2.எதிர்ப்பின் காலம்

எனக்குத் தொண்டை சரியாக இருந்தால் மார்ச் 22 ஞாயிறு மாலை ராகு காலத்தில் இந்த நாட்டின் உண்மையான சமூகப் போராளிகளாக இப்போது திகழ்ந்துவரும் மருத்துவர்களையும் செவிலியர்களையும் தூய்மைப் பணியாளர்களையும் இன்னபிற அத்தியாவசியச் சேவைகளை வழங்குபவர்களையும் வாழ்த்திப்பாடுவேன். பால்கனிக்கு அந்தப் பக்கமிருந்து குப்பைத் தொட்டியின் நாற்றம் அடிக்காமலிருந்தால் பால்கனியில் நின்று அதை பாடுவேன். கைகளை ஓங்கி அறைந்து அடித்துக்கொண்டே பாடுவேன். ஏனென்றால் இந்தியாவில் காலம் காலமாக இப்படித்தான் கொசுக்களை அடித்துக்கொன்றுவருகிறோம். இப்போது வைரஸ்களை கொல்வதற்கும் இரு கைகளையும் ஓங்கி அறைந்துகொள்வதைவிட வேறு வழியிருப்பதாகத் தெரியவில்லை. பிறகு, கைகளில் நச்சுயிரிகள் இல்லையென்றால், ரேகைகளினினூடாக கொல்லப்பட்ட கொரோனா வைரஸ்களின் நுண்குருதிப் பொட்டுகள் தெரிந்தால், என் மனைவி மக்களோடு தட்டிப்பாடுவேன். முன்னதாக இந்தக் கரசேவை வெற்றிகரமாக அமையவேண்டும் என்று எல்லாம் வல்ல மகாமாரியம்மனை வணங்கிக்கொள்கிறேன்.

நிச்சயமாகப் பாடுவேன். ஆனால் இந்த நாட்டின் பிரதமரை வாழ்த்தி ஒரு சொல்கூட பாடமாட்டேன். எவ்வளவு பெரிய மனிதத் துயரம் கட்டவிழ்ந்துகொண்டிருக்கிறது! உலகம் எப்படியெல்லாம் எதிர்வினை ஆற்றிக்கொண்டிருக்கிறது! ஆனால் இந்த மனிதர் என்ன செய்கிறார்? தனது எதிர்வினையின் தொடக்கச்சுற்றில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒரு தலைவராக, பிரதமராக, சர்வ வல்லமை பொருந்திய மனிதராக. தோற்றுப்போய்விட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.

பீதிகிளப்புகிர இரவுநேர தொலைக்காட்சி உரைகளுக்குப் புகழ்பெற்ற மோடியிடமிருந்து மக்கள் எதிர்பார்த்தது வேறு. நாட்டில் பெரும்பான்மையான மக்களை இரண்டாம் தர குடிமக்களென எடுத்த எடுப்பிலேயே குறிப்பால் உணர்த்திச்சென்ற மோடியின் இந்தி உரையில் ஒரு சரக்கும் இல்லை. சுருக்கமாகச் சொல்லப்போனால், “மக்களே, உங்களை நீங்களே தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்” என்று மோடி உபதேசம் செய்தார். அவ்வளவுதானே. எங்களால் எதுவும் செய்யமுடியாது என்று கைவிரித்தார். அவ்வளவுதானே. இதை அவர் அஜர்பைஜானிய மொழியில் சொல்லியிருந்தாலும் நமக்கு புரிந்திருக்கும். சோஷல் டிஸ்டன்சிங் பற்றி வலியுறுத்தினார். (பிரைம் மினிஸ்டர். அந்த ஒன்றுக்கு மட்டும் நாம் கவலையே படவேண்டாம். இரண்டாயிரம் ஆண்டு காலமாக நாம் சோஷல் டிஸ்டன்சிங் பயன்படுத்திவருகிறோம் என்பதால் நீங்கள் எள் என்றால் நாங்கள் எண்ணெய் என்போம்). ஆனால் கைதட்டுவது. பாடுவது. தள்ளி நிற்பது என்பதெல்லாம் கொரோனாவை வெற்றிகொள்ள போதாது என்று ஒரு சங்கியின் குருவிமண்டைக்குமே தெரியுமே?

கொரோனாவை உலக நாடுகள் – பெரிய சிறிய நடுவாந்தர நாடுகள் – எப்படி எதிர்கொள்கின்றன என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. எல்லோரும் திண்டாடுகிறார்கள் என்பது நிஜமே. ஆனால் நாட்டின் தலைமை பொறுப்பில் இருப்பவர்களே களத்தில் இறங்கி செயல்படுகிறார்கள். ஒட்டு மொத்த அரசு எந்திரங்களையும் முடுக்கியிருக்கிறார்கள். சில நாடுகள் தடுப்பு மருந்து தயாரிப்பில் வேகம் காட்டுகின்றன. சில நாடுகள் ஜூரவேகத்தில் மருத்துவமனை வசதிகளையும் ஐசியூ படுக்கைகளையும் அதிகரிக்கின்றன. சில சின்ன நாடுகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். நகரங்கள் மட்டுமல்ல நாடுகளே முற்றிலும் செயல்முடக்கம் செய்யப்பட்டுள்ளன. அடையாளபூர்வமாக அல்ல.

இதுபோன்ற நேரங்களில்தான் அரசுகள் தங்கள் முழு வீச்சைக் காட்டவேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். அரசு என்கிற அமைப்பை சதா விமர்சித்துக்கொண்டிருக்கும் அராஜகவாதிகள் கூட இந்த நேரத்தில் அரசு எந்திரம்தான் தங்களை காப்பாற்றமுடியும் என்று கூறுகிறார்கள். பலவீனமான அல்லது மாயமாக மறைந்து நிற்கிற அரசுதான் வேண்டும் என்று கூறிக்கொண்டிருந்த அமெரிக்கா உள்பட பல முதலாளித்துவ நாடுகளில்கூட, இந்த கண்தெரியாத எதிரிக்கு எதிரானப் போரில் போராடுவதற்கு வால் ஸ்ட்ரீட்காரர்கள் வரமாட்டார்கள், அரசுதான் வரவேண்டும் என்று கூறுகிறார்கள். ஏற்கனவே அரசுமையவாதத் தலைமைகொண்ட சீனாவில் மட்டுமல்ல, சந்தைமையவாத அரசியல் ஓங்கியுள்ள ஸ்பெயின், ஜெர்மனி, கனடா, தென்கொரியா, பிரி்ட்டன், பெல்ஜியம் போன்ற நாடுகளில்கூட அரசும் அதன் தலைமையும்தான் போரில் முன்னணியில் இருக்கின்றன.

அரசுக்கு அழகு ஆபத்தில் உதவ வருவது. அப்படியென்றால் எல்லா அதிகாரங்களையும் தன்னிடம் குவித்துக்கொள்கிற அரசுகள் எந்த அளவுக்கு செயல்படமுடியும்? செயல்படவேண்டும்? அத்தகைய அரசுகளை நாம் வெறுக்கிறோம் என்பது ஒரு பக்கமிருக்கட்டும். ஆனால் சர்வாதிகார அரசுகள் நினைத்தால் ஒரு நொடிப் பொழுதில் நாட்டின் அரசுக் கட்டமைப்பை ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்துமுடிக்கும்படி செய்யமுடியும்தானே? அது முடியாது என்றால் அந்த பாழாய்ப்போன அதிகாரத்துக்கு – சர்வ அதிகாரத்துக்கு – என்னதான் மதிப்பு? என்னதான் பலன்?

இந்தியாவில் இந்திரா காந்தியைவிட மிகவும் தனியதிகாரம் கொண்ட ஒரு பிரதமர் என்றால் அது நரேந்திரமோடிதான். 2014 இலிருந்து அவர் மாநிலங்களின் அதிகாரங்களை மத்தியில் இழுத்துக்கொள்கிறார். நீதிமன்றம், தேர்தல் ஆணையம், திட்டக் குழு போன்ற அரசியல்சாசன அதிகார மையங்களை பிரமதர் அலுவலகத்திலிருந்தே ஆட்டிப்படைக்கிறார். மக்களைத் தவிர அனைவரையும் தோற்கடித்துவிட்ட அந்த சர்வாதிகாரிக்கு எதிர்க்கட்சிகள்கூட தங்கள் செயல்படாமையின் மூலமாக உதவிசெய்கின்றன. அவர்களது கட்டளைக்கு அடிபணிந்து, ஏவப்படுவதற்காகக் காத்திருக்கும் மீடியா, காவல் நாய்களின் எண்ணிக்கை ஆயிரம்.

இவ்வளவு சர்வ அதிகாரம் பெற்ற மோடியின் அரசால் ஒரு மருத்துவ அவசரநிலையை பிரகடனப்படுத்த முடியவில்லை. நாட்டிலுள்ள அனைத்து அரசு, தனியார் மருத்துவமனைகளும் இன்னின்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று ஆணையிட முடியவில்லை. ஸ்பெயின் தற்காலிகமாக அனைத்து மருத்துவமனைகளையும் தேசியமயமாக்கியிருக்கிறது. நேரடியாகவும் மறைமுகமாகவும் குஜராத்தின் செல்லப்பிள்ளைகள் 5000, 10000 கோடி மதிப்பிலான தொகைகளைச் சுலபமாகத் தங்கள் கைககளில் மாற்றிக்கொள்ளக்கூடிய ஒரு காலகட்டத்தில், சில பல ஆயிரம் கோடிகளை மக்களுக்காக வாரி இறைக்க மோடியால் முடியவில்லை, அல்லது மனசில்லை.

இங்கே கேரளத்தில் பிணராயி விஜயன் அரசு கொரோனாவை எதிர்கொள்ள சில திட்டங்களை வெளியிடுகிறது. அவர் ஒரு இடதுசாரி, மக்களின் நலன்களிலிருந்து தமது அரசியல் முன்னுரிமைகளை வகுத்துக்கொண்டவர். அவர் செய்யவேண்டிய கடமைகளைச் செய்யத் தொடங்குகிறார். மோடி அதை காதுகொடுத்துக் கேட்கவில்லை. மக்களுக்கு நிதிச்சுமையைக் குறைக்கும் விஜயனின் ஓர் அறிவிப்புக்கு எதிராக மோடி அரசு நீதிமன்றம் செல்கிறது. கேவலமாக இல்லையா?

மிகப்பெரிய துயரம் ஏற்படும்போது நாட்டிலுள்ள அனைத்து மக்களையும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக ஒருங்கிணைக்கவேண்டும் என்றால் அரசுதான் அதற்கு ஆணையிட வேண்டும், மக்கள் அதற்கான தீர்ப்பை அளித்திருக்கிறார்கள். அப்போது அரசு சொல்வதை அனைவரும் கேட்பார்கள். ஒருவேளை பாகிஸ்தான் படையெடுத்து வந்திருந்தால் மோடி அப்படித்தான் ஆணையிட்டிருப்பார் என்று நம்பலாம். ஒன்றுமில்லாத, ஒற்றைக்காசு பெறாத அந்த செல்லாக்காசு விவகாரத்தை எப்படி மிருகத்தனமாக நடைமுறைப்படுத்தினார்கள் என்று யோசித்துப்பாருங்கள். ஒட்டுமொத்த நாடே எதிர்த்து நின்றாலும் விட்டேனா பார் என்று சிஏஏ விவகாரத்தில் அமித் ஷா எவ்வளவு உறுதிகாட்டினார் என்பதை மறந்துவிடாதீர்கள். தில்லியில் இந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பிறகு அஜித் தோவல் ஓர் ஊர்வலம் போனார். எல்லாம் கப்சிப். ஆனால் கொரோனா விவகாரத்தில் தென்றல் வீசும் சாளரங்களில் நின்று கைதட்டுங்கள் என்று கூறுகிறார் பிரதமர்!

உண்மையில் மோடி அரசுக்கு ஏற்கனவே வீழ்ச்சிக்காலம் தொடங்கிவிட்டிருக்கிறது. சிஏஏ விவகாரத்தில் அவர்கள் நினைத்ததை நினைத்தபடி நடத்திக்காட்டமுடியவில்லை. கடந்த நாற்பதாண்டுகளில் முன்னெப்போதுமில்லாதபடி பொருளாதாரம் சரிந்திருக்கிறது. புதிய தொழில், வேலை வாய்ப்புகள் எதுவுமே இல்லை. நிர்மலா சீதாராமனின் வழிகாட்டலில் நிதித்துறை, பிரமதர் அலுவலகத்தின் அக்கவுண்ட்டிங் துறையாகச் சிறுத்துப் போயிருக்கிறது. மாநிலத் தேர்தல்களில் பாஜக தோற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலைமை நீடிக்குமானால் பாஜக மேலும் பலவீனமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும். குறிப்பாக தில்லி சம்பவங்களைத் தொடர்ந்து உலகம் இந்தியாவை கவலையோடு நோக்கியது, இந்தியாவின் நடுத்தர வர்க்கமும் முதன்முதலாக சிணுங்கியது.

கொரோனோ ஓர் அற்புதமான வாய்ப்புதான் என்று இந்த அரசுக்குத் தெரியும். தொடர்ச்சியான பொருளாதாரத் தோல்விகளுக்கான பழியை கொரோனா மீது போட்டுவிட்டுத் தப்பிப்பதில் அவர்கள் காட்டும் ஆர்வம் நன்றாகத் தெரிகிறது. ஆனால் ஒருவேளை மோடி, இன்றையச் சூழலில், தானே முன்முயற்சி எடுத்து மிகப்பெரிய மருத்துவ அரண் ஒன்றை இந்த நாட்டில் உருவாக்க முனைந்திருந்தால், சரிந்துகொண்டிருக்கும் அவரது சாம்ராஜ்யத்தைக் காப்பாற்ற அது உதவக்கூடும். சில பல பில்லியன் பணத்தை மக்களுக்கு கொடுத்து திடீர் வேலையிழப்பிலிருந்தும் மருத்துவச் செலவிலிருந்தும் அவர்களை காப்பாற்ற முயற்சி செய்திருந்தால், மக்கள் இந்நேரம் ஹர ஹர மோடி என நிஜமாகவே பாடியிருப்பார்கள். மத்திய அரசு உலகின் பிற நாடுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு – அட, குறைந்தபட்சம் காஷ்மீரில் அனைத்தையும் முடக்கத்தெரிந்த அனுபவத்திலிருந்தாவது பாடம் கற்றுக்கொண்டு – நாடெங்கும் குறைந்தபட்சம் மாநகரங்களையாவது முடக்கியிருந்தால், மோடியைப் போல ஒரு பலமான பிரதமர்தான் வேண்டும் என்று மக்கள் முடிவுசெய்திருப்பார்கள்.

பரிதாபத்துக்குரிய சர்வாதிகாரி, மோடி! இந்தச் சூழலை எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்பதில் அவருக்கு சுயபுத்தியும் இருப்பதாகத் தெரியவில்லை, அவருக்கு உரிய அளவுக்கு அறிவுரை சொல்ல நல்ல நண்பர்களும் இருப்பதாகத் தெரியவில்லை. அமித் ஷாக்களும் அஜித் தோவல்களும் நிர்மலாக்களும் அர்ணாப்களும் என்ன ஆலோசனை சொல்லிவிடமுடியும்?

மோடி மோடிதான், அவர் பிணராயி விஜயன் அல்ல. வளர்முக நாடுகளிலேயே மிகச்சிறந்த சுகாதார உள்கட்டமைப்புக்கு பேர்போன தமிழ்நாடும் அனைத்திந்திய தரநிலைக்கு இப்போது “உயர்ந்துவிட்டது”. ஒரே நாடு, ஒரே ஸ்டாண்டர்டு. தமிழ்நாட்டைப் போல ஹரியானாவை ஆக்கமுடியாவிட்டால், ஹரியானா போல தமிழ்நாட்டை ஆக்கிவிடவேண்டும்.

மோடி சர்வ அதிகாரங்களைப் படைத்தவர் அல்ல. சர்வ அதிகாரங்களையும் படைத்தவர்களுக்கு வேலைசெய்யக்கூடிய, அவர்களுக்கு என்ன வேண்டுமோ அதை மட்டுமே தன் அனைத்து பலங்களைையும் பிரயோகித்து, செய்துதரக்கூடிய, ஒரு தலைமைப் பணியாளர். எனவே வரலாற்றில் இகழ்மிக்கதும் பரிதாபகரமானதுமான ஓரிடத்தையே அவர் பெறுவார். நாம் கொரோனாவைப் பெறுவோம்.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. அழிவு கொள்ளை தீமை கழகம் 2.0 தலைவன் அமெரிக்கா- ஆழி செந்தில்நாதன்
  2. கொரோனா: அவமானத்தால் ஓடும் முதலாளித்துவம் - ஆழி செந்தில்நாதன்