இந்திய பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொடர்ந்து கடிதம் எழுதியும் பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுப்பதும் அரசியல் வட்டாரத்தில் ஓர் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

தற்போது, அடுத்த வாரம் நடக்கவிருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இரண்டு பிரதமர்களும் பங்கேற்க இருக்கிறார்கள். இதைப்பற்றி இந்திய வெளியுறவுதுறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், “எனக்குத் தெரிந்தவரையில் அடுத்த வாரம் பிஷ்கெகில் நடைபெறவிருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பாகிஸ்தானுடன் எந்தவித பேச்சுவார்த்தையும் கிடையாது” என்று நிலையில்லாத பதிலை சொல்லியிருக்கிறார்.

இதையடுத்து இம்ரான் கான் மோடிக்கு வாழ்த்து தெறிக்கும் விதமாக ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில் பாகிஸ்தான் இருதரப்பு பேசுச்சு வார்த்தைக்குத் தயாராக இருப்பதாகவும், பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையில் காஷ்மீர் உட்பட எல்லா பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்.

புல்வாமா தாக்குதலுக்குப் பின்னர் இரு நாட்டிற்கிடையேயான உறவு மிகவும் பாதிப்படைந்திருக்கிறது. 1960இல் போடப்பட்டிருந்த சிந்து நீர் ஒப்பந்தத்தையும் மத்திய அரசு ரத்து செய்ய போவதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில் தேர்தலில் மோடி வெற்றி பெற்றவுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வாழ்த்து தெரிவித்து, பாகிஸ்தானும் இந்தியாவும் இணைந்து செயல் புரிய வேண்டும் என்று பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

இப்படி பாகிஸ்தான் பலமுறை இந்தியாவைப் பேச்சுவார்த்தைக்கு அழைப்புவிடுத்திருந்தாலும் இந்தியா “தீவிரவாதமும் சமாதானமும் ஒரே இடத்தில இருக்காது” என்று எல்லா பேச்சு வார்த்தைகளையும் தவிர்த்து வருகிறது.

பாகிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷியும் இந்திய வெளியுறவுதுறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதுவது குறிப்பிடத்தக்கது.