உலகின் பல மூலைகளில் தீவிரவாதத்தின் கைகள் ஓங்க ஆரம்பித்திருக்கின்றன. நியூசலாந்து, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் மசூதிகள், தேவாலயங்கள் குறிவைத்து தாக்கப்பட்டிருக்கின்றன. உலகின் பல இடங்களில் வாழும் தீவரவாத அமைப்புகளுக்கு அடிப்படை தேவையான நிதி யாரிடமிருந்து செல்கிறது, எங்கு பதுக்கப்படுகிறது என சர்வதேச அமைப்புகள் கண்காணித்து வருகின்றன.
இந்நிலையில் தீவிரவாதத்திற்கு உதவுவதாக பாகிஸ்தான் நாட்டை குறிப்பிட்டு சில முரண்பாடான தகவல்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதத்தில் பாகிஸ்தானை Grey பட்டியலில் FATF வைத்தது. இதனிடையே கடுமையான நிதி நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நிறுவனங்களிடம் முயற்சித்து வரும் பாகிஸ்தானுக்கு FATF-ன் கெடு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
பாகிஸ்தான் அரசு ஏற்கெனவே ஒப்புக்கொண்டதற்கு இணங்க பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி செல்வதை தடுக்கும் நடவடிக்கைகளை வரும் அக்டோபருக்குள் தீவிரமாக பின்பற்றாவிட்டால் பாகிஸ்தானை கறுப்புப் பட்டியலில் இணைப்போம் என்று சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு (Financial Action Task Force -FATF) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக பாரிஸை தலைமையிடமாகக் கொண்ட நிதி நடவடிக்கை பணிக்குழு, பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி செல்வதை பாகிஸ்தான் தடுக்க வேண்டும் என்று கண்டித்தது.
இது தொடர்பாக FATF வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி செல்வதை தடுப்பதில் பாகிஸ்தான் தீவிரமாக செயலாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தோம், அந்த உடன்படிக்கையின்படி வரும் அக்டோபர் மாதத்திற்குள் மேற்கண்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்த தவறினால் பாகிஸ்தானை கறுப்புப் பட்டியலில் இணைப்பது உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.’ என்று கூறியுள்ளது.
கடந்த ஜனவரி மற்றும் மே என இரண்டு முறை பாகிஸ்தான் இந்த இலக்கை தவறிவிட்ட நிலையில் இறுதியாக அக்டோபர் மாதத்திற்குள் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. கறுப்புப் பட்டியலில் பாகிஸ்தான் வைக்கப்பட்டால் உலக வங்கி, சர்வதேச நிதியம், ஐரோப்பிய வங்கி உள்ளிட்ட சர்வதேச நிதி அமைப்புகளிடம் இருந்து நிதி பெருவதில் பெரும் சிக்கல் ஏற்படலாம்.