குடிநீர் பிரச்சனை குறித்து புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியின் கருத்து தமிழக மக்களைக் கேவலப்படுத்தும் வகையில் உள்ளதாகக் கூறி இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது திமுக. மேலும் கிரண்பேடி தமிழக மக்களிடையே மன்னிப்பு கோரவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 2ஆம் தேதி கூடியது. அதைதொடர்ந்து, 4ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்ற நிலையில், பிப்ரவரி 8ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான விவாதம் பிப்ரவரி 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடைபெற்றதைத் தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் அவை ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காகக் கடந்த 28ஆம் தேதி சட்டப்பேரவை மீண்டும் கூடியது. அன்றைய தினம் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் இன்று (ஜூலை 1) கூடிய சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றது. அப்போது, தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் பிரச்சனை குறித்து, சட்டப்பேரவையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புக் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.

தீர்மானம் குறித்துப் பேசிய அவர், ”2020இல் தான் சென்னையில் குடிநீர் பஞ்சம் என நிதி அயோக் அறிக்கையில் உள்ளது, ஆனால் 2019லேயே தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுவிட்டது. நிதி ஆயோக் அறிக்கையைத் தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை. குடிமராமத்துப் பணிகளும் தோல்வி அடைந்துள்ளன. குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையின் நீர் ஆதாரமான 4 ஏரிகளும் வறண்டுள்ளன.

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் தண்ணீர் கொண்டுவருவதும், லாரிகளில் தண்ணீர் கொண்டு வருவதும் வரவேற்கத்தக்கது தான்.” என்று பேசினார்.

”குடிநீர் பிரச்சனை குறித்து புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி கருத்து தமிழக மக்களைக் கேவலப்படுத்தும் வகையில் உள்ளது. கிரண்பேடி பேசியது குறித்து விளக்கமளிக்கக் கேட்டபோது, சபாநாயகர் தனபால் அதற்கு மறுப்பு தெரிவித்தார். அரசும் இதை ஏற்கும் மனநிலையில் உள்ளது. கிரண்பேடியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்கிறோம்” எனத் தெரிவித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

மேலும், “தமிழக மக்கள் மீதான மிக மோசமான, தரக்குறைவான விமர்சனத்தை கிரண்பேடி உடனடியாக திரும்பப் பெற்று தமிழக மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.” என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

“சென்னை வறண்டது தொடர்பாக நான் கூறியது எனது கருத்தல்ல, மக்களின் கருத்தே; மக்களின் கருத்தையே நானும் பதிவிட்டிருந்தேன்.” என்று இதற்குப் பதிலளித்துள்ளார் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி.