன்று தூக்கி எறிந்த பிறகும்கூட யாரும் வரவில்லை.”

போலீஸாரால் கண்டுபிடிக்க முடியாத கொலைகாரர்கள்,ப தில்லியில் கொல்லப்பட்ட 47 பேரில் 85 வயது பெண்மணியும் உண்டு. அவர் உயிரோடு எரிக்கப்பட்டார். மற்ற அனைவரும் ஆண்கள். பெரும்பாலானோர் 20கள், 30களில் உள்ளவர்கள். அதில் பாதி பேர் துப்பாக்கிக் குண்டுக்கு பலியானவர்கள். அவர்களின் குடும்பத்தினர் அந்தக் கொலைகளை விவரித்துள்ளனர். நேசத்திற்குரியவர்கள் எரித்து, சுட்டு, அடித்துக் கொல்லப்படுவதைச் சொல்லும் கொடூர அவலம்மிக்க கதைகள் அவை.

ஆனால் அந்த வன்முறையில் இறங்கியவர்கள் பற்றி நமக்கு இதுவரை அதிகம் தெரியாது. நினைத்துப் பார்க்க முடியாத இந்த வன்முறையில் இறங்கியவர்கள் யார்… தில்லி போலீஸ் சொல்லும் விவரங்கள் துணுக்குச் செய்திபோல சுருக்கமானவை. மார்ச் 2ஆம் தேதி அமித் மிட்டல் என்ற போலீஸ் செய்தித் தொடர்பாளர் Scroll.inக்கு தந்த தகவல் இது: 254 முதல் தகவல் அறிக்கைகள் (எஃப்.ஐ.ஆர்) பதியப்பட்டுள்ளது, 903 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அதற்கு மேல் எந்தத் தகவலும் இல்லை, குறிப்பாக கைது செய்யப்பட்டவர்கள் பற்றி. 369 முதல் தகவல் அறிக்கைகள் தாக்கல்செய்ய்பட்டுள்ளதாகவும் 33 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் மார்ச் 3ஆம் தேதி தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பெயர் குறிப்பிட விரும்பாத நபர்கள் சொன்னதன் அடிப்படையில் செய்தி வெளியிட்டது.

இந்த வன்முறையை விசாரிக்க நியமிக்கப்பட்ட இரண்டு சிறப்பு புலனாய்வு குழுக்களின் அதிகாரிகளிடம் Scroll.in பேசியது. அவர்கள் கருத்துக் கூற மறுத்துவிட்டார்கள். பல்வேறு தொலைபேசி தொடர்புகளுக்கு வட கிழக்கு தில்லி காவல் துறை இணை ஆணையர், துணை ஆணையர் ஆகியோரிடம் எந்தப் பலனும் இல்லை. பெயர் குறிப்பிட விரும்பாத “காவல் துறை” தகவல்கள் மூலம் சில செய்திகள் வெளியாகின. ‘வெளியிலிருந்து’ வந்தவர்கள், அருகிலுள்ள உத்தரப்பிரதேசத்தின் கும்பல்கள் என அதன் அடிப்படையில் செய்திகள் வெளியாகின. தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்கூட ‘அன்னியர்களையே’ குற்றம்சாட்டினார், அந்தப் பகுதியில் வாழும் நபர்களை அல்ல.

ஆனால் உள்ளூர் மக்களுடன் பேசும்போது முற்றிலும் மாறுபட்ட உண்மைகள் வெளியாகின்றன. அந்தக் கொலைகார கும்பலில் நிஷாந்த் போன்ற சாமானியர்கள், வழக்கமான நாளின், வழக்கமான வேலைகளைச் செய்துகொண்டிருப்பவர்கள் இருந்தார்கள் என்பது அதில் தெரியும்.

தற்காப்புக்காக நடந்தது

மார்ச் 1ஆம் தேதியன்று வட கிழக்கு தில்லியின் ஒவ்வொரு கலவரம் பாதித்த பகுதியாக நான் சென்றேன். ஒப்பீட்டளவில் பாதிப்பு இல்லாத பக்கத்து பகுதிகளுக்கும் சென்றேன்.
இந்துக்கள், முஸ்லிம்கள் என பல தரப்பட்ட இளைஞர்களிடம் தில்லியில் உச்சத்திலிருந்த பிப்ரவரி 24, 25ஆம் தேதிகளில் அவர்கள் என்ன செய்தார்கள் என பேசினேன். பலவிதமான பதில்கள் கிடைத்தன: அந்த நாட்களில் வீட்டை விட்டு வெளியே போகவே இல்லை என்று சிலர் பதில் கூறினார்கள். தங்களைத் தற்காத்துக்கொள்ள ‘தங்களால் இயன்ற’ அத்தனையையும் செய்ததாகப் பலர் கூறினார்கள். தங்களை நோக்கி வந்த கும்பல்கள் முன்னேறி வரவிடாமல் கற்கள், இரும்புத் தடிகள், கம்புகள் கொண்டு தற்காத்துக்கொண்டதாக அவர்கள் கூறினார்கள்.

குறிப்பாக முஸ்லிம் இளைஞர்கள் தற்காப்புக்காகத்தான் இது நடந்தது என்று திரும்பத் திரும்ப கூறினார்கள்.

கலவரக்காரர் ஆன காவலாளி. ஆனால் இந்து ஆண்கள் இன்னும் ஒரு படி மேலே போக தயாராக இருந்தார்கள். நானும் ஒரு இந்து என்பதை எனது கையில் கட்டிய கயிறு உள்ளிட்ட அடையாளங்களில் கண்டுகொண்டது அவர்களுக்கு நம்பிக்கை அளித்தது. பாதுகாப்புப் படைகளின் ஆதரவுடன் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் பங்கேற்றது பற்றி அவர்கள் வெளிப்படையாகப் பேசினார்கள். மெளஜ்பூரில் ஒரு பள்ளியில் காவலாளியாக வேலை பார்க்கும் ஒரு நபர் அப்படிப்பட்ட ஒரு நபர். தனது பகுதியில் தாக்குதலில் ஈடுபட்ட ஒரு கும்பலுடன் இணைந்துகொண்டதாக அவர் கூறினார். ஒரு இரும்புத் தடி தவிர அவரிடம் வேறு எதுவும் இருக்கவில்லை. தனக்குத் தெரிந்தவர் மூலம் லைசென்ஸ் கொண்ட துப்பாக்கியை வாங்குவது பற்றி அவர் இப்போது பேசி வருகிறார்.
“அதற்கு மூன்றரை லட்சமாகும் என்கிறார்கள். ஆனால் அது நல்ல முதலீடுதான். கடந்த வாரம் நடந்தவற்றுக்குப் பிறகு சுய பாதுகாப்புக்கு துப்பாக்கி தேவை.”

“நீ இந்து என்பதால்தான் இதைச் சொல்கிறேன்”

ஞாயிறு மாலை என்னை ஏற்றிச் சென்ற 32 வயது கார் டிரைவர் சில்லிட வைக்கும், வெளிப்படையான விவரணைகளைக் கூறினார். ஒரு டாக்ஸி ஆப் சேவையில் பணியாற்றும் அவர் முதலில் பேசத் தயங்கினார். யமுனை நதிக்கரையைக் கடந்து வட கிழக்கு தில்லிக்குள் செல்லத் துவங்கியபோது பேசத் துவங்கினார்.

“நீங்கள் ஒரு இந்து என்பதால்தான் இதைச் சொல்கிறேன். இல்லாவிட்டால் இதெல்லாம் பேசக்கூடிய விஷயம் அல்ல.” கோண்டா பகுதியின் அரவிந்த் நகரைச் சேர்ந்த அவர் பிப்ரவரி 25ஆம் தேதி முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் சாந்பாக் பகுதிக்கு சென்றது பற்றி பேசினார்.

“அங்குதான் நமது இந்து சகோதரர்கள் குறைவான எண்ணிக்கையில் இருக்கிறார்கள்” என்றார். அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தற்கான காரணத்தைச் சொல்லும் வகையில், அரவிந்த் நகர், சாந்த் பாகிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
தன்னிடம் ஒரு துப்பாக்கியும் வாளும் இருந்ததாக அவர் கூறினார்.

“இடது கையில் துப்பாக்கியும் வலது கையில் வாளும் வைத்திருந்தேன” என்றார்.

“எனது அப்பாவின் நினைவு வந்ததாக என் அத்தை கூறினார். 1984 கலவரத்தில் அவர் இதுபோலத்தான் வெளியே கிளம்புவாராம்.”

1984இல் பெருமளவிலான சீக்கிய அழித்தொழிப்பு நடந்தது. நிகழ்த்தியது பெருமளவில் இந்துக்கள்.

“அந்த சமயத்தில் என் அப்பா தனது வாளை குருதியால் ரத்தமாக்கினார். இந்தமுறை எனது வாளினை செங்குருதி நிறத்தில் தயார்செய்து கொண்டு போனேன்.”

2003இல் இறந்தபோன தனது தந்தை உத்தரப்பிரதேசத்திலிருந்து இந்தப் பகுதிக்கு தான் பிறக்கும் முன்பே இடம் பெயர்ந்து வந்ததாக அந்த டிரைவர் கூறினார். 8ஆம் வகுப்போடு படிப்பை நிறுத்திய அந்த டிரைவருக்கு 2010இல் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன.

“நாங்கள் செய்ததில் எங்களுக்கு ஆகப் பெரிய திருப்தி” பிப்ரவரி 25ஆம் தேதி அரவிந்த் நகரிலிருந்து இந்து ஆண்கள் சாந்த் பாகை அடைந்த போது முதலில் மின் இணைப்பைத் துண்டித்தனர் என்கிறார் அந்த டிரைவர்.

“ஆனால் எந்த வீடுகள் முஸ்லிம்களுடையவை என்பது எங்களுக்குத் தெரியும்” என்று கூறினார்.

வட கிழக்கு தில்லி கலவையான மக்கள் வசிக்கும் பகுதி. ஆனால் சில பகுதிகளில் முஸ்லிம்கள் அதிகமாகவும் பக்கத்திலேயே இந்துக்கள் வசிக்கும் பகுதியும் உண்டு, அதற்கு நேர் எதிரான வகையிலும் உண்டு. மின் இணைப்பைத் துண்டித்த பிறகு இந்து ஆண்கள் கொலைகளில் இறங்கத் தொடங்கினார்கள்.

“அந்த நாய்களின் எண்ணிக்கையைக் குறைத்தோம். இந்தக் கைகளால் நாங்கள் செய்ததில் எங்களுக்கு மிகப் பெரிய திருப்தி உண்டு.”

அந்த இரவில் எவ்வளவு பேர் கொல்லப்பட்டார்கள் என்பதை அந்த டிரைவர் சொல்ல மறுத்துவிட்டார். அந்தப் பகுதியில் செல்லும் சாக்கடையில் பிணங்களை வீசி எறிந்ததாக அவர் கூறினார்.

“சாக்கடைக்குள் புதைந்திருக்கும் ரகசியங்கள் சீக்கிரமே வெளியே வரும். அங்கிருந்து அந்த நாய்களின் எலும்புகளை எடுத்துக்கொண்டே இருக்கலாம்.”

புதிய இந்தியா முஸ்லிம்கள் மீது வன்முறையை செலுத்துவதை விவரணையாக சொல்வதில் இந்து ஆண்களுக்குள்ள ஆர்வத்தைப் பற்றி சமூகவியலாளர் சஞ்சய் ஸ்ரீவாஸ்தவா சொல்வது இது: இது இந்தியாவின் “அடுத்த சூழமைவு.” இந்த சூழமைவில், அதையெல்லாம் ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டியதில்லை. அதைப் பொதுவெளியில் சொல்லலாம், சமூக வட்டத்தில் அதற்காகப் பெருமை கொள்ளலாம்.”

“இந்தியா ஒரு இந்து தேசம் என்பதை அமைப்புரீதியாக வலுமைப்படுத்தவே இவை பேசப்படுகின்றன” என்கிறார் அவர்.

இந்தக் கட்டுரையில் தனது பெயர் வருவது குறித்து லாரி ஓனர் நிஷாந்துக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

“அடிப்படையில் நமது மக்கள் மாறவில்லை. அதற்கு மாறாக, என்ன நினைக்கிறோம், எதிர்காலத்தில் என்ன நடக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்துவதற்கான பெரிய அளவிலான சூழமைவு ஏற்பட்டுள்ளது.”

“நாங்கள் நிஜமாகவே அவர்களைக் கொன்றோம்”

அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பாதுகாப்புப் படையினர் இந்தக் குழுக்களுக்கு முழு ஆதரவு கொடுத்தார்கள் என்கிறார் அந்த டிரைவர்.

“அவர்கள் சொன்னார்: நீங்கள் எங்களுக்கு ஆயுதங்கள் கொடுங்கள், நாங்கள் உங்களுக்குப் பிணங்களைக் கொடுக்கிறோம்” என்றார் அந்த டிரைவர்.

பாதுகாப்புப் படையினர் ஏன் அவர்கள் ஆயுதங்கள் கோரினார்கள் என்று கேட்ட போது,

“அவர்களின் தோட்டாக்களுக்கு கணக்குச் சொல்லியாக வேண்டும். அதனால் அதிலிருந்து அவர்கள் சுட முடியாது. எங்களுக்குத் துப்பாக்கிகள் ஏற்பாடு செய்வது பெரிய காரியமல்ல. எங்கள் நண்பர்கள் எல்லாம் எடாவா, ஆக்ரா, ஹரியானாவைச் சேர்ந்தவர்கள். அங்கெல்லாம் துப்பாக்கிகள் புகுந்து விளையாடும்.”

எந்த வலது சாரி அமைப்புடனும் தனக்குத் தொடர்பில்லை என்கிறார் அந்த டிரைவர்.

“இந்து பெண்களின் ரேப், படுகொலைகள்” பற்றிய கதைகளைக் கேட்ட பிறகு தானும் தனது நண்பர்களும் சுய விருப்பத்துடன் அதைச் செய்ததாக அவர் கூறினார்.

இந்து குழுககள் எவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்டன என்பது பற்றி அவர் விரிவாக சொல்லவில்லை. ஆனால் இது பா.ஜ.கவின் சித்தாந்த ஊன்றுகோலான ஆர்.எஸ்.எஸ்ஸுடனோ, அதன் சங்கப் பரிவார அமைப்புகளுடனோ தொடர்புகொண்டது அல்ல என்றார்.

“ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங் தள் செய்ததுதான் இது என்கிறார்கள். அப்படி அல்ல. இது இந்துக்கள் செய்தது” என்கிறார் அந்த டிரைவர்.

முடிவுரை போல அந்த டிரைவர் கூறினார்: “நாங்கள் அவர்களை (முஸ்லிம்கள்) நிஜமாகவே கொன்றோம். இல்லாவிட்டால் அவர்கள் ஏன் சமாதானம், சமாதானம் என்று பிச்சை எடுக்கப் போகிறார்கள்.”

நன்றி: https://scroll.in/article/955044/meet-the-rioters-who-say-they-killed-muslims-in-delhi-violence

தமிழில்:செந்தில் குமார்