நாங்குநேரி சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ பதவியிலிருந்து காங்கிரஸ் கட்சியின் ஹெச்.வசந்தகுமார் பதவி விலகினார்.
2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக வசந்தகுமார், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி தொகுதியில் போட்டியிடு வெற்றிபெற்றார். இந்நிலையில், தற்போது நடந்து முடிந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிட்டார் வசந்தகுமார்.
இதில், 2,59,808 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். எம்.பியாக வசந்தகுமார் நாடாளுமன்றம் செல்லவிருப்பதால், தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யவிருப்பதாகச் சமீபத்தில் தகவல் வெளியானது. ஆனால், அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. இதுதொடர்பாக, வசந்தகுமார் எம்.எல்.ஏ பதவியிலிருந்து விலகுவது சிக்கல் என்றும் அதனால் அவர் இன்னும் பதவியை ராஜினாமா செய்யவில்லை என்றும் சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டுவந்தன.
இந்நிலையில், இன்று சபாநாயகர் தனபாலிடம் தனது விலகல் கடிதத்தை அளித்தார் வசந்தகுமார். தமிழக சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 8 லிருந்து 7ஆக குறைந்துள்ளது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வசந்தகுமார், “நாங்குநேரி தொகுதியில் 5 ஆண்டுகளுக்குள் செய்ய வேண்டிய திட்டங்களை நான் 3 ஆண்டுகளின் நிறைவேற்றியுள்ளேன். இருப்பினும் எனது தனிப்பட்ட முயற்சியில் நாங்குநேரி தொகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களைச் செய்வேன்.” என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுமா என்பதைத் தலைமை தான் முடிவுசெய்யும் எனவும், காங்கிரஸ் கட்சிக்கு நாங்குநேரியில் ஆதரவு இருப்பதால் காங்கிரஸ் போட்டியிட முயற்சி எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.