உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மீதான பாலியல் குற்றச்சாட்டிற்கு இந்திய பார் கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, 35 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டுப் புகார் ஒன்றை கூறியுள்ளார். இதுகுறித்த செய்தி ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து, நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக விசாரணை நடத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான விடுமுறை கால அவசர அமர்வு கூடியது. அப்போது நடத்தப்பட்ட விசாரணையில், தன்மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டை மறுத்துப் பேசினார் நீதிபதி ரஞ்சன் கோகாய். மேலும் “உச்ச நீதிமன்றத்தில் பணிபுரிந்த முன்னாள் இளநிலை பெண் உதவியாளர் என்மீது கூறிய பாலியல் குற்றச்சாட்டு பொய்யானது, ஆதாரமற்றது. சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாகச் சுயநலமில்லாமல் சேவையில் ஈடுபட்டிருக்கும் என்மீது கூறப்படும் இந்தப் புகார்கள் நம்ப முடியாதவை.” என்று தெரிவித்தார்.
அடுத்த வாரம் சில முக்கியமான வழக்குகளை விசாரிக்க உள்ளதால் தன் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளதாகக் குற்றம் சாட்டிய அவர், எனது பணிக்காலம் முடியும் வரை பயமின்றி நான் செயல்படுவேன் எனத் தெரிவித்தார். “20 ஆண்டுகள் நீதிபதியாக இருந்தபின்பும் கூட என் வங்கிக்கணக்கில் 6.80 லட்சம் ரூபாய்தான் உள்ளது. என் அலுவலக உதவியாளரிடம்கூட அதிகப் பணம் உள்ளது.” என்றும் குறிப்பிட்டார் கோகாய்.
மேலும் நீதித்துறையின் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று கூறிய அவர், நீதித்துறையின் சுதந்திரத்தை ஊடகங்கள் பாதுகாக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட அருன் மிஷ்ரா மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகிய இரண்டு நீதிபதிகளும் இந்தக் குற்றச்சாட்டுகளில் எந்தவித முகாந்திரமும் இல்லை என்று தெரிவித்தனர்.
“பிரதமர் மோடியின் சுயசரிதை திரைப்படம், ராகுல் காந்தி மீது போடப்பட்டுள்ள அவதூறுவழக்கு உள்ளிட்ட தேர்தல் தொடர்பான பல்வேறு வழக்குகளை நீதிபதி ரஞ்சன் கோகாய் இந்த வாரத்தில் விசாரிக்க உள்ளார். இதன்காரணமாகத் தான் அவர்மீது இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.” என்று தெரிவித்திருந்தார் வழக்கறிஞர் சுரத் சிங்.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மீதான பாலியல் குற்றச்சாட்டிற்கு இந்திய பார் கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, பார் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நீதித்துறைக்கு தீங்கு விளைவிக்கும் விதமாகவே தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் குற்றச்சாட்டு, எழுந்துள்ளது. நீதித்துறையை அத்துறுத்தும் விதமாகவும், சீர்குலைக்கும் விதமாகவும் முன்வைக்கப்பட்டுள்ள இது போன்ற குற்றச்சாட்டுகளை ஊக்குவிக்கக் கூடாது. இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகுறித்து ஆலோசிப்பதற்காகப் பார்க வுன்சிலின் உயர்மட்டக் குழு உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்.” என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.