மக்களவைத் தேர்தலின் 7-ம் மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது.
மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்ட தேர்தல்கள் நிறைவடைந்து உள்ளன. இறுதியாக 7-ம் கட்ட தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. 8 மாநிலங்களில் மீதமுள்ள 59 தொகுதிகளுக்கு அன்றைய தினம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அதிகபட்சமாக பஞ்சாப் மற்றும் உத்தர பிரதேசத்தில் தலா 13 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகளுக்கும், பீகாரில் 8 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்டில் 3 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. சண்டிகர் மாநிலத்தில் மீதமுள்ள ஒரு மக்களவைத் தொகுதிக்கும் அன்றைய தினமே தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், இறுதிக்கட்ட தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடைகிறது. இதனையொட்டி முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளனர். வன்முறை காரணமாக மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும் நேற்றிரவு 10 மணியுடன் பரப்புரை ஓய்ந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் தமிழகத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடைகிறது. ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர் சட்டமன்ற தொகுதிகளில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மேலும், கடந்த மாதம் 18ஆம் தேதி நடந்த மக்களவை மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலின்போது மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்பட்ட 13 வாக்குச்சாவடிகளிலும் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இந்த 4 தொகுதிகள் இடைத்தேர்தல் மற்றும் ஏற்கெனவே கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள், தமிழக அரசியலில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலையில், ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட 4 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கு பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.