முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பரோலில் வெளிவந்துள்ள நளினி, தனது பரோலை மேலும் ஒரு மாதகாலம் நீட்டிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவுக்குத் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் ஏழுபேரில் ஒருவர் நளினி. இவர் தனது மகளின் திருமண ஏற்பாடுகளுக்காக ஆறுமாதகாலம் பரோல் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில் ஒரு மாதம் பரோல் வழங்கி கடந்த மாதம் 5ஆம் தேதி உத்தரவிட்டது நீதிமன்றம். இதையடுத்து கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் நளினி பரோலில் விடுவிக்கப்பட்டார்.
வேலூர் சாத்துவாச்சாரியில் தங்கி மகளின் திருமண ஏற்பாடுகளை மேற்கொண்டுவரும் நளினி, அதற்கான ஏற்பாடுகள் முடிவடையாத நிலையில் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க கோரி தமிழக அரசிடமும், சிறைத் துறையிடமும் ஆகஸ்ட் 8ஆம் தேதி மனு அளித்துள்ளார். இந்நிலையில், அவரின் இந்த கோரிக்கையை நிராகரித்தது தமிழக அரசு.
அதைதொடர்ந்து, பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்தார் நளினி.
இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ், நிர்மல் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக தமிழக அரசும், சிறைத்துறையும் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வரும் 22ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.