2019 மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளில் இன்று (ஏப்ரல் 11) நடைபெற்றுவருகிறது. காலை 11 மணி நிலவரப்படி முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் வெளியிடப்பட்டிருக்கிறது.
நாகலாந்து: 41%,
மேகாலயா: 27%
அருணாச்சல பிரதேசம்: 27.48%
தெலங்கானா: 22.84%
மிசோரம்: 29.8%
மேற்கு வங்கம்: 38.08%
மணிப்பூர்: 35.03%
2019 மக்களவை தேர்தல் இன்று முதல் அடுத்த மாதம் 19ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இதில் இன்று (ஏப்ரல் 11) முதல் கட்டமாக அருணாசல பிரதேசம், ஆந்திர பிரதேசம், அசாம், பீகார், சட்டீஸ்கர், ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா உள்ளிட்ட 18 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதல்கட்டமாக நடைபெறும் தேர்தலில் 1,300 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதேபோன்று முதல்கட்டத் தேர்தலில் 14 கோடி வாக்காளர்கள் வாக்களித்துவருகின்றனர்.
மக்களவை தேர்தலின் 91 தொகுதிகளுக்கும், ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாசலப் பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, கிரண் ரிஜூஜூ, வி.கே.சிங் உள்ளிட்டோர் இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
ஆந்திராவின் களநிலவரம்
ஆந்திராவின் 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் 25 மக்களவைத் தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. பாஜக, காங்கிரஸ், தெலுங்குதேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 319 பேர் இதில் போட்டியிடுகின்றனர். இங்கு 3 கோடியே 93 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். குப்பம் சட்டமன்றத் தொகுதியில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு போட்டியிடுகிறார். ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி புலிவெந்துலா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
“ஆந்திராவில் நூற்றுக்கணக்கான வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்படவில்லை. காலை 9:30 மணி வரை மின்னணு இயந்திரங்கள் கோளாறு ஏற்பட்ட இடங்களில் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்க வேண்டும் மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு ஆன இடங்களில் மறு தேர்தல் நடத்த வேண்டும்.” என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஆந்திராவில் கிட்டத்தட்ட 92,000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு ஆனதாக கூறப்படும் நிலையில் வெறும் 43 இயந்திரங்களுக்கே மாற்று ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
தெலுங்கானா களநிலவரம்
தெலுங்கானாவில் உள்ள 17 மக்களவைத் தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதல் அமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா உள்பட 443 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மாநிலம் முழுவதும் 34, 603 வாக்குப்பதிவு மையங்களில் மக்கள் வாக்களித்துவருகின்றனர். காலை 9 மணி நிலவ்ரப்படி தெலங்கானாவில் 10.6 சதவித வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
ஒடிசா, அசாம், பீகாரின் களநிலவரம்
ஒடிசாவில் மக்களவை தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளுக்கும், 28 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மக்களவை தேர்தலில் 26 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 7, 233 மையங்களில் மக்கள் வாக்களித்துவருகின்றனர்.
அசாமில் உள்ள 5 தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது. பாஜக, காங்கிரஸ், உள்ளிட்ட 41 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 9,574 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 9 மணி நிலவரப்படி அஸ்ஸாமில் 10.2 % சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
பீகாரில் 4 தொகுதிகளுக்கு மட்டும் இன்று தேர்தல் நடைபெறுகிறது. காலை 9 மணி நிலவரப்படி பீகாரின் 4 தொகுதிகளில் 5% வாக்குகள் பதிவாகியுள்ளன.
உத்தரப் பிரதேசத்தின் களநிலவரம்
நாட்டில் அதிகபட்சமாக 80 தொகுதிகளை உள்ளடக்கிய பெரிய மாநிலம் உத்தர பிரதேசம். இம்மாநிலத்தில் 8 தொகுதிகளுக்கு மட்டுமே இன்று தேர்தல் நடைபெறுகிறது. பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தனித்தும், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் கூட்டணி அமைத்தும் இந்த தேர்தலை சந்திக்கின்றன. பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக 11, 235 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 9 மணி நிலவரப்படி உத்தரப்பிரதேசத்தில் 13.34% வாக்குகள் பதிவாகியுள்ளன.
மற்ற மாநிலங்களின் களநிலவரம்
மகாராஷ்டிராவில் 7 தொகுதிகளில் நடைபெறும் தேர்தலில் 122 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பாஜக சார்பில் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்காரி, ஹன்ஸ்ராஜ் அகிர், காங்கிரஸ் கட்சி சார்பில் சுரேஷ் நாராயண், நானா பட்டோல் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இதில் போட்டியிடுகிறார்கள். 2014 தேர்தலை காட்டிலும் இந்த தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று கூறியுள்ளார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள 5 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 52 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதற்காக 11,235 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் இடையே நேரிடையாக போட்டி நிலவுகிறது.
மேற்குவங்க மாநிலத்தில் 2 தொகுதிகளுக்கு மட்டுமே இன்று தேர்தல் நடைபெறுகிறது. அருணாசலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், மேகாலயா மாநிலங்களிலும் தலா 2 தொகுதிளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.
அதேபோல, யூனியன் பிரதேசங்களான அந்தமான் நிகோபர் தீவுகளில் உள்ள ஒரு தொகுதிக்கும், லட்சதீவில் உள்ள ஒரு தொகுதிக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது. காலை 9 மணி நிலவரப்படி, அந்தமான் மற்றும் நிகோபாரில் 5.83% வாக்குப்பதிவும், லட்சத்தீவில் 9.83% வாக்குப்பதிவும் பதிவாகியுள்ளன.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த பகுதிகளில் அசம்பாவிதங்களை தவிர்க்க 80 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆளில்லா விமானங்கள் மூலமும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நக்சல்கள் தாக்குதல் நடத்திய தாண்டேவாடா பகுதியில் உள்ள கிராம மக்கள் இன்று ஆர்வமுடன் வாக்களித்துவருகின்றனர்.
ஏழு கட்டத் தேர்தல்கள் முடிந்த பிறகு தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் மே 23ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.