அரசியல் ஆலோசகரும் மற்றும் உத்தியியலாளருமான பிரசாந்த் கிஷோர் மேற்கு வங்காள முதலமைச்சரான மம்தா பானர்ஜியை நேற்று (ஜூன் 6) சந்தித்தார். இந்த சந்திப்பு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இரண்டு மணி நேரம் நடந்த அந்த ஆலோசனையில் மத்திய அமைச்சரும் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிசேக் பானர்ஜியும் கலந்து கொண்டார். பிரசாந்த் கிஷோர் ஜனதாதளத்தின் துணைத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. மம்தா பானர்ஜி ஒப்புக்கொண்டால் பிரசாந்த் கிசோர் அவருடன் பணியாற்றத் தயாராக இருக்கிறார் என்று அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இதைப் பற்றி திரிணாமுல் காங்கிரஸின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், “அரசியல் பல பரிமாணங்களை அடைந்திருக்கிறது. இதை பானர்ஜியும் உணர்ந்திருக்கிறார். அரசியலில் வெற்றி பெறுவதற்குக் கட்சிகளால் பல தரவுகள் பயன்படுத்தப்படுகின்ற நிலையில், நமது மக்களையும் மாநிலத்தையும் பிரச்சனைகளையும் புரிந்துகொண்டால் மட்டுமே போதாது என்பதே நிதர்சனம்” என்றார்.
கடந்த 2014 மக்களவை தேர்தலில் மேற்கு வங்கத்தில் 34 தொகுதிகளில் வெற்றிபெற்ற திரிணாமுல் காங்கிரஸ், நடந்து முடிந்த 17ஆவது மக்களவை தேர்தலில் அங்கு வெறும் 18 இடங்களையே கைப்பற்றியிருக்கிறது. ஆனால், 2014 மக்களவை தேர்தலில் வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்ற பா.ஜ.க இம்முறை மக்களவை தேர்தலில் 11 இடங்களில் வெற்றிப் பெற்றியிருக்கிறது. இந்நிலையில் காவியின் கைப்பிடியில் மேற்கு வங்காளமும் சிக்கிவிடும் என்ற அச்சம் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்களுக்கும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தக் காவிகளின் கைபிடியிலிருந்து மேற்கு வங்காளத்தை மீட்பதற்கே இந்தியாவின் பிரபல அரசியல் உத்தியியலாளர் பிரசாந்த் கிசோரை பானர்ஜியை சந்தித்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
2014 மக்களவை தேர்தலில் மோடி வெற்றி பெறுவதற்கும், 2015இல் நடந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் ஜனதாதளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் பெருமளவு வெற்றி பெறுவதற்கும், 2019 நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் தலைவர் ஜெகன் மோகன் வெற்றி பெறுவதற்கும் பிரசாந்த் கிசோர் ஓர் முக்கிய காரணமாக இருந்துள்ளார் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பிரசாந்த் கிஷோர் பானர்ஜியைச் சந்தித்தது ஜனதா தளம் கட்சியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதைப்பற்றி வரும் ஞாயிறு அன்று நடக்கவிருக்கும் ஜனதாதளத்தின் தேசிய நிர்வாக குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. அப்படி பிரசாந்த் கிஷோர் ஜனதா தளத்திலிருந்து நீக்கப்பட்டால் அது ஜனதா தளத்திற்கு மிகப் பெரிய இழப்பாகவும் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸிற்கு பலமாகவும் அமையும் என அரசியல் வட்டாரங்களில் நம்பப்படுகிறது.